இருபது ஆண்டுகளுக்கு முந்தைய காட்சி இது.மண் சுவரால் கட்டப்பட்டு, நடுவில் முற்றம் வைத்த ( Inner Courtyard ) வீடு அது.பின்புறம் கொல்லையில் சில தென்னை மரங்களும், அதன் நடுவில் கிணறும் இருக்கும். முற்றம் வைத்த வீட்டின் வசதி என்னவென்றால், வீட்டின் உள்ளே நின்றவாறே சூரியனை பார்க்கலாம்; படுத்தவாறே நிலவையும், நட்சத்திரங்களையும் ரசிக்கலாம்.
ஒரு நாள் ஏதோவொரு தின்பண்டத்தை கொறித்துக் கொண்டிருந்தேன்.அதில் சில தரையில் சிந்தியிருந்தன.சிறிது நேரம் கழித்து பார்த்தால் எங்கிருந்துதான் அத்தனை எறும்புகள் வந்தனவோ தெரியவில்லை.சில மணித்துளிகளில் சிந்தியிருந்த அனைத்து தின்பண்டங்களையும் எடுத்து சென்றுவிட்டன.
எப்படி எறும்புகளுக்கு தின்பண்டம் தரையில் சிந்திய செய்தி உடனடியாக கிடைத்தது ?. இதற்கு விடை தேடி தொல்காப்பியத்தை நாடுவோம்.தொல்காப்பியத்தின் கூற்றுப்படி எறும்பு ஒரு மூவறிவு உயிரினம்.அதாவது முதலாம் அறிவு உற்றறிவு ( தொடு உணர்ச்சி ) ; இரண்டாம் அறிவு சுவையறிவு ( நாக்கு ) ; மூன்றாம் அறிவு முகர்தல் ( மூக்கு ) ஆகும்.
பொதுவாக குறைந்த அறிவுடைய உயிரினங்கள் , அவற்றுள் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகையில், மிகச்சிறந்த அறிவை பெற்றிருக்கும்.அந்த வகையில் எறும்புகள் மிகச்சிறந்த முகர்ச்சி ( வாசனை அறிதல் ) அறிவு கொண்டவை.இதற்கு அதன் உணர்வு கொம்புகள் உதவுகின்றன.இதனாலேயே இறுக்கமாக மூடி வைக்கப்பட்ட தேன் பாட்டிலின் மூடியை எறும்புகள் வட்டமிடுகின்றன.இவ்வாறாக மேற்சொன்ன நிகழ்வுக்கு விளக்கம் பெற்றேன்.
நிற்க.இன்றைய தேதிக்கு வருவோம்.முன் சொன்ன அதே நிகழ்ச்சி சற்று மாறுபட்ட நகரச் சூழ்நிலையில் நிலையில் இன்று நிகழ்கின்றது.இப்பொழுதும் தின்பண்டங்கள் தரையில் சிந்துகின்றன.ஆனால் பல நேரங்களில் எறும்புகள் வருவதே இல்லை ; சில நேரங்களில் மிகவும் தாமதமாக வருகின்றன; அதுவும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் வருகின்றன்.
ஏன் இப்படி ?. ஏனென்றால் நாம் இப்பொழுது சாப்பிடும் உணவுகள் தரமற்றவை. இவை பெரும்பாலும் ( அனைத்தும் அல்ல ) இயற்கைக்கு எதிரான முறையில் ரசாயன உரங்களையும்,பூச்சி கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேலும்,இதற்கு அடுத்து பல்வேறு கட்டங்களை கடந்து நம் வீட்டிற்கு வந்து சேரும் வரையிலும்,சுவையை அதிகரிக்க,தோற்றத்தை மெருகூட்ட, நீண்ட நாள் இருப்பு வைக்க என்பன போன்ற பல காரணங்களைக் கருதி, பல்வேறு வேதியியல் பொருட்கள் அதில் சேர்க்கப்படுகின்றன.இதன் விளைவுகள் பற்றி அறிந்தோ,அறியாமலோ இந்த நிகழ்வுகள் நடக்கின்றன.யாரையும் குறை கூறுவதற்கு இல்லை.இயற்கைக்கு எதிரான இன்றைய வாழ்வியல் அமைப்பில்,அவரவர்க்கு உள்ள பொருளாதார நெருக்கடி இவ்வாறு செய்யத் தூண்டுகின்றது.
இவ்வாறு தரம் குறைந்து இருப்பதாலேயே, இந்த உணவுகளை எறும்புகள் நிராகரித்து விடுகின்றன.இந்த வகையில் எறும்புகள் மிகச்சிறந்த தர உறுதி குறிகாட்டிகளாக (Quality standard indicators ) செயல்படுகின்றன.
