சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jan 2016

பத்ம ஸ்ரீ விருது : பார்வையை மாற்ற வைத்த 'நாப்கின் '!

ந்தியாவின் பத்ம விருதுகள்,  பரிந்துரையின் அடிப்படையிலும் பிரபலத்தின் அடிப்படையிலுமே வழங்கப்படுகிறது என்பது பரவலான கருத்து. சில சமயங்கள் தெரிந்தோ தெரியாமலோ தக்க மனிதர்களையும் விருதுகள் சென்றடையத்தான் செய்கின்றன.   இந்த ஆண்டு கோவையை சேர்ந்த   முருகானந்தம் என்பவருக்கு  பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
சரி... இந்த முருகானந்தம் அப்படி என்ன இவர் சாதித்து விட்டார்? முருகானந்தம் தேர்வு செய்த பாதைதான் இன்று அவரை விருதுக்குரிய மனிதராக மாற்றியுள்ளது. நாப்கின்களைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்  குறைந்தது 20 ரூபாய் முதல் விற்கின்றன. அதற்காக அதிகளவு விளம்பரங்களும் செய்து அந்த செலவையும் நுகர்வோர் தலையில்தான் கட்டுகின்றன. 

பல ஆயிரம் கோடி சந்தை மதிப்பு கொண்டதாக நாப்கின் வர்த்தகம் இருந்தாலும் இந்தியாவில் 60 சதவீத பெண்கள் நாப்கினை பயன்படுத்துவது இல்லை.  அவர்களை பொறுத்த வரை,  அது குடும்பத்திற்கு மேலும் சுமையை ஏற்றுவது போல.  பழைய துணிகளையே பயன்படுத்துகிறார்கள் என்கிற உண்மையையும் இங்கே உடைக்க வேண்டியது இருக்கிறது. 

முருகானந்தமும் ஏழ்மை  நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். 10ஆம் வகுப்புக்கு மேல் படிக்க  வசதியில்லை.  இந்த உலகில் சாதித்தவர்களில் பல பேர் பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள்தானே. முருகானந்தத்தால் படிக்க முடியாமல் போனாலும் ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற வெறி மட்டும் மனதிற்குள் கனன்று கொண்டேயிருந்தது. அதுவே முருகானந்த்தை வெற்றிக்கரமான மனிதராகவும் மாற்றியுள்ளது.

ஏழை பெண்களை மனிதில் கொண்டுதான், நாப்கினை குறைந்த செலவில் தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முருகானந்தம் ஈடுபட்டார். இதற்காக தனது வாழ்க்கையில் 12 ஆண்டுகள் செலவு செய்தார். இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார். முருகானந்தத்தின் தொழில் நுட்பத்தில் நாப்கின் தயாரிக்கும் முறை பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சவால் விடும் வகையில் இருந்தது. சுத்தத்திலும் சுகாதாரத்திலும் பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகளுக்கு சற்றும் குறையவில்லை.
தனது தொழில்நுட்பத்தை வைத்து பணம் சம்பாதிக்கவும் முருகானந்தம் ஆசைப்படவில்லை.  தனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமை வாங்கவும் அவர்  முயற்சிக்கவில்லை. தனது தயாரிப்பால் ஏழை பெண்கள் பயன்பட வேண்டுமென்பதே அவரது ஒரே இலக்கு. மகளிர் அமைப்புகள், பள்ளிகளில் மூலப் பொருட்கள் வழங்கி  நாப்கின் தயாரிக்க பயிற்சி அளிக்கத் தொடங்கினார். 

இன்று உலகின்  21 நாடுகளில் முருகானந்தம் கண்டுபிடித்த 2500  இயந்திரங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன, நாப்கின்களை உற்பத்தி செய்து தள்ளுகின்றன.சுமார் ஒரு கோடி பெண்கள், இந்த எளிய விலை நாப்கின்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.  ஒரு பீஸ் நாப்கின் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய்தான். 

இவரது முயற்சியை பாராட்டி,  கடந்த 2014ஆம் ஆண்டு 'டைம் ' இதழ் உலகின் சக்தி வாய்ந்த 100 மனிதர்களில் ஒருவராக முருகானந்தத்தை தேர்வு செய்தது. டைம் இதழ் தேர்வு செய்ததில் வியப்பில்லை.ஆனால் இப்போது அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பதுதான், சரியான நபர்களை சில சமயங்களில் விருதுகளும் கூட  அடையாளம் கண்டுகொள்கின்றன என்பதை காட்டுகிறது. 

பரிந்துரை இருந்தால்தான்தான் பத்ம விருதுகள் என்கிற நிலையில், முருகானந்தம் போன்றவர்கள் அது  பற்றிய பார்வையை மாற்றத்தான் செய்கிறார்கள்!  


எடை குறைய எளிதான எட்டு வழிகள் !

ப்படியாச்சும் வெயிட்டை குறைக்கணும்!’ என்று பலரும் புலம்பினாலும், அதற்காக அவர்கள் எதுவுமே மெனக் கெடுவதில்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு, உடலையோ, மனதையோ, நேரத்தையோ வருத்திச் செய்யாமல், எடையைக் குறைப்பதற்கான எளிய டிப்ஸ் கிடைத்தால்..?! 

ட்ரை இட்! 

* உணவைச் சுருக்காதீர்கள், பெருக்குங்கள்

எடுத்துக்கொள்ளும் டயட்டில், உணவுகளைச் சுருக்குவதற்குப் பதிலாக, சத்தான உணவுகளைப் பெருக்குங்கள். ஏனெனில், ‘ரெண்டே இட்லிதான் சாப்பிட்டேன்’ என்று ஏக்கம் வந்தால், அதை விரட்டுவது கடினம். மாறாக, பழத்துண்டுகள், வெஜிடபிள் ஜூஸ், லோ காலரி உணவுகள் என்று கைவசம் வைத்துக்கொண்டு, சாப்பிடத் தோன்றும் போதெல்லாம் இவற்றைச் சாப்பிடுங்கள். ‘ரெண்டே இட்லிதான் சாப்பிட்டேன்’ என்ற பசி உணர்வு விரட்டப்படும்... மனதில் இருந்தும்!
* எக்ஸர்சைஸ் வேண்டாம்

ட்ரெட் மில், அப்டமன், ஜிம், ஏரோபிக்ஸ் எதையும் கட்டாயத்தின் பேரில் செய்தால், நீண்ட நாள் தொடர முடியாது. ‘வொர்க் அவுட்’ என்பது அலுப்பாக இருந்தால், செய்ய வேண்டாம். அப்படியென்றால் சேர்ந்துள்ள கலோரிகளை எப்படிக் கரைப்பது..? சைக்ளிங் செல்லலாம், காரைக் கழுவலாம், தோட்ட வேலை பார்க்கலாம், ஃபிரிஸ்பீ விளையாடலாம், குழந்தைகளின் காஸ்ட்லி உடைகளை மட்டும் கையால் துவைக்கலாம்... இப்படி ஏதாவது ஒன்றை சுவீகரித்துக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் செய்தால் போதும்! 

