சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jan 2016

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா... சொல்லுங்கள்?

'செம்பரம்பாக்கம் தண்ணீரை தாறுமாறாகத் திறந்துவிட்டதுதான், பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் மூழ்கிபோகக் காரணம். இது அரசாங்கத்தின் தோல்வி' என்று சொல்லி தி.மு.க சார்பில் ஜனவரி 5-ம் தேதி மாபெரும் போராட்டத்துக்கு தீவிரமாகிவிட்டார் தமிழினத் தலைவர் கருணாநிதி.
இவரை முந்திக்கொண்டு கறுப்பு எம்.ஜி.ஆர். போராட்டங்களை நடத்தி முடித்தேவிட்டார். இதேபோல... சிவப்பு காந்தி, பச்சை மண்டேலா, மஞ்சள் சே குவேரா, காவி படேல் என்று மற்ற மற்ற கட்சி தலைகளும் தங்களின் சக்திக்கேற்ப காரணத்தை உருவாக்கிக் கொண்டு, களத்தில் வீராவேசம் காட்டி வருகிறார்கள்.

ஆளுங்கட்சிக்கு வேறு வழியே இல்லை... இவர்களுக்கு எதிராக கண்டனக் குரல்களை மட்டும் எழுப்பிக் கொண்டிருக்கிறது. உண்மைதான்... இந்த மாபெரும் வெள்ளத்துக்கு அரசாங்கத்தின் தோல்வி மிக முக்கியமான காரணம்! நிவாரணங்களில் குளறுபடிகள் நடப்பதற்கு காரணமும்... ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகமே!
ஆனால், இதிலெல்லாம் எதிர்க்கட்சிகள், கூட்டணிக்கட்சிகள், ஒரு தொகுதிக்காக ஒட்டிக் கொண்டிருக்கும் இருக்கும் கட்சிகள், ஏதாவது ஒரு காண்ட்ராக்ட் கிடைக்காதா என்று 'அம்மா'வின் கடைக்கண் பார்வைக்காக தவம் கிடக்கும் கட்சிகளுக்கெல்லாம் துளிகூட சம்பந்தமே இல்லையா?

உங்கள் மனசாட்சியைத் தொட்டு, பாலில் சத்தியம் செய்து, உங்கள் அம்மாவின் தலையில் கை வைத்து, துண்டை போட்டுத் தாண்டி, விதை நெல்லில் கை வைத்து... இப்படி பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழச்சாதி இங்கே கடைபிடித்து வரும் சத்திய பிரமாணங்களில் எதையாவது ஒன்றை எடுத்துக் கொண்டு... 'எங்களுக்கு துளிகூட இதில் பொறுப்பில்லை. எங்கள் கட்சியிலிருக்கும் ஒரு துரும்புகூட இந்த கொடும் வெள்ள பாதிப்புக்கு காரணமில்லை' என்று உங்களால் சொல்ல முடியுமா?
ஆனால், நான் மேலே சொன்ன அத்தனை முறைகளிலும் வேண்டுமானாலும் சத்தியம் செய்துக் கூறத் தயார்... இந்த ஒட்டுமொத்த வெள்ள சேதத்துக்குக் காரணமே... அத்தனை அரசியல் கட்சிகளின் தலைவர்களும்... அவர்களின் அடிப்பொடிகளும்தான்.

இந்த உண்மையை மறைத்துவிட்டு... 'முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை... முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை' என்று மட்டுமே கூவிக் கொண்டிருக்கிறீர்களே!
'அட மண்டூகங்களா... உங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எல்லாம் என் வேகத்துக்கு முன் தூசுடா...' என்று அனைவரின் முகத்திலும் காரித் துப்பியிருக்கிறது இயற்கை.
வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி என்று அடையாற்றில் பொங்கிப் பாய்ந்த தண்ணீர், அதன் கரையிலிருந்து பல கிலோ மீட்டர் தாண்டியிருக்கும் கோடம்பாக்கத்தைக் கடந்து அரும்பாக்கம் வரை பாய்ந்திருக்கிறது. அந்தப் பக்கம் கூவத்திலிருந்து பாய்ந்த நீர், இந்தப் பக்கம் மாம்பலம் வரை பாய்ந்திருக்கிறது. போதக்குறைக்கு வானத்திலிருந்து தொடர் மழைப்பொழிவு மிச்ச சொச்ச பகுதிகளை வெள்ளக் காடாக்கிவிட்டது.

இத்ததைய சூழ்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற பெயரில் எதைச் சாதித்திருப்பீர்கள்? சென்னையையே பெயர்த்துக் கொண்டுபோய் ஒரு வாரத்துக்கு திருச்சியில் வைத்திருப்பீர்களா? அல்ல செவ்வாய் கிரகத்துக்குத்தான் கொண்டு போயீருப்பீர்களா?

