சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jun 2015

விரக்தியில் ஜெ. பதவியை குறிவைக்கும் அப்பீல் மனு !

‘‘முதல்வர் ஜெயலலிதாவின் கவனம் எல்லாம் இப்போது டெல்லியை நோக்கித்தான் இருக்கிறது” என்றபடியே லேண்ட் ஆன கழுகார் மேலும் தொடர்ந்தார்.

‘‘சொத்துக் குவிப்பு வழக்கின் சுழல் மீண்டும் தொடங்கிவிட்டதுதான் ஜெயலலிதாவின் பயத்துக்குக் காரணம். ஆச்சார்யா தாக்கல் செய்த மனு, முதல்வர் பதவியைக் குறி பார்ப்பதாக அமைந்திருக்கிறது. தீர்ப்பில் உள்ள குளறுபடிகள் பற்றி உமது நிருபர் எழுதி இருப்பார். அப்பீல் மனுவின் மையப்புள்ளியாகச் சொல்லப்பட்ட விஷயங்களை நான் சொல்கிறேன்!”
‘‘ம்!”
‘‘நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பைப் பற்றிய காரசாரமான விமர்சனங்கள் கர்நாடக அரசு தாக்கல் செய்​துள்ள அப்பீல் மனுவில் இருக்கின்றன. ‘நீதிபதி குமாரசாமி, வழக்கின் தன்மையில் இருந்து முற்றிலுமாக விலகிச் சென்று தீர்ப்பு வழங்கி உள்ளார். ஜெயலலிதா தரப்பு தாங்களே முன்வந்து எழுத்துப்பூர்வமாக ஒத்துக்கொண்ட மதிப்பீடுகளையும் புறக்கணித்துவிட்டு, அவராக யூகத்தின் அடிப்படையில் சொத்து மதிப்பைக் கணக்கிட்டுள்ளார். தெளிவாக உள்ள ஆவணங்கள், நிரூபிக்கப்பட்ட சாட்சிகளுக்கு எதிராகக் கற்பனையாகப் பல விஷயங்களை அனுமானித்துத் தவறு இழைத்துள்ளார். கூட்டுச்சதி நடக்கவில்லை என்பதை சட்டத்துக்கு அப்பாற்பட்டு தன்னுடைய தீர்ப்பில் நீதிபதி குமாரசாமி நிரூபிக்க முயன்றுள்ளார்.
பொதுவாகக் கூட்டுச்சதி என்ற குற்றம், குற்றவாளிகள் சேர்ந்து செயல்பட்ட சூழ்நிலையின் அடிப்படையில் நிரூபிக்கப்படும். இந்த வழக்கிலும் அதை நிரூபிக்க அரசுத் தரப்பு போதுமான ஆதாரங்களைச் சமர்ப்பித்தது. அதை கீழ் நீதிமன்றங்கள் சரியாகப் பரிசீலித்து வழக்கை நடத்தின. சிறப்பு நீதிமன்றம் அதன் அடிப்படையில்தான் கூட்டுச்சதியை நிரூபித்தது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி, எந்த அடிப்படையில் இதில் கூட்டுச்சதி நடக்கவில்லை என்று தீர்ப்பளித்தார் என்பது புரியவில்லை. சட்டப்படி அரசுத் தரப்பு சமர்ப்பித்த சாட்சிகள் மற்றும் ஆவணங்களைப் பரிசீலித்தாலே, குற்றவாளிகள் நான்கு பேரும் சேர்ந்துதான் சொத்துகளை வாங்கியதும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டதும் தெளிவாக விளங்கும்.

ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி கூட்டுச்சதி நடக்கவில்லை என்று கூறியிருக்​கிறார். இது பிழையானது. அதுபோல் ஜெயலலிதா தரப்பை இந்த வழக்கில் இருந்து நீதிபதி விடுவிப்பதற்கு அடிப்படையாக அமைந்த வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு 8.12 சதவிகிதம் என்ற கணக்கு கூட்டல் கழித்தல் பிழைகளால் வந்துள்ளன. நீதிபதி குமாரசாமி எடுத்துக்கொண்ட சொத்துகள், வருமானங்களின் அடிப்படையில் பார்த்தால்​கூட இந்த வழக்கில் குற்றவாளிகள் குற்றவாளிகள்தான். அவர்களை விடுவிக்க வழியில்லை. ஏனென்றால், நீதிபதி குமாரசாமி கணக்கில் எடுத்துக்கொண்ட விஷயங்களின்படி, இதில் குற்றவாளிகளின் வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு 34.4 சதவிகிதம் என்று வருகிறது. அப்படி இல்லாமல் குமாரசாமி செய்த தவறுகளையும் திருத்தி குற்றவாளிகளின் சொத்துகளை மதிப்பிட்டால் அதன் மதிப்பு 168 சதவிகிதம் என்று வருகிறது!”
‘‘ஓஹோ!”
‘‘இவ்வளவையும் சொல்லிவிட்டு இடைக்கால உத்தரவுக்கான சில கோரிக்கை​களை இதில் வைத்துள்ளார்கள். ‘சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானதற்குக் காரணமாக அமைந்த கணக்குகள் பிழையான கணக்குகள் என்பதை நீதிபதி குமாரசாமியின் அட்டவணைகளே நிரூபிக்கின்றன. அதைச் சரி செய்தால், இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவால் விடுதலையாகி இருக்க முடியாது. அந்தக் கணக்கில் நடைபெற்ற பிழைகள் தவிர்த்து வேறு பல விஷயங்களையும் கருத்தில்கொண்டால் நிச்சயமாக ஜெயலலிதாவால் இந்த வழக்கில் இருந்து விடுதலை அடைந்திருக்கவே முடியாது. எனவே, இந்த வழக்கு முழுமையாக இங்கு விசாரிக்கப்பட்டு முடியும் வரை, இடைக்கால உத்தரவு பிறப்பித்து ஜெயலலிதாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதற்கு ஊழல் தடுப்புச் சட்டம் அந்த உரிமையை வழங்குகிறது. அதனால், தவறான தீர்ப்புக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை, இதில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும். இல்லை என்றால், இதில் நீதி கேலிக்குரியதாக மாற்றப்படும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது!”
‘‘சொல்லும்!”
‘‘மேலும், ‘கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் உடனடியாக சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு தேவையான இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். எதிர் மனுதாரர்கள் இதில் எந்த முறையீடும் செய்யாததைக் கருத்தில்கொண்டு உடனடியாக கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வழக்கை நடத்த வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். இந்த மனுவைப் பரிசீலிக்கும் முதல் நாளிலேயே நீதிபதிகள் என்ன மாதிரியான கருத்து மழை பொழிவார்கள் என்பதும் இடைக்காலத் தடை விஷயங்களில் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதுமே ஜெயலலிதா தரப்புக்கான பதற்றத்துக்குக் காரணம்!”
‘‘கர்நாடக காங்கிரஸ் அரசு சீரியஸாகத்தான் இந்த விஷயத்தைக் கண்காணிக்கிறதோ?”