* ‘வாக்’ செல்லலாம் ஜாலியாக

எதுவுமே செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு ‘வாக்’ செல்லச் சொன்னால் எப்படி என்கிறீர்களா..?! இப்படிச் செய்து பாருங்கள்..! 

அலுவலகத்திற்கு பேருந்தில் செல்பவர்கள், முந்தைய நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்வதோடு, வீடும் திரும்பும்போதும் அப்படியே செய்யலாம்; அலுவலகத்தில் காரை கடைசியாக பார்க் செய்துவிட்டு, நடந்து போகும் தூரத்தை அதிகரித்துக்கொள்ளலாம்; வீடு, அலுவலகம், மால், ஹோட்டல் என்று எங்கு சென்றாலும், எஸ்கலேட்டர் தவிர்த்து படிகளைப் பயன்படுத்தலாம்; அருகில் உள்ள கடை, கோவில், பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே செல்லலாம்.
அதிகம் இல்லை... காலையில் 10 நிமிடங்கள், மாலையில் 10 நிமிடங்கள் என, நடப்பதற்கு இது போல ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஆக, ஒரு நாளில் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி, 10 நிமிடங்கள் உடற்பயிற்சி... 30 நிமிடங்கள் என்பது பிரமாதம் போங்கள்! 

* தண்ணீர் குடித்தால் எடை குறையும்

எப்படி..? சாப்பிடுவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். அது உங்கள் பசியையும், ‘நிறையச் சாப்பிடணும்’ என்ற ஆர்வத்தையும் தணிக்கும். மேலும் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்வது, காரைக் கழுவும்போதோ, படிகளில் ஏறும்போது, ‘போதும்ப்பா...’ என்ற அயர்வைத் தராது!


* உங்கள் மிஸ் சொல்லித் தந்தார்களா... ஷேரிங்..


வீட்டில் மனைவி/கணவர், அலுவலகத்தில் நண்பர்/தோழி என்று உங்கள் உணவைப் பகிர்ந்துகொள்ள ஒரு பார்ட்னர் வைத்துக்கொள்ளுங்கள். பிடித்த உணவை டைனிங் டேபிளில் சந்திக்கும்போது, ‘அப்படியே சாப்பிடுவேன்!’ என்று தயாராகாமல், ‘பிரியாணியை ஷேர் செய்துக்கலாம்...’, ‘பனீர் சிக்கன் மசாலா 1/2 கேட்டு வாங்கிக்கலாம்...’ என்று பார்ட்னருடன் அதை ஷேர் செய்துவிடுங்கள். சாப்பிடவில்லை என்பதும் இல்லை, முழுதாகச் சாப்பிட்டதாகவும் இருக்காது! 

* பிளேட், டம்ளர், பவுல்... சைஸைக் குறையுங்கள்


பெரிய தட்டில் இரண்டு கரண்டி சாதம் வைத்தால், கொஞ்சமாகத்தான் தெரியும். ‘அய்யோ இவ்ளோ கொஞ்சமா சாப்பிடுறோமே’ என்று மனம் பிதற்ற ஆரம்பித்துவிடும். அதுவே சிறிய தட்டில் அதே இரண்டு கரண்டி சாதம் வையுங்கள்... நிறையும் கண்களும்! அதுபோலவே, பொதுவாக நமக்கு டம்ளர், பவுலின் அடிப்பாகத்தைப் பார்த்துவிட்டால், போதுமான அளவு சாப்பிட்டுவிட்டோம் என்ற திருப்தி வந்துவிடும். எனவே, சின்ன டம்ளர், பவுலாக வைத்துக்கொள்ளுங்கள். சீக்கிரம் காலியாகிவிடும்! 

* போர் அடிக்க நேரம் கொடுக்காதீர்கள்

வேலை, பொழுதுபோக்கு எதுவும் இல்லாமல் இருக்கும் நேரம்தாம், அதிகம் பேருக்கு ஸ்நாக்ஸ், சாப்பாடு தேடும். எனவே, உங்களை ‘என்கேஜுடு’ ஆக வைத்துக்கொள்ளுங்கள் அல்லது சுவாரஸ்மான பொழுதுபோக்கில் மனதை மடைமாற்றுங்கள். 

இதில் முக்கியமான விஷயம்... பொழுதுபோக்க டிவியில் சமையல் நிகழ்ச்சி, ஐஸ் கிரீம் விளம்பரம் என்று பார்த்தாலோ, பைக்கில் ரவுண்ட்ஸ் என்கிற பெயரில் வடைக் கடையில் வண்டி பிரேக் போட்டாலோ... செல்லாது செல்லாது. உணவை நினைவுபடுத்தாத நிமிடங்களாக அவை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்! 

* குறைந்த எடை குறைந்ததாகவே இருக்க வேண்டும்

எடுத்த முயற்சிகளுக்குப் பலனாக எடை குறையப் பெற்றதும், ‘எப்டீ?!’ என்று மற்றவர்களைக் கேட்க வைத்ததும் குட்! ஆனால் அதற்குப் பின் ரசகுலா டப்பாவையோ, மட்டன் கிரேவியையோ பார்க்கும்போது, ‘அதான் ஆபீஸ் ஃபங்ஷன்/அண்ணி வீட்டுக் கல்யாணம் முடிஞ்சிருச்சுல்ல... கொஞ்சம் வெயிட் போட்டுக்கிட்டா பரவாயில்ல... அப்புறம் மெலிஞ்சுக்கலாம்!’ என்று நினைத்து நாக்கை சந்தோஷப்படுத்துபவர்கள் பலர். வேண்டாமே! 