புளுகுமூட்டை சிப்பாய்களே... சென்னை மட்டுமல்ல... செங்கல்பட்டு தொடங்கி கிட்டத்தட்ட பொன்னேரி வரைக்கும் ஒட்டுமொத்தமாக மிதந்தபோது, உங்களால் எதைச் சாதித்திருக்க முடியும். அடையாறு, கூவம் என்று கரையோரத்தில் வசிக்கும் மக்களையெல்லாம் அக்கம் பக்க பள்ளிக்கூடங்களில் தங்க வைத்திருப்பீர்கள். ஆனால், அந்தப் பள்ளிக்கூடங்களும் மூழ்கிப்போகும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதுதானே உண்மை.

கரையோரங்களில் இருக்கும் சில லட்சம் பேர்களை வேண்டுமானால் அப்புறப்படுத்தியிருக்க முடியும். ஆனால், கே.கே.நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, மாம்பலம், விருகம்பாக்கம், கோட்டூர்புரம், மயிலாப்பூர், திருவொற்றியூர், அரும்பாக்கம், அமிஞ்சிகரை, சாலிகிராமம், அசோக் நகர், சைதாப்பேட்டை, தரமணி என்று கிட்டத்தட்ட சென்னை முழுக்கவே வெள்ளம் விழுங்கிய பகுதிகளில் உள்ள பல லட்சம் பேரை உங்களால் காப்பாற்றியிருக்க முடியுமா?

இதற்கெல்லாம் ஒரே தீர்வு... நீர்நிலைகளைக் காப்பாற்றுவதும், நீர்வழிகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுப்பதும்தான். இதுதான் உண்மையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்க முடியுமே தவிர, உங்களுடைய வேறு எந்தவொரு அசைவும் முன்னெச்சரிக்கை என்கிற லிஸ்ட்டிலேயே வராது.

இந்த பெருங்கொடுமைக்குக் காரணம்... இப்போது ஆளுங்கட்சி மட்டுமல்ல, நேற்று ஆட்சி செய்த தி.மு.க., அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்ட காங்கிரஸ் மட்டுமல்ல... இந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்காக மாறி மாறி காவடி தூக்கிய... தூக்கிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்கள், தே.மு.தி.க., பா.ம.க, ம.தி.மு.க., த.மா.க, விடுதலை சிறுத்தைகள், பி.ஜே.பி., த.மு.மு.க இன்னும் இருக்கும் இ.கூ.க, தா.கா.க போ.க.க.கா என்று தமிழில் இருக்கும் அத்தனை எழுத்துக்களில் கட்சி நடத்தும் அனைவரும்தான்.

கல்வி வள்ளல்கள் என்கிற பெயரில் நீர் நிலைகளை ஆக்கிரமித்திருப்பவர்களும் உங்களின் கைத்தடிகள்தானே... ஏன், ஒரு கட்சியையே தலைவராக இருந்து நடத்திக் கொண்டிருப்பவரே தன்னுடைய கல்விக்கூடத்தை ஏரிகளுக்குள்தானே கட்டி வைத்திருக்கிறார்! அதன்பிறகும் 'போராட்டம்.. போராட்டம்' என்று யாரை ஏமாற்றுகிறீர்கள்?

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், ராமதாஸ் என்று உங்கள் அத்தனை பேரின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கினாலும்கூட நீங்களோ... உங்களை அண்டிப்பிழைக்கும் ஜீவன்களோ... இந்த உண்மை அறியாமல் உங்களையெல்லாம் தலைவர்கள்... ரட்சகர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகளே திருந்துவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

உங்களில் பலருக்கும்... தமிழினத் தலைவர், புரட்சித் தலைவி, தமிழினப் போராளி, புரட்சிக் கலைஞர் என்று இருக்கும் பட்டங்களைவிட... 'மணல் கொள்ளைக் கூட்டத்தின் பாஸ்...', 'நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் அதிரடி கும்பலின் தலைவர்' என்பது போன்ற பட்டங்களைக் கொடுப்பதுதான் நூறு சதவிகிதம் பொருத்தமாக இருக்கும். ஆம்... மணல் கொள்ளையடிக்கும் மாபாதகர்களும்.... நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் நெஞ்சே இல்லாத நீசர்களும் உங்கள் அத்தனை கட்சிகளிலும்தானே நீக்கமற நிறைந்திருக்கிறார்களே.

நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்... உங்கள் ஒவ்வொருவரின் கட்சிக்காரர்களும் பிறக்கும்போதே கோடீஸ்வரன்களா? இல்லையே! ஆனால், இன்று இந்தக் கட்சிகளின் சார்பில் கவுன்சிலர்களாக இருப்பவர்கள்கூட மாடமாளிகை கட்டி வைத்திருக்கிறார்கள். வீட்டைச் சுற்றி பல ரக கார்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் எங்கிருந்து வந்தது பணம்... எல்லாமே மணல் சுரண்டலில் மளமளவென உயர்ந்தது... ஏரியை பிளாட் போட்டதில் எகிடுதகிடாக எகிறியதுதானே.

இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, 'வெள்ளம் பற்றி விவாதிக்க... வெள்ள நிவாரணத்தை ஒருங்கிணைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆளுங்கட்சியை விட்டுத் தள்ளுங்கள். மற்ற அனைவருக்கும் மக்களின் மீதுதானே அக்கறை. இதற்காக நீங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏன் கூட்டக்கூடாது. ஆனால், அப்படி ஒரு கூட்டத்தை நீங்கள் கூட்டி, ஒருமித்த குரலில் தீர்மானங்களை முன் வையுங்கள்... அதுவும் உருப்படியான ஒரே ஒரு தீர்மானத்தை மட்டும் முன் வையுங்களேன்.

இப்போது அரசாங்கம் தரும் நிவாரணம்... நீங்கள் எல்லாம் உங்கள் கட்சிகளின் சார்பில் அள்ளி வழங்கும் நிவாரணம்... இது எல்லாமே, அந்தவேளை சோற்றுக்குத்தான். அதையெல்லாம் நீங்கள் தராவிட்டால்கூட, வெள்ளத்தில் பாதித்த பெரும்பாலான மக்கள் சாமளித்துவிடுவார்கள்... சமாளித்துவிட்டார்கள். ஒரு பத்துசதவிகித மக்களுக்குத்தான் அந்த நேரத்தில் எல்லாமே தேவைப்பட்டது. ஆனால், அந்த பத்து சதவிகித்தையும் சேர்த்து ஒட்டுமொத்த மக்களுக்கும் தேவை நிரந்தர நிவாரணம். நீங்கள் கூட்டப்போகும் அனைத்துக் கட்சிக்கூட்டம். அந்த நிரந்தர நிவாரணம் எனும் ஒரேயொரு விஷயத்தைத் தருவதாக இருக்க வேண்டும்.

ஆம், உங்கள் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கும் மணல் திருடர்களையும், ஆக்கிரமிப்பு அரக்கர்களையும் உடனடியாக கட்டம்கட்டி கட்சியைவிட்டு வெளியேற்ற வேண்டும். கூடவே, அவர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் நீர்நிலைகள், நீர்வழிகள், பொதுஇடங்கள் அனைத்தையும் அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கச் செய்ய வேண்டும். இதை மட்டுமே ஒரே ஒரு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

செய்வீர்களா... இதைச் செய்வீர்களா? உங்களில் ஒருவர்கூட இதைச் செய்ய மாட்டீர்கள். அப்படிச் செய்துவிட்டால், நாளைக்கு உங்கள் கட்சியே இல்லாமல் போய்விடும் என்பது உங்களுக்குத்தானே தெரியும்.

தளபதி ஸ்டாலின் அவர்களே... நீங்கள் போகும் இடங்களில் எல்லாம் நிவாரணப் பொருட்களை அள்ளி அள்ளி வழங்கினீர்கள்... அதை வாங்குவதற்காக வசூல் செய்யப்பட்ட தொகையில் உங்கள் கட்சியைச் சேர்ந்த மணல் மாஃபியாக்கள் மற்றும் நீர்நிலைகளை பட்டாபோட்டு விற்ற கொள்ளைக்காரர்களிடம் இருந்து வந்தது எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியவே தெரியாது... அப்படித்தானே?!

கறுப்பு எம்.ஜி.ஆரே.... கண்ணீர்விட்டு, கட்டிப்பிடித்து போட்டோவுக்குப் போஸ் கொடுத்தீர்களே... நிவாரணப் பைகளுடன். அந்தப் பைகள் அனைத்துமே 'மணல் கொள்ளையர்கள், ஆக்கிரமிப்பு அரக்கர்கள்' பங்கு துளிகூட இல்லாத பைகள் என்று சொல்ல முடியாதுதானே!

பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை என்று முழங்கும் அண்ணன் வைகோ அவர்களே... ஊரை அடித்து உலையில் போட்டுப் பிழைக்கும் ஆட்கள் உங்கள் கட்சியிலும் இருக்கிறார்கள் என்பதை உங்களால் நம்பவே முடியாதுதானே?!

சீறும் சிறுத்தை திருமா அவர்களே... ஊரை வளைத்துப் போடும் கூட்டத்தில் உங்களின் சிறுத்தைத் தம்பிகளும் இல்லவே இல்லைதானே?!