‘‘கர்நாடக காங்கிரஸுக்குள் அப்பீல் வேண்டும், வேண்டாம் என்று முக்கியத் தலைகளுக்கு உள்ளேயே முரண்பாடுகள் முளைத்தபோது இந்த வழக்கை நேரடிப் பார்வையில் கவனித்துக்கொள்ள முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், உச்ச நீதிமன்ற கிரிமினல் வழக்கறிஞருமான கபில்சிபலை சோனியா நியமித்தார். ‘நிச்சயம் மேல்முறையீடு செய்வதோடு சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’ என்றும் அவரிடம் அறிவுறுத்தினார். ப.சிதம்பரத்திடமும் கருத்து கேட்கப்பட்டது. அவரும் அப்பீல் செய்ய வேண்டும் என்றார். அதன் பிறகு கபில்சிபல், கர்நாடக முதல்வரிடமும் சட்டத் துறை அமைச்சரிடமும் நேரடியாகப் பேசி இருக்கிறார். ‘இ்ந்த வழக்கில் மத்திய அரசின் தலையீடு இருப்பதால் சாதாரணமாக மேல்முறையீட்டுக்காக மட்டும் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது. இந்தத் தீர்ப்புக்குத் தடை வாங்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அதனால்தான் மனு மிகவும் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டதாம்!”
‘‘அப்படியா?”
‘‘வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் வழக்கறிஞராகப் பவானி சிங்கும் அவருக்கு உதவியாக முருகேஷ் மராடியும் இருந்தனர். ஜெயலலிதா தரப்பு கேள்விகளுக்கு  பவானி சிங் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தார். அவரது உதவியாளர் முருகேஷ் மராடிதான் பதிலளித்து வந்தார்.
வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணைக்கு வந்தபோது, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் வழக்கறிஞராக பவானி சிங் மட்டுமே இருந்தார். முருகேஷ் மராடி தானாகவே வழக்கில் இருந்து விலகிக்கொண்டார். தற்போது உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசின் சார்பாகவும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் சார்பாகவும் ஆஜராக இருப்பது ஆச்சார்யாவும் அவர் உதவியாளர் சந்தேஷ் சவுடாவும். இவர்கள் இருவரும் ஏற்கெனவே இந்த வழக்கில் ஆஜராகி இருக்கிறார்கள். ஜெயலலிதா தரப்புக்கு எதிராகக் காய்ச்சி எடுப்பார்கள்!”
‘‘தனக்கு பி.ஜே.பி-யும் ஜெயலலிதா தரப்பும் கொடுத்த நெருக்கடிகளைப் புத்தகமாக எழுதியவர் அல்லவா ஆச்சார்யா?”
‘‘இனிதான் நிஜ யுத்தம் ஆரம்பம் ஆகப் போகிறது என்கிறது டெல்லி வட்டாரம். உச்ச நீதிமன்றம் இப்போது கோடைகால விடுமுறையில் இருக்கிறது. ஜூலை 1-ம் தேதியில் இருந்துதான் செயல்படும். ‘இந்த மனு மீது மூன்றுவிதமாகக் கையாளப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கலாம். இல்லை என்றால் மனுவை ஏற்றுக்கொண்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்காமல் மேல்முறையீட்டு விசாரணையை மட்டும் தொடங்கலாம் அல்லது ஆரம்பத்திலேயே இந்த மனுவை தள்ளுபடி செய்யலாம்’ என்று சொல்கிறார்கள். காத்திருப்போம்” என்றபடி சிறிது இடைவெளிவிட்டார் கழுகார்.
‘‘எப்படி இருக்கிறது ஆர்.கே.நகர்” என்று இடைத்தேர்தல் பக்கமாக கழுகாரைத் திருப்பினோம்.