எடையைக் குறைத்து அதை அப்படியே பராமரித்து வந்தால், அதற்கான மெனக்கெடல்கள் ஆரம்பகட்டத்தைவிட குறைவாகவே தேவைப்படும். ஆனால் மீண்டும் எடை கூடிவிட்டால்... ‘மறுபடியும் முதல்லயிருந்தா?!’தான்! எனவே, கீப் ஃபிட்!


தற்கொலைக்கு தூண்டியது எது? - 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்!

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மாணவிகளின் மரணம். மூன்று மாணவிகளும் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதம் தற்போது சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், காலேஜில நாங்க படிச்சத விட வேலை பார்த்ததுதான் அதிகம் என்றும் தங்கள் மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் இதோ...


'3 மாணவிகளை பலிவாங்கிய எஸ்.வி.எஸ். கல்லூரி அனுமதியின்றியே இயங்கியது':எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி
3 மாணவிகள் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி,  அரசு அனுமதியின்றியே இயங்கி வந்ததாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளார்.

எஸ்.வி.எஸ். கல்லூரியின் மோசமான நடவடிக்கையால் மனம் உடைந்த நிலையில், மாணவிகள்  பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகிய 3 பேரும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர். இதனையடுத்து அக்கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டு அக்கல்லூரியின் முதல்வர் கலாநிதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் இன்று (திங்கள்) செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி, "விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அந்தக் கல்லூரி இயங்கியுள்ளது.

இது குறித்து விசாரணைக் குழு அமைத்து தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலேயே சேர்க்க வேண்டும்"  என்று கூறினார்.


'அன்பிற்குரிய இளைஞர்களே'- அரசியலுக்கு வருவது குறித்து சகாயம் அளிக்கும் பதில்! (வீடியோ)

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்டப்பட்டு வருவரோடு, பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பதில் அளிக்காமல் இருந்து வந்த சகாயம் ஐஏஎஸ், தற்போது, அரசியலுக்கு அழைக்கும் இளைஞர்களுக்கு பதில் அளித்துள்ளார்.

"அன்பிற்குரிய இளைஞர்களே ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு நான் துணையாக  இருப்பேன்". ஆனால்...

மேலும் அவர் சொல்வது என்ன? வீடியோவை பாருங்கள்...


4 இட்லி ஒரு தண்ணீர் பாக்கெட்... தியாகிகளை சிறப்பாக 'கவனித்த' அரசு!

யிரகணக்கானக்கானோர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து பெற்று தந்த சுதந்திரத்தின் வழியாக ‘குடியரசு’ எனும் கோட்டையில் அமர்ந்து ஆட்சி புரிந்து வருகிறோம். ஆனால், அந்த தியாகச்சுடர்களுக்கு  உரிய மரியாதை அதிகார வர்க்கத்தினரால் கொடுக்கப்படுகிறதா? என்றால் அது கேள்விக்குறிதான்!
ஆண்டு தோறும் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினங்களில் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைப்பதும், அதனை தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று போராடிய தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதும் சம்பிரதாயமாக நடந்து வரும் ஒரு செயலாகவே இருக்கிறது. அதற்கு உதாரணம், ராமநாதபுரத்தில் நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் தியாகிகள் நடத்தப்பட்ட விதம்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தபோது ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள்தான் அதில் அதிகமாக இடம் பெற்றிருந்தனர். சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் போக,எஞ்சிய நூற்றுக்கணக்கானோர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாவட்ட தலைநகரில் நடக்கும் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் இவர்கள் அனைவரும் பங்கேற்று வந்தனர். இப்போது பல தியாகிகள் சுதந்திரதின, குடியரசு தின விழாக்களில் பங்கேற்பது இல்லை. இந்த ஆண்டு ராமநாதபுரத்தில் நடந்த குடியரசு தின விழாவில் பத்தே பத்து தியாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் தியாகிகள் அவர்களது வாரிசுகள் என 7 பேர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி வைத்து விழாவில் பங்கேற்ற தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இதனை தொடர்ந்து கொடிகம்பம் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்திருந்த தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. தலா 4 இட்லி ஒரு தண்ணீர் பாக்கெட் என்ற கணக்கில் 10 பொட்டலங்கள் வழங்கப்பட்டது. வயது முதிர்ந்த தியாகிகளுக்கு மட்டும்தான்  இட்லியும் தண்ணீர் பாக்கெட்டும்.  அவர்களுக்கு துணையாக வந்தவர்களுக்கு அதுவும் கிடையாது.
இது குறித்து விழாவிற்கு வந்திருந்த சில சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ''தாங்கள் பெற்று தந்த சுதந்திரத்தையும், அதன் மூலம் உருவான குடியரசை கொண்டாடும் விழாவில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வயது முதிர்ந்த தியாகிகள் வந்து செல்கின்றனர். இவர்களை உரிய முறையில் அழைத்துவரவோ, அவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்தோ அதிகாரிகள் சிந்திப்பதில்லை.

இந்த விழாவில் பங்கேற்கும் தியாகிகளை உரிய முறையில் அழைத்து வந்து, அவர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு வேளை உணவு வழங்கி சிறப்பித்தால் கிடைத்த சுதந்திரம் பறிபோய்விடுமா என்ன?
தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இது போன்று அலட்சியமாக நடத்தப்பட்டால் அதை இந்த அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்களா? இதையெல்லாம் சிந்தித்து இனிவரும் காலங்களிலாவது தியாகிகளுக்கு, அரசு அதிகாரிகள் உரிய மரியாதை கொடுக்க முன்வர வேண்டும்" என்று  கொதித்தனர்.


வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய யூனுசுக்கு அண்ணா பதக்கம்!

சென்னை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்த யூனுசுக்கு தமிழக அரசு, அண்ணா பதக்கம் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பெய்த மழை சென்னையை புரட்டிப்போட்டதோடு, பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். வெள்ளத்தில் சிக்கிய தவித்த பலரை இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்டனர்.
 
1.12.2015 அன்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் சித்ராவை மீட்டு பெருங்களத்தூர் மருத்துவமனையில் யூனுஸ் என்பவர் சேர்த்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் சித்ரா–கணவர் மோகன் ஆகியோர் அந்த குழந்தைக்கு யூனுஸ் என்று பெயரிட்டனர். 

முகமது யூனுசின் தன்னலமற்ற தீர செயல்களை பாராட்டி அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது. குடியரசு தின விழாவில் யூனுசுக்கு பதக்கம் மற்றும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் சான்றிதழ்கள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.