பாட்டாளி சொந்தங்களுக்காக துடிக்கும் மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்களே... மணல் கொள்ளை, நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் உங்களின் பாட்டாளி சொந்தங்களும் பங்காளிகள் என்று சொன்னால், நம்பவே முடியாதுதானே?!

ஆனால்... கழகங்கள், கதர், காவி என்று எல்லாக் கட்சிகளிலும் மணல் கொள்ளையர்களும், பொதுச் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்களும் கூட்டணிபோட்டுக் கொண்டு கும்மாளம் அடிப்பதுதான் உண்மை. அத்தகையோர் இப்படி மணலைச் சுரண்டவும்... நீர்நிலைகளை வளைக்கவும் அனுமதிக்கப்பட்டிருப்பதால்தான் உங்கள் ஒவ்வொருவருடைய கட்சிகள் எப்போதும் உயிர்ப்போடு இருக்கின்றன.

ஒரு கவுன்சிலர் என்பவர், சொந்தக் காசை போட்டு தெருக்கூட்டும் வேலைகளைச் செய்வார். ஏதாவது கூட்டம் என்றால், தேய்ந்துபோன சைக்கிளை உதைத்துக் கொண்டு வந்து சேர்வார். இதுதான் ஒரு காலகட்டம் வரை தமிழகம் முழுக்கவே நடைமுறையில் இருந்தது. ஆனால், நகர்ப்புறமயமாக்கல் மற்றும் தொழிற்புறமயமாக்கல் என்று தமிழகம் வளர ஆரம்பித்ததும் மாநகரங்கள் மற்றும் பசையுள்ள நகரங்கள் அதையொட்டியுள்ள பகுதிகள் செல்வம் கொழிக்கும் பூமிகளாக மாறிவிட்டன.

ஒரு காலத்தில் ஓட்டை சைக்கிளுக்கே வழியில்லாமல் இருந்த கவுன்சிலர்களுக்கே... இரண்டு மூன்று கார்கள், பல பங்களாக்கள் என்று சொத்துக்கள் குவிய ஆரம்பித்துவிட்டன. நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களை கண்டவர்களுக்கும் பட்டா போட்டுக் கொடுத்துக் கொடுத்து சொத்துக்களை குவித்துக் கொண்டார்கள். கவுன்சிலர்களுக்கே இப்படி என்றால், ஊராட்சித் தலைவர், ஒன்றிய தலைவர், எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்று மற்றவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

(பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பதுபோல... கிராமத்திலிருக்கும் வெட்டித்தலையாரி எனும் கடைநிலை ஊழியர் தொடங்கி, கோட்டையில் கோலோச்சும் ஐ.ஏ.எஸ் செயலாளர்கள் வரை பங்குப் பணம் பாய்ந்து, அவர்களும் மாடமாளிகைகளில் கொழிப்பது தனிக்கதை).

இப்படி பொதுச் சொத்தைக் கொள்ளையடித்து சொத்து சேர்த்த கயவர்கள் உங்கள் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பதவிகளை அள்ளிக் கொடுத்து நீங்கள் எல்லாம் பாராட்ட, பாராட்டத்தான் உங்கள் பிழைப்பு ஓடுகிறது. உங்களுக்கு போஸ்டர் அடிக்கவும், ஃபிளக்ஸ் வைக்கவும்... ஏன், தற்போது இழவு வீட்டுக்கு நிவாரணம் கொடுக்கவும்கூட இந்தக் கயவர்களின் கரன்ஸிகள்தான் உங்களுக்கு கை கொடுக்கின்றன.

புறநகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ அவர். இந்த வெள்ள பாதிப்பைக் கண்டு பதைபதைத்துப் போய் புறநகர் பகுதி மக்களுக்கு ஓடோடிப்போய் உதவிகளைச் செய்தார். அந்த மக்கள் குடியிருப்பது... ஏரிப்பகுதி. அதை ரியல்எஸ்டேட் போட்டு விற்பனை செய்தவரே... அந்த முன்னாள்தான்.

இதுபோன்ற உத்தம புத்திரன்கள்தான் இன்றைய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று அத்தனைக் கட்சிகளும் கரைவேட்டி சரசரக்க ஊருக்குள் நடைபோட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

'அடேய்... போதும் நிறுத்துடா... நீ என்னா சொன்னாலும் நாங்க செய்யப்போறதில்ல. இதுதான் எங்க பொழைப்புனு தெரிஞ்சிருந்தும் இதையெல்லாம் நீட்டி முழக்கி எழுதி என்ன ஆகப்போகுது?' என்கிறீர்களா...

இதையெல்லாம் எழுதுவது என் பொழைப்பு... வேறென்ன சொல்ல?


No comments:

Post a Comment