சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Jan 2016

நாடு நாடாக போய் வதம் செய்தவர்கள் வதம் செய்யப்படுகிறார்கள்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் உள்நாட்டிலேயே உதை வாங்கி¢க் கொண்டிருக்க, தொடர்ந்து 9 ஆண்டுகளாக அனைத்து அணிகளையும் அந்தந்த நாடுகளின் சொந்த மண்ணிலேயே சென்று வதம் செய்வது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வழக்கம்.  அப்படிப்பட்ட அணிக்கு கடந்த ஆண்டு  மிகப்பெரிய பின்னடைவாய் அமைந்துவிட்டது. ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் தென்ஆப்ரிக்க அணிக்கு கடந்த ஆண்டில் செம அடி£தான்.  இந்த ஆண்டு, தென்ஆப்ரிக்க அணி விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில்  ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. நான்கு போட்டுகளில் அந்த அணி படுதோல்வி கண்டுள்ளது.
 

ஆண்டின் தொடக்கத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றதோடு சரி, அதன்பிறகு அவர்களுக்கு நேரமே சரியில்லை. வங்கதேசத்துடனான இரண்டு போட்டிகளும் மழையால் ரத்தானது. பின்னர் இந்தியா வந்த தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரை வென்றாலும் கோலி தலைமையிலான இந்திய அணியிடம் பேரடி வாங்கியது. இந்திய அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என இழந்தது. அந்த ஒரு போட்டியிலும் கூட மழையால் தான் தப்பியது ஆம்லாவின் அணி. இதன்மூலம் கடந்த 9 ஆண்டுகளாக அன்னிய மண்னில் டெஸ்ட் தொடரை இழக்காமலிருந்த அவர்களது சாதனைப் பயணமும் முடிவுக்கு வந்தது. தற்போது இங்கிலாந்துடனான முதல் டெஸ்டில் 241 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ஆண்டிறுதியையும் தோல்வியுடன்தான் ஃபினிஷ் செய்துள்ளது. 
சொதப்பும் பேட்டிங்
மொத்ததில் 13 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு முறை மட்டுமே 250 ரன்களை தென்ஆப்ரிக்க அணி கடந்துள்ளது.  வெஸ்ட் இண்டீசுடனான அந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 421 ரன்கள் எடுத்த அணி அதன்பிறகான 12 இன்னிங்ஸ்களில் ஒரு முறை கூட 250ஐ தாண்டவில்லை. ஒருநாள் போட்டிகளில் அசால்டாக 300,350 குவித்து அடாவடி  செய்யும் ஒரு அணி டெஸ்டில் இப்படி சொதப்புவது புரியாத புதிராகத்தான் உள்ளது.  

தனிநபர் பெர்ஃபார்மென்ஸ் என்று பார்த்தால் டிவில்லியர்ஸ் தவிர யாருமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.  டிவில்லியர்ஸ் மற்றும் எல்கர் ஆகியோர் மட்டுமே தலா ஒருமுறை சதமடித்துள்ளனர். டிவில்லியர்ஸ்- பிலான்டர் ஜோடி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 101 ரன் எடுத்தது. மற்றபடி எந்த பார்ட்னர்ஷிப்பும் கூட அந்த அணிக்கு  சிறப்பாக அமையவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கே  அன்று சவால் விட்ட தென்ஆப்ரிக்க அணிக்கு இப்போது வான் சில், எல்கர் தொடக்க ஜோடி வலுவான துவக்கத்தை ஏற்படுத்தித் தர திணறுகிறது.   

தொடக்கம் தான் இப்படியென்றால் நடுவரிசையோ படுமோசம். கடந்த ஆண்டுகளில் கொடிகட்டிப் பறந்த ஆம்லாவும், டுப்ளெசியும் ரன் எடுக்க சிரமப்படுகின்றனர். குறிப்பாக டுப்ளெசிஸ் 11 இன்னிங்சில் 187 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.  ஒரே ஒரு முறை மட்டுமே அவரால் அரை சதம் கடக்க முடிந்தது. 


பவுலிங்கும் வீக் தான்

இதுபோதாதென்று பவுலிங் டிப்பார்ட்மென்டும் புண்பட்டே கிடக்கிறது. ‘ஸ்பீட் கன்’ என்று வருணிக்கப்படும் ஸ்டெயின் மற்றும் மோர்னே மார்கெல் அடிக்கடி காயத்திற்குள்ளாவது  ஃபாஸ்ட் பவுலிங் டிப்பார்ட்மென்டை வீக் ஆக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும்.  ஸ்டெயினின் ஃபார்மும் போகப்போக பின்னடைவைச் சந்தித்தது. ஒருமுறை மட்டுமே அவரால் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. சுழற்பந்து வீச்சில், பீடிட் மட்டுமே அந்த அணியின் ஒரே ஆறுதல். இம்ரான் தாஹிரின் செயல்பாடோ, ‘இவர் டெஸ்ட் போட்டிக்கு சரியானவர் தானா?’ என்ற கேள்வியை எழுப்புகிறது. ரபடா, பிலான்டர் போன்றவர்களும் ஏதோ அணியில் இருக்கிறார்கள் என்ற ரகம்தான்.
தொடர் தோல்வியே சந்தித்தாலும் தரவரிசையில் இன்னும் தென்ஆப்ரிக்க அணிக்குதான் முதலிடம். எந்த நாட்டு கிரிக்கெட் ரசிகரும் தங்கள் தாய்நாட்டு அணிக்கு அடுத்தபடியாக விரும்பும் அணி தென்னாப்பிரிக்கா தான். உலகக் கோப்பையில் அவர்கள் வெளியேறிய போது இந்தியர்கள் பலரும் கூடக் கலங்கினர். டெஸ்ட் வீழ்ச்சியை எழுச்சியாக மாற்ற, அந்த அணி குயின்டன் டி காக், மோரிஸ் போன்ற வீரர்களை அணிக்கு அழைத்துள்ளது. இவர்கள் எந்தளவுக்கு அணிக்கு பயன் தருவார்கள் என்பதும் போகப் போகத்தான் தெரியும்.  

மொத்தத்தில் 2015ஆம் ஆண்டு தென்ஆப்ரிக்க அணியை வதம் செய்து விட்டது!

No comments:

Post a Comment