ஸ்டாலினும்... செல்போன் அழைப்புகளும்... (வீடியோ)

திருச்சி அடுத்த மணப்பாறை பேருந்து நிலையம் அருகே தி.மு.க சார்பில் நேற்றிரவு நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மொழிப்போர் தியாக செம்மல்கள் போற்றக்கூடிய, அஞ்சலி செலுத்தக்கூடிய, வீரவணக்கம் செலுத்தக்கூடிய கூட்டமாக இக்கூட்டம் நடக்கிறது. ஆனால் அ.தி.மு.கவும் வீரவணக்கநாள் கொண்டாடுகிறது. அந்த கட்சிக்கும், ஜெயலலிதாவுக்கும் என்ன தகுதி இருக்கிறது. பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட செம்மொழிப் பூங்காவை பராமரிக்க தவறி செம்மொழி அடையாளத்தை சின்னாபின்னமாக்கியவர் ஜெயலலிதா. பாவேந்தர் பாரதிதாசன் ஆய்வக நூலகத்தை முடக்கியது, பாடப்புத்தகத்தில் ஸ்டிக்கர் ஒட்டி திருவள்ளுவர் உருவத்தை மறைத்தனர். ஸ்டிக்கர் ஆட்சி நடத்தி வருகிறார் ஜெயலலிதா. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

தமக்கு தாமே என வாழுகின்ற ஜெயலலிதா நமக்கு நாமே திட்டத்தை விமர்சிக்கிறார். அ.தி.மு.க பொதுக்குழு நடந்தது. அது பொதுக்குழு அல்ல பொய்க்குழு. அதில், யாரோ எழுதித் தந்ததை 30 நிமிடம் வாசித்த அவர், 25 நிமிடம் நமக்கு நாமே திட்டத்தை பற்றி பேசியுள்ளார். மக்கள் மனதில் மட்டுமல்ல முதல்வர் ஜெயலலிதா மனசிலும் நமக்கு நாமே திட்டம் பதிந்துள்ளது.
 
110 விதி எதற்கு பயன்படுத்துவது என தெரியாமலேயே பயன்படுத்துகிறார்கள். அதனடிப்படையில் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் என்ன ஆனது?  இதைபோல் 1100 அம்மா அழைப்பு மையம் எனும் கால்சென்டர் ஆரமித்துள்ளார்கள். அந்த நம்பரில் அம்மாவை அழைக்கலாம் என்றார்கள்.  இந்த எண் அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்து அம்மாவை நானும் அழைச்சிக்கிட்டே இருக்கிறேன். லைனே கிடைக்கல. இந்த எண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை என இந்தியில் சொல்கிறது என்றபடி தனது போனில் 1100 எண்ணை போட்டு டயல் செய்தார். போன் பிஸியாகவே இருந்தது.

 
இப்படித்தான் பல நேரங்களில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற ஸ்டாலின், நான் எம்.எல்.ஏவாக உள்ள கொளத்தூர் தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்க்க 7810878108 என்ற எண்ணை கொடுத்துள்ளேன். அந்த எண்ணில் இதுவரை 63 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. அதில் முடிந்த அளவு பிரச்னைகளை தீர்த்து வைத்து வருகிறேன் என்றபடி தனது செல்போனில் இருந்து போன் செய்தார். அந்த நம்பரும் தவறு என வர ஜெர்க் ஆன ஸ்டாலின், அடுத்தடுத்து முயற்சி செய்ய லைன் கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து பேச ஆரமித்த ஸ்டாலின், பஸ் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என்று மக்களை ஏமாற்றிய அ.தி.மு.க ஆட்சியை மறந்தாச்சு, கூடவே அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பதையும் மறந்திட்டாங்க. தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர மக்கள் உறுதியாக உள்ளனர் என்று முடித்தார்.


ஜனவரி 26: sony - புகழ் ஆகியோ மோரிடா பிறந்த தினம் சிறப்பு பகிர்வு....

