சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Oct 2014

108 சேவையின் மகத்தான சாதனை!


மருத்துவமனை வரை இலவசப் பயணம், கனிவான கவனிப்பு, மருத்துவ உதவி... என கர்ப்பிணிப் பெண்களுக்கு உன்னத சேவை அளிக்கிறது 108 ஆம்புலன்ஸ். 108 அழைத்தால் போதும், அதிவிரைவில் வீடு தேடி வந்து நிற்கும் ஆம்புலன்ஸ்.

நிறைமாத  கர்ப்பிணிப் பெண் ஆம்புலன்ஸில் வந்தால், அவருக்குக் கிடைக்கக்கூடிய வசதிகள் என்னென்ன என்பது பற்றி, ஆம்புலன்ஸில் பயணிக்கும் மருத்துவ உதவியாளர்களுக்குப் பயிற்சி அளித்துவரும் பயிற்சியாளர் ஹெப்சி பியூலா, விளக்கினார்.


108 ஆம்புலன்ஸில் பயனாளிகளுக்குப் பயணச் செலவு இல்லை. பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்குப் போனாலும் சரி, சீரியஸான சூழலில் வேறு பெரிய மருத்துவமனைகளுக்குப் போனாலும் சரி... முழுக்க இலவசம்தான். வழியில் திடீரென பிரசவம் ஆகும் நிலை வந்தாலும், பயிற்சிபெற்ற மருத்துவ உதவியாளர்கள் ஆம்புலன்ஸில் இருப்பாங்க. வரும் வழியில் தாய்க்கு ஏதேனும்  அவசர நிலைன்னா, 108ன் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, அங்கே இருக்கும் டாக்டரிடம், தாயின் நிலைமையைச் சொல்லி, மருத்துவரின் வழிகாட்டுதலோடு முதல் உதவியும் சிகிச்சையையும் உடனடியா தருவாங்க.
முதல் பிரசவம்னா, ரிஸ்க் ஜாஸ்தி. அந்தப் பெண்களுக்கு பயமும் பீதியும் ஏற்படாமப் பார்த்துக்கணும். வலி ஆரம்பிச்ச 12 மணி நேரம் கழிச்சுக்கூட பிரசவம் ஆகலாம். அதைச் சரியாக மதிப்பிட்டு, சிகிச்சை கொடுக்க ஆம்புலன்ஸில் அவசரகால உதவியாளர் எப்போதும் தயாரா இருப்பார். பிரசவத்துக்கு ஆம்புலன்ஸை உபயோகிப்பது பெரும்பாலும் புறநகர்ப் பகுதி மக்களும் கிராமத்து மக்களும்தான். அவங்களில் பலர் கருவுற்றது முதல், தொடர்ந்து செக்அப்புக்குப் போயிருக்க மாட்டாங்க. ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவு, என்ன வகை ரத்தம் என்பதுகூட சிலருக்குத் தெரியாது. சிலருக்கு வயத்துல ரெட்டைக் குழந்தைங்க இருக்கும்... இல்லேன்னா, கொடி சுத்தி இருக்கும்.

இதை எல்லாம் ஓரளவுக்கு ஆம்புலன்ஸில் வர்றப்பவே, ஆராய்ந்து முடிவு பண்ணிடுவாங்க.தாய்க்குப் பிரசவ வலி இருந்தால், முதல் வலி எப்போ வந்தது, எவ்வளவு நேரம் வலிச்சது, விட்டு விட்டு வலியா, தொடர்ந்து வலியா, எத்தனை மணிக்கு ஒரு தடவை வலி வருதுன்னு நிறைய விஷயங்களைக் கேட்பாங்க. ஏற்கெனவே ஸ்கேன் செய்த ரிப்போர்ட் இருந்தால் வாங்கிப் பார்த்துக்குவாங்க. பனிக்குடம் உடைஞ்சிருந்தா, வெளிய வர்ற தண்ணியோட நிறத்தைக் கேட்டுத் தெரிஞ்சுக்குவாங்க. ஏன்னா, குழந்தை உள்ளேயே மலம் கழிச்சிருந்தா, பனிக்குடத் தண்ணீரின் நிறம் மாறிடும்.



அந்த  நிலையில்,  சிலருக்கு குறைப்பிரசவம் ஆகும் வாய்ப்பும் இருக்கு. அந்த மாதிரிச் சமயத்துல, குழந்தைக்கும் நிறைய கவனிப்பு தேவைப்படும். குழந்தையை உடனடியா கதகதப்பான சூழலில் வைக்கணும். இதுக்காகவே பிரத்யேகமா, வெப்பத்தைத் தர்ற ஹாலோஜென் விளக்குகள் ஆம்புலன்ஸில் இருக்கு. பத்திரமா மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்துடுவாங்க. இதைவிட முக்கியமானது, அந்தத் தாய்க்கு, மனரீதியான தைரியமும் ஆறுதலும் கொடுக்கறதுதான்.குழந்தை பிறந்ததும் அதன் தொப்புள்கொடியை நறுக்கி, 'க்ளிப்போடணும். இல்லைனா, திறந்த நிலையில் இருக்கிற ரத்தநாளங்கள் வழியாக உடனே நோய்த்தொற்று வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறக்கும்பட்சத்தில், பிரசவத்துக்கான  ஸ்டெரிலைஸ்டு, டிஸ்போஸபிள் டெலிவரி கிட்இருக்கு. இதனால பாதி வழியில் பிரசவம் ஆனாலும் பயம் இல்லை.