‘‘ஆர்.கே.நகரில் ஜெயிப்பது பிரச்னை இல்லை. அ.தி.மு.க-வுக்கு விழும் ஓட்டுகள் குறைந்தால் பொறுப்பாளர் தொடங்கி கீழ்மட்ட நிர்வாகிகள் வரை இந்த சங்கிலித் தொடர் ஆட்கள் சீட்டுக்கட்டுபோல சரிந்துவிடுவார்கள். அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் என்பதால், கரன்ஸிகளைக் கொட்டி தேர்தல் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிரதான எதிர்க் கட்சிகள் போட்டியிடவில்லை என்றபோதும் இதய தெய்வம் நிற்கிறாரே என பயத்தில் நிர்வாகிகளின் இதயங்கள் லப் டப்புக்கு பதிலாக திக்... திக்... என துடித்துக் கொண்டிருக்கின்றன!”
‘‘கவனிப்புகள் அதிகமோ?”
‘‘ஒவ்வொருவரும் அவர்கள் லெவலுக்குச் செலவு செய்து வருகின்றனர். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஏரியாவில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்குப் போய், ‘நகை அடகு வைத்திருக்கிறீர்களா?’ என்று கேட்டு, ரசீதை வாங்கிச் சென்று நகையை மீட்டு கொடுத்ததாகச் சொல்கின்றனர்.  ஒருமாத பட்ஜெட் மளிகை சாமான் லிஸ்ட்டை வாங்கிச் சென்று தெருவில் உள்ள கடைகளில் கொடுத்து இலவசமாக விநியோகிக்கச் சொன்னதாகவும் சொல்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் சின்ன நோட்புக் போட்டு சரக்கு வாங்கும்போதெல்லாம் குறித்து வைக்கச் சொன்னார்கள். பிறகு, அந்தப் பணத்தை இவர்களே செலுத்தினார்களாம். ‘பள்ளி, கல்லூரிகளில் ஸீட் வேண்டுமா’ என்று கூவிக்கூவி அழைத்தனர். கடைசி நேரத்தில் ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும் என்றும் சொல்லிவிட்டுப் போனார்கள்!’’
‘‘ஸ்பெஷல் கவனிப்பு?”
‘‘சுமார் இரண்டு லட்சம் கவர்களுக்கு ஆர்டர் கொடுத்திருந்தார்கள். பல்வேறு வண்ணங்களில் டோக்கன்களையும் ரெடி பண்ணி வைத்திருந்தார்கள். ‘எங்கே வந்து டோக்கன் வாங்கிக்கொள்ள வேண்டும், டோக்கனை எங்கே கொடுத்தால் கவர் கிடைக்கும்...’ என்றெல்லாம் வாக்காளர்களுக்கும் தகவல் சொல்லிவிட்டனர். எதிர்க் கட்சிகள், தேர்தல் கமிஷன் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, எப்படி விநியோகிப்பது என்பது பற்றி வகுப்புகளே நடந்தன!”
‘‘அப்புறம்....?”
‘‘கடந்த திங்கள்கிழமை ஜெயலலிதா பிரசாரத்துக்கு ஆர்.கே.நகர் வந்து போனார் அல்லவா... அன்று காலை கார்டனில் இருந்து ஓ.பி.எஸ்-ஸுக்கு திடீர் அழைப்பு. தேர்தல் பிரசாரம் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்த முதல்வர், சில ஆலோசனைகளைச் சொல்லி இருக்கிறார். ‘தேர்தலில் நான் நிற்கிறேன். அதனால் அனைவரும் மிக உன்னிப்பாகக் கவனிப்பார்கள். எனவே, கடைசி நேரங்களில் கவனமாக நடந்து கொள்ளுங்கள்’ என்று எச்சரிக்கை செய்தாராம். ‘ஓட்டு வித்தியாசத்தில் நான் சரித்திர சாதனை செய்ய விரும்பவில்லை. செய்த சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் இவற்றை வீடு வீடாகப் போய் பிரசாரம் செய்யுங்கள். அதுவே போதும். மற்றபடி எந்த முஸ்தீபுகளும் வேண்டாம்.’ என்று சொன்னாராம். ‘பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக வந்துவிடக் கூடாது என்று அம்மா நினைப்பதாக அமைச்சர்களுக்கு செய்தி வந்து சேர்ந்தது. ‘மக்களுக்கு அம்மாவை நன்றாகத் தெரியும். நிச்சயம் வாக்களிப்பார்கள். பிரசாரம் மட்டும் செய்யுங்கள் போதும்’ என்று சொல்லிவிட்டதாகத் தகவல் வந்து சேர்ந்தது!”
‘‘நிர்வாகிகள் என்ன நினைக்கிறார்களாம்?”
‘‘பல நிர்வாகிகள் ஆரம்பத்தில் இதனை ஏற்கவில்லையாம். ‘அம்மாவுக்கு  சரித்திர சாதனை வெற்றியை வாங்கித் தரவேண்டியது நம்முடைய பொறுப்பு. அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வோம். தலைமைக் கழகத்தில் இருந்து தரவேண்டாம். நம்மிடம் இருப்பதைக் கொடுப்போம்’ என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். ‘தலைமையின்   கட்டளையை மட்டும் செய்யுங்க...’ என்று அவர்களை சீனியர் அமைச்சர் ஒருவர்  கட்டுப்படுத்தி உள்ளார். ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்களிடம், ‘கருணாநிதி கட்சிக்காரங்க ரகசியமா வேவு பார்க்கிறாங்க. பணம் கொடுத்தால் அம்மாவுக்கு சிக்கல் வந்துடும். தேர்தல் முடியட்டும்’ என்று சொல்லி வருகிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்’’ என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ‘‘ ‘நோ மணி... நோ மணி...’ ’’ என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே பறந்தார்.

'

இது பெரிய குடும்பம்!
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது 50-வது திருமண ஆண்டை, 24-ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் குடும்பத்தோடு கொண்டாடினார். கேக் வெட்டிய ராமதாஸ், முதலில் தன் மனைவி சரஸ்வதிக்கு ஊட்டினார். இரவு உணவுக்குப் பிறகு குரூப் போட்டோ எடுக்கும் வைபவமும் நடந்தது. அதில், ராமதாஸ் குடும்பத்தினர் 30-க்கும் மேற்பட்டவர்கள் சூழ்ந்து உட்கார, ‘நம்ம குடும்பம் எவ்வளவு பெருசு பார்த்தியா?’ என்று தன் மனைவியிடம் சொல்லிச் சிரித்தார் ராமதாஸ்.

No comments:

Post a Comment