புதிய பாதையில் பயணி :
இயற்பியல் பட்டதாரியான இவர் ஜப்பானின் சார்பாக உலகப்போர் சமயத்தில் கப்பற்படையில் பணியாற்றினார் . பதினான்கு தலைமுறை அரிசி மதுபானம், சோயா சாஸ் தயாரிக்கும் குடும்பபிசினசை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தொழில்நுட்பத்தில் மூழ்கியது முதல் புள்ளி !
முயன்றால் எதுவும் சாத்தியம் :
375 டாலர் பணத்தோடு எரிந்து போன ஒரு சின்ன டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் தான் அவர்களின் நிறுவனத்தை துவக்கினார்கள்.  டேப் ரெக்கார்டர் செய்ய வேண்டிய பிளாஸ்டிக் தடையால் தாங்களே பேப்பரில் செய்து அதில் வேதிப்பொருட்கள் சேர்த்து சாதித்தார்கள். தாங்கள் உருவாக்கிய டேப் ரெக்கார்டர் கருவியை வாங்கிக்கொள்ள ஆளே இல்லை என்று சோர்ந்து போகாமல் அதற்கான மார்க்கெட் தேடி அலைந்தார் அவர். பள்ளிகளில் நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்து இறங்கி கலக்கினார்கள். லட்சங்கள் குவிய ஆரம்பித்தது.
ஆய்வு செய் ! அற்புதம் நிகழும் :
லட்சங்கள் குவிய ஆரம்பித்தாலும் பத்து சதவிகிதத்தை ஆய்வுகளில் யோசிக்காமல் முதலீடு செய்தார்கள். npn என்று டயோட் இருந்தால் இன்னமும் சிறப்பாக ட்ரான்சிஸ்டர் வேலை செய்யும் என்று புரிந்தது. அதை தயாரிக்கஉரிய பொருளைத்தேடி அலைந்த பொழுது பாஸ்பரஸ் நல்லபடியாக சொன்னதை கேட்டது. அப்பொழுதைய ஜாம்பாவன் பெல் லேப்ஸ் நிறுவனமோ பாஸ்பரஸ் வேஸ்ட் என்றிருந்தது. ஆனாலும்,நம்பிக்கையோடு ஆய்வுகளை தொடர்ந்தார்கள். துல்லியமான ட்ரான்சிஸ்டர்கள் உருவாகின. அந்த ஆய்வின் பொழுது எழுந்த 'double tunneling effect' ஒரு நோபல் பரிசை கூடுதல் போனஸாக தந்தது
பெயரும் முக்கியம் ஜெயிக்க :
ஏழை நாடாக இருந்த ஜப்பானை விட அடித்துக்கிளப்பும் அமெரிக்கா நல்ல சாய்ஸ் என்று பட்டது மோரிடாவுக்கு. அங்கே போய் கம்பெனி நடத்தலாம் என்று முடிவு செய்த பொழுது ஈர்க்கும் ஒரு பெயருக்கு அலைந்தார்கள். இலத்தீனில் ஒலியை குறிக்கும் சோனஸ் தாக்கத்தில் சோனியை வார்த்தார்கள். தரமும் சேர்ந்து கொள்ள சோனி சாதித்தது !
குறைத்து எடை போடாதே உன்னை :
அமெரிக்காவின் ஸ்டாக் மார்க்கெட்டில் நுழைந்திருந்தார்கள் சோனி. அன்றைக்கு ஷேர்களின் விலை என்ன என்று அறிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமெரிக்க ஆள் ரூமில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். விலையை
அறிவிக்காமல் கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். பின்னர் நிலவரம் என்ன என்று விசாரித்தால் அதிர்ச்சி ! பல்லாயிரகணக்கான அமெரிக்கர்கள் ஓயாமல் அழைத்து விலையென்ன என்று கேட்கிறார்கள். மதிப்பு
வெகு உச்சத்தில் இருக்கிறது என்று சொன்னதும் டாப் விலை சொன்னார்கள் !
தேவைகளில் இருந்து புதிதைத்தருக :
பீச்சுகள் வரை டேப் ரெக்கார்டர்களை கொண்டு போய் மக்கள் சிரமப்பட்டு பாடல் கேட்பதை பார்த்தார் இவர். பெல் லேப்ஸின் தொழில்நுட்பத்தில் இருந்து பாடல் கேட்கும் ஒரு கருவியை படைத்தார்கள். அதை ஆங்காங்கே எடுத்து  அளவை சிறிதாக்க சொன்னார் அகியோ மோரிடா. பின்னர் நண்பர் இபுகா இப்படி சத்தமாக கேட்கவும் கடுப்பாக இருக்கிறது என்று சொல்ல ஹெட்செட் என்கிற கான்செப்டை கொண்டு வந்தார்கள். அப்படியும் இளைஞர்களின் கனவுப்பொருளான வாக்மேன் வந்தது இப்படித்தான்!
தவறுகளை ஒத்துக்கொள் :
கால்குலேட்டர் பிஸினசில் நுழைந்திருந்தது சோனி. பல ஜப்பானிய நிறுவனங்களும் அதில் ஈடுபட்டதால் பெரிதாக வருமானம் கிடைக்காமல் அந்த தொழிலை மோரிடா இழுத்து மூடிவிட்டார். ஆனால்,அதை அப்படியே வைத்திருந்தால் இருபதாம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் உலகை முற்றுகையிட்ட கணினித்துறையில் இன்னமும் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாம் என்று தன் தவறை பகிரங்கமாக ஒத்துக்கொண்டார் அவர்
குடும்பம் நிறுவனம் :
சோனியில் தலைமை அதிகாரிக்கும், அடுத்தடுத்து இருக்கும் ஊழியர்களுக்கும் இடையே சம்பள விகித வித்தியாசம் பெரிய அளவில் இருக்காது. எல்லா நபர்களையும் குடும்பம் போல நடத்துவார்கள். வெறும் பட்டம் மட்டுமே திமைக்கு அளவுகோலாக கொள்ளப்படாமல் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாறி கற்றுக்கொள்ளவும் வாய்ப்புகள் தருவது உறுதி செய்யப்பட்டது ! கோக கோலா, ஜெனரல் மோட்டர்ஸ் என்று டாப் நிறுவனங்களுக்கும் மேலே அமெரிக்காவில்
நம்பகத்தன்மை பெற்று நின்றது சோனி !
விளம்பரம் கொஞ்சம் வில்லங்கம் :
ஒரு புதிய கருவியை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருந்தார் மோரிடா. அது பெரிய ஹிட் அடிக்கும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. இருந்தாலும் அமெரிக்காவில் ஒழுங்காக விற்க வைக்க அதிகபட்ச விளம்பரங்களை செய்யச்சொல்லி ஏஜ் இருந்த அதிகாரிக்கு உணர்த்த ,"இவ்வளவு மில்லியன் டாலர் நீங்கள் செலவு செய்யவேண்டும் ! இல்லையென்றால் வீட்டுக்கு போக வேண்டியது தான் !" என்று சொல்லிவிட்டார். சொன்னபடியே செலவு செய்தார் அந்த அதிகாரி. என்ன ! மற்ற பொருள்களுக்கான விளம்பரத்தை குறைத்து அதை இந்த புது குழந்தைக்கு திருப்பி எப்பொழுதும் ஆகும் செலவுக்குள்ளேயே சாதித்தார்!
செய் ! செய்யாதே !:
"தவறுகள் செய்ய அஞ்சாதீர்கள் ,ஆனால் அதே தவறை திருப்பி செய்யாதீர்கள் " என்பதை தன் தாரக மந்திரமாக கொண்டிருந்த அகியோ மோரிடா ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ரோல் மாடல். மேட் இன் ஜப்பான் என்கிற பிராண்டை உலகத்தின் தரத்தின் உச்சமாக மாற்றிய உழைப்பில் எண்ணற்ற நாட்டு மக்களை ஈடுபடுத்திய அவரும்,அவர் தோழர் இபுகாவும் ,"எதுவும் முடியாது என்று சொல்லத்தெரியாத நாடு ஜப்பான் !" என்றே அறியப்பட வேண்டும் என்றார். பெயர் மாறினாலும் நம் நாடும் அப்படி ஆக பயணிப்போம் !
உலகப்போருக்கு பின் அணுகுண்டுகளை வாங்கி நைந்து போயிருந்த தேசத்தை தொழில் நுட்பத்தால் தலைநிமிர்த்த முடியும் என்று இவரும், இபுகா எனும் இவரின் நண்பரும் நம்பினார்கள் .1946 இல் டோக்கியோ டெலி கம்யுனிகேசன்ஸ் இன்ஜினியரிங் கார்ப்பரேசனை தொடங்கினார்கள் .முதலில் மிகப்பெரிய டேப் ரெகார்டரை உருவாக்க அது கவனம் பெறவில்லை ;பார்த்தார் மனிதர் .பெல் நிறுவனம் உருவாக்கி இருந்த ட்ரான்சிஸ்டரை உரிமம் பெற்று தங்களின் ரேடியோக்களில் இணைத்தார்கள்; மாபெரும் வெற்றி பெற்றது அது  .அளவில் சிறியதாக இருந்தது அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். அதையே எட்டு இன்ச் டிவி ,வீடியோ ரெகார்டர் என விரிவாக்கி கொண்டே போனார்கள் .உலகம் முழுக்க மேட் இன் ஜப்பான்  என்கிற சொல்லுக்கு ஒரு தனி கவுரவத்தை தந்தது இவரின் நிறுவனம்.
அமெரிக்காவை முற்றுகையிட ஒரு கவர்ச்சி கரமான பெயரை யோசித்தார்கள். இலத்தீனில் ஒலி என்பதற்கு சோனஸ் என பெயர் ; அமெரிக்காவில் சோனி பாய்ஸ் என்பது பிரபலமான வாசகம் .சோனி என பெயர் மாறியது ஜப்பானின் பீச்களில் பயணம் போகிற பொழுது மிகப்பெரிய ஸ்பீக்கர் கொண்டு போய் மக்கள் இசைகேட்பதை பார்த்தார் ;நடந்துகொண்டே கேட்கும் வாக்மேனை உலகத்துக்கு தந்தார் ;.ஒரே ஆண்டில் ஒரு லட்சம் வாக்மேன்களை விற்கா விட்டால் தான் பதவி விலகுவதாக சொல்லி சாதித்தவர் .அமெரிக்காவில் போய் செட்டில் ஆனார் இவர் ;ஜப்பானியர்
என்கிற பெருமையை அவர் விடவில்லை .அமெரிக்கர்களை புரிந்து கொள்ளவே அங்கே போனார் ;எந்த அளவிற்கு ஜப்பானை அவர் பெருமைபடுத்தினார் என்றால் அவரின் மறைவின் பொழுது சோனி அமெரிக்காவில் கோக கோலா ஜெனெரல் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனிகளை விட மேலான இடத்தில்  மக்களால் பார்க்கப்பட்டது .தன் இறுதிக்காலம் வரை ஒரு மாதத்திற்கு எத்தனை கூட்டங்கள் இருந்தாலும் 17 நாட்கள் வேலை பார்ப்பதை தன் குறிக்கோளாக கொண்டிருந்தவர் .என்ற இவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்க்குரோல் மாடல்  அவரின் ஒரு நூலின் தலைப்பு இப்படிதான் இருக்கும் முடியாது என்று சொல்லத்தெரியாத ஜப்பான் -அப்படித்தான் அவர் ஒற்றை பிராண்டின் மூலம் நாட்டை தலைநிமிர்த்தினார். அவரின் பிறந்த  நாள் இன்று


