சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jan 2016

வேலு நாச்சியார் !

இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று... ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை. வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது!
ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி யின் ஒரே செல்ல மகளாகப் பிறந்த வேலு   நாச்சியார், அரண்மனையில் ஆண் வாரிசு இல் லாத குறை இல்லாமல் வீர விளையாட்டு களான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார். போர் பயிற்சிகளுடன் ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 16 வயதானபோது சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். 1772-ம் ஆண்டு நடந்த காளையார்கோயில் போரில் முதுவடுகனாதரையும் வேலு நாச்சியாரின் மகளான கௌரி நாச்சியாரையும் கொன்றனர் வெள்ளையர்கள். கொதித்து எழுந்த வேலுநாச்சி யார், தனது அரசை மீட்க சூளுரைத்தார்.
தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து போராட பல இடங்களுக்குச் சென்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில்... 5,000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார். இதையடுத்து, வேலு நாச்சியாரை நேரில் அழைத்த ஹைதர் அலி, அவரின் உருதுப் புலமையைக் கண்டு வியந்தார். வேலு நாச்சியார் கேட்டவண்ணம் படைகளைக் கொடுத்து அனுப்பினார்.
படைகளைப் பெற்ற வேலு நாச்சியார், வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். தனது படைகளை  தானே முன்னின்று நடத்தினார்.  சேனாபதிகளான மருது சகோதரர் கள்,  உற்ற துணையாக இருந்து படைகளுக்குத்  தலைமை தாங்கினர். குதிரை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை யோடு... திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயிலை கைப்பற்றினார்.
இறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சின்னமருது, பெரியமருது, தலைமை யில் படை திரட்டப்பட்டது. வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.  
கோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்று சிவகங்கையை அடைந்தனர். இறுதி யில் வென்றார் வீரமங்கை! தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது!  இத்தனையையும் அவர் சாதித்தது... தன்னுடைய ஐம்பதாவது வயதில்!
சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார். அவரது சுதந்திரப் போராட்ட தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.
இந்தியக் கடலோரக் காவல் படை, கப்பல்களுக்கு சிறப்புமிக்க பெண்கள் பெயரை வைப்பது வழக்கம். தற்போது ராணி வேலு நாச்சியாரின் பெயரை புதிதாக வரவிருக்கும் இந்திய கடலோர காவல் படை கப்பலுக்கு வைப்பதற்கு பரிசீலித்து வருகிறது பாதுகாப்பு துறை. அந்தக் கப்பலில் பிரத்யேகமாக வைப்பதற்காகவே ஓவியர் மருது வரைந்து அளித்த வேலு நாச்சியாரின் ஓவியம்தான் இக்கட்டுரையை அலங்கரிக்கிறது.
நம் குழந்தைகளுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் வடநாட்டின் ஜான்சி ராணியின் கதைகளையே சொல்லி வளர்த்த நாம், நம் மண்ணில் தோன்றி பெருமை சேர்த்த வேலு நாச்சியாரின் கதையையும் சொல்லி வளர்ப்போம். பட்டுக்கோட்டையார் பாடியது போல், வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைக்காமல், வீரக்கதையை சொல்லி வளர்ப்பது நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும்  தானே!
வீரச் சிதறல்கள் !

1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க, இடம் மாறிச் சென்றார் வேலு நாச்சியார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக்கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது.
காளையார்கோவிலை மீட்க நடந்த போரின்போது வேலுநாச்சியாரை, ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுக்க மறுத்தாள் உடையாள் என்ற பெண். இதனால், வெள்ளையரால் வெட்டப்பட்டாள் அந்தப் பெண். அவளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார் நாச்சியார். அந்த வழிபாடு... வாழையடி வாழையாகத் தொடர்ந்து, கொல்லங்குடி வெட்டுடைய காளியம்மன் கோயிலில் இன்றும் சிறப்பாக நடக்கிறது.
1793ல் பேத்தி மறைந்து போக, நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார், டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.
ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி சட்டம்  போட்டிருந்தது. அதன்படி சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தது ஆங்கிலேய படை. ஆனால், இதை ஏற்க மறுத்தனர் ராணியின் தளபதிகளான மருது சகோதரர்கள். அவர்களே தங்களது இறப்பு வரையிலும் தளபதிகளாக இருந்து, சிவகங்கையை சிறப்பான கட்டமைப்போடு காத்து வந்தனர்.


No comments:

Post a Comment