சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jun 2015

அரசு கல்லூரிகளின் தரம் ஆரம்ப பள்ளிகளில் ஏன் இல்லை?

ல்வி இன்று வியாபாரமாகி விட்டது. அரசு நடத்த வேண்டிய கல்வி நிறுவனங்கள் தனியார் கையில் இருக்கிறது. தனியார் பள்ளிக்கும், அரசு பள்ளிக்கும் இடையே உள்ள கல்வித்தர வேறுபாட்டினால்தான், தனியார் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் படையெடுக்கின்றனர். இதற்காகவே சமச்சீர் கல்வி முறையை அரசு அறிமுகப்படுத்தியது.
 

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பல்வேறு முயற்சிகள் முன்னெடுத்து வைக்கப்படுகின்றன. ஆனால் அவைகளில் பெரும்பாலானவைகள் திட்ட வடிவிலேயே இருந்துவிடுகின்றன. ஆங்கில வழிக்கல்வி அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அதற்கான ஆங்கிலப்புலமை சில ஆசிரியர்களிடம் இல்லை. இதனால் ஆங்கிலவழிக்கல்வி முறைக்கு வரவேற்பு, அரசு பள்ளிகளில் இல்லை. அரசு தரப்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி எதுவும் பெரியளவில் வழங்கப்படவில்லை.

அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால் தனியார் பள்ளிகளில், அதிலும் மாநில அளவில் ரேங்க் பிடித்த தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு இடம் கிடைக்காமல் பெற்றோர் திண்டாடுகின்றனர். அத்தகைய பள்ளி வாசலில் அட்மிஷனுக்காக தவம் கிடக்கிறார்கள். அரசு பள்ளிகளை விட குறிப்பிடும் வகையில் எந்தவித வசதிகளும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இல்லை. இடவசதி இல்லாமல் குறுகிய இடங்களிலேயே தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.

மேலும், தகுதியான ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதில்லை. இருப்பினும் தனியார் பள்ளிகளின் நிர்வாகத்திறனால் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாநில அளவில் ரேங்க் பிடித்து சாதனை படைத்து விடுகிறார்கள் மாணவர்கள். ஒருமுறை மாநில ரேங்க் கிடைத்தால்போதும், அதை விளம்பரப்படுத்தியே கட்டணத்தை அதிகப்படுத்திவிடுகிறார்கள்.
 
சென்னையில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியில், எல்கேஜி சேர்க்கைக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதையும் செலுத்த வசதியான பெற்றோர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். நடுத்தர வர்கத்தினர்கள் மட்டுமே கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்படுகிறார்கள். வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்காக காத்திருக்கிறது அரசு மாநகராட்சி பள்ளிகள். இவ்வாறு ஒவ்வொருவரின் வசதிக்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவைகள் மாற்றப்பட வேண்டும்.

மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஒரே விதமான சீருடை பின்பற்றப்படுகிறது. ஆனால் சீருடையில் ஒற்றுமையை காட்டிவிட்டு, கட்டணத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்துவதில் எந்தவிதத்தில் நியாயம்? என்ற கேள்வி ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் உள்ளது.


ஆரம்பக்கல்வியை தனியாரிடம் கற்க விரும்புபவர்கள், உயர்கல்வியாக கருதப்படும் மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்டவைகளை மட்டும் ஏன் அரசிடம் கற்க விரும்புகிறார்கள். ஏனெனில் அரசு மருத்துவக்கல்லூரி, பொறியியல், வேளாண்மை கல்லூரிகளில் படித்தால் மட்டுமே சமூக அந்தஸ்து கிடைக்கிறது. அதோடு அத்தனை வசதிகளும் அங்கேயே கிடைக்கிறது என்று மாணவர்கள் கருதுகின்றனர். 

இன்றைய கல்வி ஆண்டில் கூட மருத்துவ கலந்தாய்வில் முதல் ரேங்க் பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் சென்னை அரசு மருத்துவக்கல்லூரியையே தேர்வு செய்தனர். இதுபோல பொறியியல் கலந்தாய்விலும் அரசு பொறியியல் கல்லூரிகளையே மாணவர்கள் தேர்ந்தெடுப்பதுண்டு. இவர்களின் ஆரம்பக்கல்வியை ஆராய்ந்தால் தனியார் பள்ளிகளிலேயே பிளஸ் 2 வரை பயின்று இருப்பார்கள். இந்த நிலையை மாற்ற அரசும், அதிகாரிகளும், ஆசிரியர்களும் முன்வர வேண்டும்.

தேர்வு முடிவின்போது தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்து முன்னிலையில் இருக்கும்போது, அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களும் சில நேரங்களில் தங்களின் திறமையை நிரூபித்து இருப்பார்கள்.
எனவே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் அரசு கல்லூரிகளைப் போல, ஆரம்ப கல்வியிலும் அரசு பள்ளிகள் சிறந்து விளங்க வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.



No comments:

Post a Comment