5 Jan 2016

அழகான செல்ஃபி எடுக்க உதவும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

செல்ஃபி... இன்று ஸ்மார்ட்போன் வாங்கும் பெரும்பாலானோரின் முக்கிய ஆசை.  அவைகளை கொண்டு சிறப்பான செல்ஃபி எடுத்து, அதனை ஃபேஸ்புக்கில் போட்டு லைக்குகளை அள்ளவே இன்று பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர் என்றே கூறலாம்.

நிலைமை இப்படி இருக்க,  அனைவரையும் அழகாக காட்டும் செல்ஃபி கேமரா கொண்ட தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வந்துள்ளன. செல்ஃபி பிரியர்களுக்கேற்ற அழகான புகைப்படம் எடுக்க தகுந்த ஸ்மார்ட்போன்களில் சில இங்கே... 

1. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட் ஏ350

சந்தையில் ரூ.18,710க்கு விற்பனையாகும் இந்த போனில்,  16 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பான செல்ஃபி எடுக்க 5 எம்பி கேமரா போதுமானது என்பதோடு,  இதில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் புகைப்படங்களை இன்னும் அழகாக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.


2.எச்டிசி ஒன் எம்8

இந்த கருவியின் விலை சற்றே அதிகம் என்றாலும்,  இதில் வழங்கப்பட்டிருக்கும் 5 எம்பி முன் பக்க கேமரா மூலம் எச்டிஆர் தரத்தில் செல்ஃபி எடுக்க முடியும். மேலும் இந்த கருவியின் எடை குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

3.சாம்சங் கேலக்ஸி ஈ7

இந்த கருவியின் முக்கிய அம்சமே இதன் கேமரா எனக் கூறலாம். 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு,  இதில் வழங்கப்பட்டிருக்கும் கேமரா அம்சங்கள் புகைப்படங்களை இன்னும் அழகாக்கும்.

4.சோனி எக்ஸ்பீரியா சி3

சந்தையில் ரூ.19,595க்கு கிடைக்கும் இந்த கருவியைக் கொண்டு அழகான புகைப்படங்ளை எடுக்க முடியும். மேலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் 5 எம்பி முன்பக்க கேமராவில்,  வைடு ஆங்கிள் வழங்கப்பட்டிருப்பதால் செல்ஃபி புகைப்படங்களை அதிக அழகாகவும், துல்லியமாகவும் எடுக்க முடியும்.

5.ஜியோனி ஈலைஃப் எஸ்5.1

ஆக்டா கோர் பிராசஸர் கொண்ட இந்த கருவியில்,  8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் கேமரா அம்சங்களை கொண்டு அழகான செல்ஃபி எடுக்க முடியும்.


6.கார்பன் டைட்டானியம் ஆக்டேன் ப்ளஸ்

ரூ.12,000 பட்ஜெட்டில் கிடைக்கும் இந்த கருவியில் முக்கிய அம்சமாக கேமரா இருக்கின்றது. 13 எம்பி பிரைமரி மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டிருப்பதால்,  அழகான செல்ஃபி எடுப்பதோடு வீடியோ கால் செய்யவும் இந்த கருவி தலைசிறந்த ஒன்றாக இருக்கின்றது.

7.ஜியோனி ஈலைஃப் ஈ7 மினி

இந்த கருவியின் அட்டகாசமான அம்சமாக கேமரா இருக்கின்றது. 13 எம்பி சுழலும் கேமரா கொண்டிருக்கின்றது. இதனால் ஒரே கேமராவைக் கொண்டு  இடத்திற்கு தகுந்தார் போல் புகைப்படங்களை எடுக்க முடியும்.