இத்தகைய தரமற்ற உணவுகளை நாம் உண்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றோம்.இன்று நாம் எதிர்கொள்ளும் பல்வேறு நோய்களுக்கு இத்தகைய உணவுகளே முக்கிய காரணமாக அமைகின்றன.இத்தகைய உணவுகளை உண்ணும் குழந்தைகள் விரைவிலேயே பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளாகின்றார்கள்.
இதற்கு என்னதான் தீர்வு ?. நம் முன்னோர்கள் வழியில் இயற்கை சார்ந்த வழிமுறைகளில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை நாம் சிறிது சிறிதாக உண்ண ஆரம்பிக்க வேண்டும்.இதற்கு அங்கக உணவுகள் என்று பெயர். இவை ஆங்கிலத்தில் Organic Foods எனப்படுகின்றன.
சரி,ஆனால் உடனடியாக இந்த உணவு முறைக்கு முற்றிலும் மாற முடியுமா ?.கடினம். ஆனால் சிறிது சிறிதாக மாற முடியும்.எப்படி ?.
முதல் கட்டமாக காலை உணவுகளை மட்டும் இயற்கை உணவுகளாக உண்ண முயற்சிக்கலாம்.அதாவது நம் தாத்தா பாட்டி தலைமுறையினர் உண்ட கேழ்வரகு,கம்பு,திணை,சாமை,குதிரைவாலி,நாட்டுச்சோளம்,வரகு போன்ற சிறு தானியங்களை கஞ்சி அல்லது கூழாகக் குடிக்கலாம்.( என்னது மறுபடியும் மொதல்லேந்தா ??!! ).
இது மிகவும் சத்துள்ள, அதிக ஆற்றலை வழங்கக் கூடிய ஆகாரம்.மேலும் அவசர கதியில் இயங்கும் இந்த உலகத்தில், மிக விரைவாக தயார் செய்யக்கூடிய இந்த உணவுகள் பெருமளவு நமது நேரத்தை மிச்சப் படுத்தும்
.
இந்த உணவுகள் அளிக்கும் ஆற்றலுக்கு சான்று எனப்பார்த்தால், இதனை உண்ட நம் முன்னோர்களில் ஆண்கள் மிகுந்த உடல் வலு பெற்றிருந்தார்கள்.பெண்கள் பிரசவ நாளன்று கூட வயல் வேலைக்கு சென்று ,இடையில் அங்கேயே குழந்தை பெற்று, பின் மிச்ச வேலையை முடித்து வீடு திரும்புவார்களாம்.பிரசவம் என்பது அவ்வளவு வெகு இயல்பான காரியமாக இருந்தது.ஆனால் இன்று இதை நினைத்து பார்க்க முடியுமா ?.
அடுத்த கட்டமாக இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள்,கீரைகள் மற்றும் பழங்களை வாங்கி உண்ண ஆரம்பிக்கலாம்.
இந்த உணவுப் பொருட்கள் தற்போது எல்லோருக்கும் கிடைகும் அளவுக்கு வரத்து ( Supply ) உள்ளதா ? விலை அதிகமா ?. என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
நடைமுறையில் உள்ள விவசாயமே பல்வேறு நெருக்கடிகளால் கைவிடப்பட்டு வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் இயற்கை விவசாயம் செய்வதற்கு ஆரம்பத்தில் கூடுதலான உழைப்பு தேவை.எனவே தற்போது சந்தையில் இந்த உணவு பொருட்களின் வரத்து குறைவாகவே உள்ளது.இந்தக் காரணங்களால் இந்த பொருட்களின் விலையும் சற்று அதிகமாக இருக்கும்.
சரி, இயற்கை உணவுகளை எவ்வாறு இனம் காண்பது ?. இவற்றை எறும்புகள் விரும்பி உண்ணும்.வண்டுகளும் இதனை விரும்பி உண்ணும்.இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்;சமையல் செய்முறைகளின் போது சிறந்த பதங்களைத் தரும்.சிறிது கால பயன்பாட்டிலே நீங்கள் இதனை நன்கு உணர முடியும்.
சரி, இயற்கை உணவுகள் நமக்கு நன்மை விளைவிக்கும் என்பதற்கு என்ன ஆதாரம் ?. காலம் காலமாக இதனை உண்டு வரும் நம் முன்னோர்கள் தொடங்கி, இன்றும் இதனை உண்டு வரும் மிகக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வரை இதற்கு சான்றாக அமைகின்றனர்.இவர்கள், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நல்ல உடல் நலத்துடன் விளங்குகின்றனர்.
மேலும் இன்றைய அறிவியல் ஆய்வுகளும், சிறு தானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு ( Nutritional Value ) அதிகம் என்றே உறுதி செய்கின்றன.
என்ன முயற்சி செய்து பார்க்கலாமா ?. உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்
No comments:
Post a Comment