ஒருவேளை ஆம்புலன்ஸிலேயே பிரசவம் ஆகும்பட்சத்தில், தாயின் ரத்த அழுத்தம் அதிகமாகலாம். அதற்கான  மக்னீசியம் சல்பேட்’, பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையைச் சுருங்கவைக்கிறதுக்கு உதவும் ஆக்ஸிடாக்ஸின் மாதிரியான மருந்துகள்னு அவசரகால மேலாண்மைக்கான மருந்துகளும் கைவசம் இருக்கும்.

ஆம்புலன்ஸில் கர்ப்பிணிகள் வர்றப்போ, சரியான பொசிஷன் மெயின்டெயின் பண்ணனும். கர்ப்பிணிகள் இடது பக்கமாகத்தான் ஒருக்களிச்சுப் படுக்கணும். சரியான பொசிஷன்ல படுத்துக்கிட்டு வர்றப்பவே, பிரசவ வலி வந்துட்டாக்கூட, சுலபமாக அதுக்கான பொசிஷனுக்கு மாத்திக்கலாம்.



ஏற்கெனவே ரணஜன்னி வந்தவங்க, முதல் பிரசவம் சிக்கலானவங்க, அபார்ஷன் ஆனவங்க... இதுமாதிரி சிக்கல்கள் இருந்தா, அவங்க கண்டிப்பா பிரசவ வலி வந்ததும், ஆம்புலன்ஸைத்தான் கூப்பிடணும். மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களும், ஆம்புலன்ஸில் போறதுதான் பாதுகாப்பு. ஆம்புலன்ஸில் எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், குழந்தைக்கான ஆக்சிஜன், .வி. திரவம் போன்றவை தயாராக இருப்பதால், பாதுகாப்பாகப் பயணம் செய்யலாம். மருத்துவமனைக்குப் போற வழியில் எந்தவிதமான பிரச்னை என்றாலும், அதைக் கையாளக்கூடிய திறனும் குழுவும் ஆம்புலன்ஸில் இருக்கிறதால, பிரசவ பயணத்துக்கு ஆம்புலன்ஸ் அவசியம்!

உதிரப் போக்கைத் தடுக்கும் கவச உடை!

நான் நியூமாட்டிக் ஆன்டி ஷாக் கார்மென்ட் (Non pneumatic anti shock garment): தாய்க்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும் சமயங்களில், அதைத் தடுக்க, விசேஷமாகத் தயாரிக்கப்பட்டது இந்த சிறப்பு உடை. பிரசவித்ததும் கர்ப்பப்பை தானாகவே சுருங்கவில்லை எனில், அதிகமான ரத்தம் வெளியேறி முதலில் இதயத்துக்குப் போகும் ரத்தம் தடைப்படும். இதனால் இதயம் செயலிழக்கும். இதயம் `பம்ப்செய்யாததால், மூளைக்குப் போகும் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் தடைப்பட்டு மூளைச்சாவு ஏற்படும்இந்த விசேஷ உடையின் அமைப்பால், ரத்தம் வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. மீண்டும் உடலுக்குள்ளேயே செல்லும் ரத்தம், இதயத்துக்கும் மூளைக்கும் போவதால், மூளைச்சாவு அபாயம் தவிர்க்கப்படுகிறது. ஆனால், மருத்துவமனை செல்லும் வரையிலான அவசரநிலை பாதுகாப்புதான் இது. உரிய மருந்து கிடைக்கும் வரையிலான சிறந்த தடுப்புமுறை. இது ஒரு இடைக்காலத் தீர்வுதான். மிக விலை உயர்ந்த, இந்த உடை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பெரிய மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே இருக்கும் இந்த உடை, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஆம்புலன்ஸில் உபயோகிக்கப்படுகிறது.


ஆம்புலன்ஸில் பிறந்த 12000 மழலைகள்!
108 அவசரகால மேலாண்மை - ஜி.வி.கே.-.எம்.ஆர். நிறுவனத்தின் விழிப்பு உணர்வு மேலாளர் பிரபுதாஸ்:

``இப்போது கிராமப்புறங்களில்கூட பிரசவத்துக்கு 108-ஐக் கூப்பிடத் தொடங்கியிருக்காங்க. 108 ஆம்புலன்ஸ் வசதி தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் இருக்கிறது. 24 மணி நேரமும் கிடைக்கும். இப்போது, மலையோரப் பகுதியில் இருக்கும் மக்களுக்காகஜீப் ஆம்புலன்ஸ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு. அதிலும் எல்லா வசதிகளும் இருக்கும். பிரசவத்துக்கு ஆம்புலன்ஸில் போக ஆரம்பித்த பிறகு, குழந்தைப் பேற்றின்போது பெண்களின் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது.  108 சேவை தொடங்கப்பட்டதில் இருந்து, பிரசவத்துக்காக இந்த சேவையைப் பயன்படுத்தியவர்கள் 8,39,748 பேர். இதுவரை 12,000 குழந்தைகள் ஆம்புலன்ஸில் பிறந்திருக்கின்றன



No comments:

Post a Comment