சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியாத நிலையை 'க்ளூலெஸ்' என்பார்கள். அப்படி ஒரு க்ளூ கிடைக்காமல் 30 வருடங்கள் சிறையில் இருந்த 'ஜோ' என்கிற ஜோசப் சால்வாடியின் கதை இது!
பாஸ்டன் நகரில் தன் அன்பான குடும்பத்துடன் வாழ்ந்த சராசரி நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர் ஜோசப். திடீர் பணத் தேவைகளுக்கு கந்து வட்டிக்காரர் ஒருவரிடம் பணம் வாங்குவது இவரது வழக்கம். ஒருநாள் தனக்குத் தர வேண்டிய 400 டாலரை உடனே திருப்பிக்கேட்டு அடியாட்களை அனுப்பி வைத்தார் கந்து வட்டிக்காரர். இரு தரப்புக்கும் இடையே கைகலப்பாக, கட்டையை எடுத்து அவர்களை ஜோசப் விரட்ட.. விஷயம் விபரீதமானது. ஏனென்றால் கந்துவட்டிக்காரர் சார்பாகஅடியாட்களை அனுப்பியது பார்போஸா என்ற வில்லன். 30-க்கும் மேற்பட்ட கொலைகள் செய்த இந்தக் கொடிய கொலைகாரன், போலீஸ் உளவாளியும்கூட. தான் அனுப்பிய ஆட்களை ஜோசப் அவமானப்படுத்திவிட்டார் என்றவுடன், ஒரு துண்டுச்சீட்டில் 'உனக்குச் சரியான நேரத்தில் மிகப் பெரிய பரிசு காத்திருக்கிறது!' என எழுதி அனுப்பினான். அப்போது ஜோசப்புக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை. சில வருடங்கள் கழித்து 1965-ல் எட்வார்ட் டீகன் என்பவரை ஒரு மாஃபியா கும்பல் சுட்டுக் கொன்றது. இந்த வழக்கில் சாட்சியாக கோர்ட்டுக்குப் போன பார்போஸா, கொலைகாரர் என்று ஜோசப்பைக் கை காட்டினான். எவ்வளவோ முறையிட்டும் நீதி கிடைக்காத ஜோசப், 35 வயதில் குடும்பத்தைப் பிரிந்து சிறைக்குள் போனார். தண்டனைக் காலம் முழுவதுமாக முடிவடையாத நிலையில் 30 வருடங்கள் கழித்து 1997-ல் திடீரென விடுவிக்கப்பட்டார். எப்படி? சிறைக்குள் இருந்த ஜோசப் தனது வக்கீல் மூலமாக தனக்கான ஆதாரங்களைச் சேகரித்துவந்தார். அதில் பார்போஸா எழுதிக்கொடுத்த துண்டுச்சீட்டும் ஒன்று. அது கடைசி வரையில் கிடைக்கவில்லை. ஆனால், ஜோசப்பின் வக்கீல் எஃப்.பி.ஐ-.யின் ஃபைல்களைப் புரட்டும்போதுதான் அவருக்கு அந்த க்ளூ கிடைத்தது. எஃப்.பி.ஐ-யின் முதல் எஃப்.ஐ.ஆர்-ல் ஜோசப் பின் பெயர் இல்லை. பிறகு இரண்டாவதாக ஒரு எஃப்.ஐ.ஆர். போட்டு அதில் வலுக் கட்டாயமாக அவர் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தது. இதையே ஆதாரமாகக்கொண்டு ஜோசப் வெளியே வந்தார். 101 மில்லியன் டாலர் நஷ்ட ஈடும் பெற்றார். உலகின் அதிக நஷ்டஈடு தொகை இதுதான். ஆனால், இளமையை இழந்து பணத்தை வைத்து என்ன செய்ய?
No comments:
Post a Comment