8.ஒப்போ என்1

ஒப்போ என்1 கருவியிலும் 13 எம்பி சுழலும் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனால் ப்ரைமரி கேமரா மற்றும் செல்ஃபி கேமரா என இரண்டுமே ஒன்றுதான். 13 எம்பி என்பதால்,  அழகான புகைப்படங்களை எடுக்க முடியும் என்பதோடு,  எடுத்த புகைப்படங்களை கேமரா அம்சங்களை கொண்டு மேலும் அழகாக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


9.சாம்சங் கேலக்ஸி நோட் 5

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 5 கருவியில்,  16 எம்பி பிரைமரி மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த கேமராவில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் அனைத்தும் புகைப்படங்களையும் அழகூட்டுகின்றது என்றே கூற வேண்டும்.

10.ஆப்பிள் ஐபோன் 6எஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் கருவியில் 12 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டிருக்கின்றது. வழக்கமான ஆப்பிள் தரம் இதன் புகைப்படங்களில் நன்றாகவே பிரதிபலிக்கின்றது என்றே கூற வேண்டும்.


தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் பிறந்த தின சிறப்பு பகிர்வு...

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் பிறந்த தினம் இன்று..

வரலாற்று ஆசிரியர்கள் இவரின் ஆட்சியை முகலாய மன்னரகளிலேயே பொற்கால ஆட்சி என குறிக்கிறார்கள். ஜஹாங்கீர் பெற்ற மூன்றாவது பிள்ளை இவர். இவரின் அண்ணன் அப்பாவுடன் சண்டையிட்டு அவரின் கோபத்துக்கு உள்ளான காலத்தில் இவர் அமைதி காத்து நல்ல பெயர் சம்பாதித்து கொண்டார்.


ஆசப் கானின் மகளை இவர் மணந்தார் ;அவருக்கு முன்னமே மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் என பிற்காலத்தில் அழைக்கப்பட இருக்கும் அவரின் மகளை மணந்தார். ஏழு பிள்ளைகளை பெற்று தந்து அவள் இறந்து போனாள்; அவள் மறைந்த அடுத்த நாளே இவர் முடி வெள்ளையாகி விட்டதாம் .அப்பாவுக்கு எதிராக புரட்சி செய்து அதில் தோல்வி கண்டார்; அப்பா ஜகாங்கீர் இறக்கும் தருவாயில் அவரின் மனைவி நூர்ஜஹான் ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்ததை முறியடித்து அரசர் ஆனார், அவரின் நினைவாக தாஜ்மகாலை கட்ட வைத்தார் ஷாஜஹான்; 

கூடவே முத்து மசூதியை ,செங்கோட்டையை, இன்றைக்கு பழைய டெல்லி என அழைக்கப்படும் பகுதியை உருவாக்கினார் .அவரின் மயிலாசனம் உலகப்புகழ் பெற்றது ;தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினங்கள், மரகதம் ஆகியவற்றால் இழைக்கப்பட்டது அது இவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் தாரா ஷுகோ ஆனால் தொடர்ந்து அவுரங்கசீப் இவரின் கடுப்பிற்கு உள்ளானார், இவர் உடல்நலம் சரியில்லாத பொழுது இவரை மறைத்து வைத்துக்கொண்டு ஷுகோ ஏமாற்றுவதாக நினைத்து பிள்ளைகள் போர் தொடுக்க இறுதியில் அவுரங்கசீப் அப்பாவை சிறை வைத்தார்; அவர் படுத்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் தாஜ்மகால் மட்டுமே தெரியும் வண்ணம் படுக்க விட்டது மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகை ,நீர்க்கடன் செய்யும் நாட்டில் குடிக்க நீர் கூட இல்லாமல் தவிக்க விடுகிறானே இவன் என புலம்பினார்; 

அவர் அன்பு மகள் மட்டுமே வந்து பார்த்து செல்வாள் ;கருப்பு தாஜ்மகால் ஒன்றை எதிரில் உருவாக்கி அதில் தன்னை புதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அவர் .அது வீண் செலவு என மறுத்தார் அவரின் மகன் .ஒருநாள் காலை அவரின் ,மனைவியின் கல்லறை இருந்த திசை நோக்கி பார்த்தபடியே இறந்துகிடந்தார் அவர்.


'கான் மார்க்கெட்.காம் ' - சல்மானுடன் மல்லுக்கு நிற்கும் வியாபாரிகள் !

ஹிந்தி நடிகர் சல்மான்கான், அண்மையில் நடைபாதை கார் விபத்து வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் 27-ம் தேதி தனது 50-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய சல்மான் ,  அன்றைய தினம்  'கான்மார்க்கெட் . காம்' என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். 
சல்மான் தனது நிறுவனத்துக்கு 'கான்மார்க்கெட் .காம்' என்று பெயர் சூட்டியதற்கு, டெல்லியில் உள்ள கான் மார்க்கெட் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு,   கான்மார்க்கெட். காம் என்ற பெயரை சல்மான்  உடனடியாக மாற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், '' உலகில் உள்ள 24 அதிக பணம் புழங்கும் சில்லரை வர்த்தக மையங்களில் கான் மார்க்கெட்டும் ஒன்று. நாட்டிலேயே முதன்மையானது. கடந்த 1951-ம் ஆண்டு முதல், டெல்லியில் எங்கள் சந்தை செயல்பட்டு வருகிறது. சந்தையில் எங்களது பொருட்களுக்கு என்று தனி மரியதை இருக்கிறது.
தற்போது நடிகர் சல்மான், கான்மார்க்கெட்.காம் என்று பெயரில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால்,   நுகர்வோர்களும் வாடிக்கையாளர்களும் குழப்பமடைவார்கள். ஆன்லைனில் கான்மார்க்கெட்.காமில் கழிவு அறிவித்தாலும் வாடிக்கையாளர்களையும் நுகர்வோர்களையும் குழப்பும்.
கடந்த 65 ஆண்டுகளாக வர்த்தகம் புரிந்து வருகிறோம். எங்கள் சந்தை பொருட்களுக்கென்று தனி மரியாதை இருக்கிறது.  சல்மானின் இந்த செயல் கண்டனத்துக்குரியது  அவர் உடனடியாக தனது நிறுவனத்தின் பெயரை மாற்ற வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.


இவரின் கோபம்தான் பதன்கோட் தாக்குதலுக்கு காரணம்?

