'ஆட்கள் தேவை என்கிற வாசகம் எழுதப்பட்டிருக்கும் அட்டைகள் திரும்பிய பக்கமெல்லாம் தென்படும் ஊர் திருப்பூர்' என்று பெருமையோடு சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! இன்றைய தேதியில், ஆண்டுக்கு 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது 'டாலர் சிட்டி’ என்றழைக்கப்படும் திருப்பூர். இதன் மூலம் மறைமுகமாக, நேரடியாக என 6 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இதில் பெண் தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் என்பது, ஆச்சர்ய உண்மை!
கடந்த 50 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்துவரும் பெண் தொழிலாளி, அன்னபூரணி. ''படிப்பு, முன்அனுபவம், வயது நிர்ணயமெல்லாம் மற்ற வேலைகளுக்குத் தேவைப்படலாம். ஆனா, திருப்பூருக்கு அது இல்லீங்க. எந்த வேலையும் தெரியாம ஊர்ல இருந்து பஸ் ஏறி திருப்பூர் வந்து இறங்கினாலும், கண்டிப்பா வேலை கிடைக்கும். இப்படி வந்தவங்கதான் பலரும். புதுசா ரெடியாகற பனியன்கள்ல அழுக்கு, ஓட்டை, கழுத்து லேபிள் எல்லாம் செக் பண்றது, இஸ்திரி போட்டு வர்ற பனியன்களை பாலீதீன் பைகளில் போட்டு அடுக்குறது, பேக்கிங் வேலைனு தினம் 500 ரூபாய் சம்பாதிக்கலாம். 15 வயசு பொண்ணுங்க தொடங்கி, 70 வயசு பெண்மணிங்க வரை வரலாம். கண் பார்வை மட்டும் நல்லா தெரிஞ்சா போதும்!'' என்கிறார் அன்னபூரணி.
இங்கே பணியாற்றும் பெண்களில் 90 சதவிகிதம் பேர் வெளியூர், 10 சதவிகிதம் பேர் மட்டும் உள்ளூர்க்காரர்கள். மதுரை, தேனி, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி என்று பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமாகப் பணிபுரிகிறார்கள்.
திருச்சியைச் சேர்ந்த விஜயா, ''இங்க வந்து 20 வருஷம் ஆச்சு. ஊர்ல வருமானம் இல்ல. திருப்பூர் வந்து கால் வெச்ச நாள் முதல் எங்க கஷ்டம் பறந்து போச்சுங்க. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்லா படிக்க வெச்சு, சிறப்பா கல்யாணமும் பண்ணி கொடுத்திருக்கேன். இடையில லீவு கிடைக்கும்போதெல்லாம் ஊருக்கு போயி சொந்தபந்தங்களைப் பார்த்து முடிஞ்ச உதவிகளையும் செய்றேன். இது உழைக்கிறவங்களுக்கான ஊரு. அது கண்டிப்பா நம்மள உயர்த்தும்!'' என்கிறார் நன்றிப் பெருக்கோடு!
இளம்தம்பதி சாரங்கபாணி - ஜெயலட்சுமிக்கு ஒரே கம்பெனியில் இஸ்திரி மற்றும் பேக்கிங் செக்ஷனில் வேலை. ''வீட்டுக்காரர் மதுரையில பேப்பர் ஏஜென்ட். தொழில்ல சிக்கல் வரவே, திருப்பூருக்கு பஸ் ஏறினோம். 10 வருஷமாச்சு... இப்ப குழந்தைகளை நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம், வண்டி வாங்கிட்டோம், வீடும் வாங்கப் போறோம்!'' என்று ஜெயலட்சுமி நெகிழ...
''இது, வந்தவங்களை வாழவைக்கும் ஊரு மட்டுமில்ல, விழுந்தவங்களை எழ வைக்கிற ஊரும்'' என்று அழுத்தம் கொடுத்தார் சாரங்கபாணி.
'சிவா நிட்டிங் மில்ஸ்’ நிறுவனத்தின் மேலாளர் கிரியிடம் பேச்சுக் கொடுத்தபோது, ''ஆண்களவிட, பெண் டெய்லருங்க மாங்கு மாங்குனு வேலை பார்க்கிறதால, அதிக சம்பளம் வாங்குறது இங்க சகஜம். டெய்லரா வேலை பார்க்கிற கணவன்-மனைவியோட வார வருமானம் 12,000 ரூபாய்க்கும் மேல. கல்யாணம் ஆகாத பெண்கள் இங்க வந்து கருத்தா உழைச்சு, பணம் சேர்த்து, சொந்த செலவுல கல்யாணம் செய்து வாழுற கதைகள் இங்க ஏராளம். எந்த வயசுல எத்தனை பெண்கள் வேலை தேடி வந்தாலும் வாழ்வு கொடுக்கிற ஊர் திருப்பூர்!'' என்கிறார் உற்சாகமாக.
படித்திருந்தால்தான் சாஃப்ட்வேர் கம்பெனி வேலை. ஆனால், படிக்காவிட்டாலும் பெண்களுக்கு சுயசம்பாத்தியத்தை தேடிக்கொடுக்கிறது இந்த 'நிட்வேர்’ கம்பெனிகள்!
No comments:
Post a Comment