சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Jul 2013

நாமக்கல் மாவட்ட கல்வி நிறுவனங்கள்

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் வீட்டில் ரெய்டு நடந்த காலமெல்லாம் மலையேறி, இப்போது கல்வி நிறுவனங்களில் ரெய்டு நடக்கும் சீஸன்!

கடந்த வாரத்தில், நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டியில் உள்ள கிரீன் பார்க் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல், என்.கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் ஆகிய பள்ளிகளில் நுழைந்த வருமான வரித் துறை அதிகாரிகள், பள்ளிகளில் இருந்து முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

பள்ளிகளில் ரெய்டு நடக்க முக்கியக் காரணமாக இருந்தவர் தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மதியழகன். அவரிடம் பேசினோம். ''நாமக்கல் பள்ளிகள் என்றாலே கொத்தடிமைகளின் கூடாரம் என்பது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். இங்கே படிக்கும் மாணவர்கள் எந்திரங்களாகத்தான் இருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு ரிசல்ட் வருவதற்கு முன்பிருந்தே, தமிழ்நாடு முழுக்க இருந்து பெற்றோர்கள் அட்மிஷனுக்காகக் குவிய ஆரம்பித்துவிட்டனர். பத்தாம் வகுப்பில் 497 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே, இந்தப் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு வருடத்துக்கு 1.93 லட்சம் கட்டணம் வாங்கினர். அட்மிஷன் அன்று மைக்கில், 'தயவுசெய்து 100 ரூபாய் நோட்டுக்கட்டுகளாகக் கொண்டுவராதீர்கள். எண்ணுவதற்குத் தாமதமாகிறது. 1000, 500 ரூபாய் கட்டுகள் மட்டும் கொண்டுவாருங்கள்என்று அறிவித்தனர். 480 மதிப்பெண்களுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கு 2.50 லட்சம் நன்கொடை வசூலிக்கப்பட்டது. இங்கே செலுத்தும் எந்தப் பணத்துக்கும் ரசீது கிடையாது.
இதையெல்லாம் நான் நேரில் பார்த்த பிறகுதான் வருமான வரித் துறைக்குப் புகார் செய்தேன். உடனே அதிகாரிகள் வந்தனர். அங்கே என்ன நடந்ததோ தெரியவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், என் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நான் கேட்ட பிறகே இப்போது ரெய்டு நடந்துள்ளது. நாமக்கல் பள்ளிகள் பெரும்பாலும் அரசாங்கத்தையும் மக்களையும் ஏமாற்றுகிறது. நேர்மையான அதிகாரிகளைக்கொண்டு, விசாரணை நடத்தவேண்டும் என்பதுதான் என் கோரிக்கை'' என்றார் 
வேதனையுடன்.

ரெய்டு நடந்த பள்ளிகளில் ஒன்றான கிரீன் பார்க் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தாளாளர் சரவணனிடம் பேசினோம். ''வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்வது வழக்கமாக நடப்பதுதான். ஒவ்வொரு வருடமும் இப்படி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். காய்த்த மரம்தானே கல்லடி படும். எங்கள் பள்ளியும் அப்படி பிரபலமான பள்ளியாக இருப்பதால்தான் இந்த சிக்கல் வருகிறது. எங்களிடம் படித்த எவ்வளவோ பேர் டாக்டர்களாகவும், பொறியாளர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் ரிசல்ட் வந்ததும் எங்கள் பள்ளிகளில் கூட்டம் குவிகிறது. நாங்கள் யாரையும் கையைப் பிடித்து இழுத்துவருவது இல்லை. எங்கள் பள்ளியில் இதுவரை ப்ளஸ் ஒன் அட்மிஷன் தொடங்கவில்லை. விண்ணப்பம் மட்டும் கொடுத்திருக்கிறோம். பிளஸ் ஒன் படிக்க, ஹாஸ்டலுக்கும் சேர்த்து 1.40 லட்சம் வாங்குகிறோம். இதில் நன்கொடை எதுவும் இல்லை'' என்று சொன்னார்.

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமாரிடம் பேசியபோது, ''அந்தப் பள்ளிகளின் சொத்து தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். அதில் நாங்கள் தலையிட முடியாது. கல்விக் கட்டணம் அதிகமாக வாங்குவது பற்றி எழுத்துப்பூர்வமாக எங்களுக்குப் புகார் வந்தால், நாங்கள் ஆய்வுசெய்வோம்'' என்றார்

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !


No comments:

Post a Comment