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி உள்ளதாகவும், நரேந்திர மோடிக்கும், நவாஸ் ஷெரீப்புக்கும் இடையேயான நட்பால் கோபமுற்றே அவர் தீவிரவாதிகளை தூண்டிவிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தான் சென்றார். 

கடந்த டிசம்பர் 25 -ம் தேதியன்று நவாஸ் ஷெரீஃபுக்கு 66-வது பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு அவருக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, பாகிஸ்தான் வருமாறு மோடிக்கு ஷெரீஃப் அழைப்பு விடுத்தார். மேலும் தனது பேத்திக்கு அன்றைய தினம் (டிச.25) திருமணம் நடைபெறும் தகவலையும் மோடியிடம் நவாஸ் கூறினார். இதையடுத்தே அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டு பாகிஸ்தானுக்கு மோடி அந்த திடீர் பயணத்தை மேற்கொண்டார். 

மோடியின் இந்த திடீர் பயணத்திற்கு இந்திய அளவில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தபோதிலும், பல்வேறு உலகநாடுகள் இதனை வரவேற்றன. மேலும் மோடியின் பயணத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டன.
பாகிஸ்தான் ராணுவத்தை பொறுத்தமட்டில், அது இந்தியாவுடன் நட்பு பாராட்டுவதை விரும்புவதில்லை. அதனையும் மீறி பாகிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்திய அரசுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தால், அதற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக எல்லைப்பகுதிகளில் அத்துமீறலில் ஈடுபட்டு இந்திய நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கையால்,  இந்திய வீரர்களும் பதிலடி கொடுக்க நேரிடுவதால் இருநாடுகள் இடையே மீண்டும் கசப்புணர்வுகள் தலை தூக்கிவிடும். 

அப்படி இல்லாவிட்டால் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளே இந்தியா - பாகிஸ்தான் உறவை சீர்குலைக்கும் விதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடுவார்கள். இதன் பின்னணியிலும் பெரும்பாலும் பாகிஸ்தான் ராணுவம் இருக்கும். 

அப்படியான ஒரு தாக்குதல்தான் தற்போது பதன்கோட்டில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய மோடி - நவாஸ் சந்திப்பை பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் மிகுந்த கசப்புணர்வுடன் பார்த்ததாகவும், அந்த வெறுப்பின் விளைவே பதன்கோட் தாக்குதல் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதன்கோட் விமான தளத்தை தாக்குவதற்கான சதித்திட்டம் ராவல்பிண்டியில் உருவானதாகவும்,  மோடி - நவாஸ் சந்திப்பை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகி உள்ள அமைதி பேச்சுவார்த்தை தொடங்கப்படுவதற்கான சாதகமான சூழலை கெடுக்க வேண்டும் மற்றும் இருநாடுகள் இடையே மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த தாக்குதலின் நோக்கம் என்றும் இஸ்லாமாபாத் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 


சென்னை உள்பட இந்தியா முழுவதும் அப்பல்லோ மருத்துவமனைகளில் ஐடி ரெய்டு!

சென்னை உள்பட இந்தியா முழுவதும் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கான காரணத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அப்பல்லோ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சென்னையில் ஆயிரம் விளக்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அப்பல்லோ மருத்துவமனை தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம், அயனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை முதல் இந்தியா முழுவதும் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கு, அயனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனைக்கான காரணத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்ற வரும் இந்த மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெண் பத்திரிகையாளரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்ட கிறிஸ் கெயில்!

தன்னிடம் பேட்டி கண்ட தனியார் தொலைக்காட்சி பெண் பத்திரிகையாளரிடம் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் மரியாதை குறைவாக நடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஷ் டி20 லீக்கில் ஜோபார்ட் ஹரிகேன்ஸ் அணியும், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியும் நேற்று (4-ம் தேதி) ஆஸ்திரேலியாவில் விளையாடியது. இதில், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் விளையாடிய கிறிஸ் கெயில் 15 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் தனியார் தொலைக்காட்சி பெண் பத்திரிகையாளர் ஒருவர் கெயிலை பேட்டி எடுத்தார். அப்போது கெயில், ''நானே உங்களிடம் வந்து பேட்டி கொடுக்க விரும்பினேன். அதனால்தான் தற்போது உங்கள் முன்பு நிற்கிறேன். உங்கள் கண்களை முதல் முறையாக பார்க்கவே இங்கு வந்துள்ளேன். இட்ஸ் நைஸ். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். அதன் பிறகு நாம் மது அருந்தலாம். don't blush baby" என்றார்.

கெயிலின் இந்தப் பேச்சைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் பத்திரிகையாளர், சுதாரித்துக் கொண்டு ''நான் வெட்கப்படவில்லை'' எனக்கூறி பேட்டியை தொடர்ந்தார்.

கெயிலின் இந்த செயல் பெரும் சர்ச்சையை எடுத்தியிருப்பதோடு, அவருக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


ஜிடி நாயுடு நினைவு தினம்...சிறப்பு பகிர்வு

ஜிடி நாயுடு என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் நினைவுதினம் இன்று (04.01.16) . தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவரான ஜிடி நாயுடு கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் மார்ச் 23, 1893ம் ஆண்டு பிறந்தார். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர், தொழிலதிபர். இவர் இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படுகிறார்.
இவரைப் பற்றி சில சுவாராஷ்யமான தகவல்கள்...
இளம் வயதில் ஜிடி நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.

தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போன ஜிடி நாயுடு வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார்.

இவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.

மும்பை சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். மும்பை பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து ஊர் திரும்பினார். ஆனால் மனந்தளராத ஜிடி நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார்.

ஸ்டேன்ஸ் துரை நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.

முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு.









தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு.

முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.


பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் இவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம்  கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார். இதற்கு நாயுடு கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’ என்றார்.

தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார் ஜிடி நாயுடு.
ஜிடி நாயுடு கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார். விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில.


 
ஜிடி நாயுடு பற்றி அறிஞர்கள் கருத்து:
‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.

‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரிய மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அறிஞர் அண்ணா.

"கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் ஜிடி நாயுடுவைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்" என்று மனம் திறந்து பாராட்டினார் சர். சி. வி. ராமன்.
ஜிடி நாயுடுவின் கண்டுபிடிப்புகள் சில மற்றும் விருதுகள்