சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jun 2015

சேலை, வேட்டி, சுடிதார் டோர் டெலிவரி: இது ஆர்கேநகர் ஸ்டைல்!

சென்னை ஆர்.கே. நகர் அ.தி.மு.க தொண்டர்களின் கூடாராமாக மாறி இருக்கிறது. தொகுதியில் எந்த தெருக்களிலும், ஏன் சந்துக்களிலும் அ.தி.மு.க கரை வேட்டிகள் கூடி நிற்கிறார்கள்.
ஒவ்வொரு வீடுகளுக்கு முன்பும் நாற்காலியில் அமர்ந்து அ.தி.மு.கவினர் திண்ணை பிரச்சாரம் செய்கிறார்கள். நான்கு, ஐந்து தெருக்களுக்கு ஒரு அமைச்சர் என்ற விகிதத்தில் தேர்தல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
 

தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்.கே. நகரில் குழுமி இருக்கிறார்கள். இவர்களை கடந்துதான் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் தொடங்கி, டிராபிக் ராமசாமி உள்ளிட்ட இதர வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு செல்லும் சூழ்நிலை தொகுதியில் நிலவுகிறது. இதன்காரணமாக தொகுதியில் அ.தி.மு.க தொண்டர்களுக்கும், மற்ற கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாய்தகராறு சர்வசாதாரணமாக நடக்கிறது. இதில் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாகவே காவல்துறையினரும், தேர்தல் கமிஷனும் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

தொகுதி முழுவதும் ரவுண்டு அடித்ததில் அப்பட்டமாக தேர்தல் விதிமீறல்கள் தென்படுகின்றன. அந்தப்பகுதியை கடந்து, 'தேர்தல் அவசரம்' என்ற ஜீப்களில் அதிகாரிகள் வேகமாக எங்கே செல்கிறார்கள்..? எதற்காக இந்த அவசரம்? என்று மட்டும் தெரியவில்லை. பாதாள சாக்கடையிலிருந்து கிடப்பில் போடப்பட்ட அனைத்து பணிகளும் ஜரூராக நடந்து வருகின்றன.
 
ஒவ்வொரு வீடாக செல்லும் அ.தி.மு.கவினர், முதலில் கேட்கும் கேள்வி, 'உங்களுக்கு என்ன குறை?' அந்த வீட்டில் என்பதுதான். தெருவில் உள்ளவர்கள் சொல்லும் குறைகளுக்கு அடுத்த அரைமணி நேரத்தில் தீர்வு காண அரசு இயந்திரம் முடுக்கிவிடப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை இந்த தொகுதியில் பிரதான பிரச்னை குடிநீர். குடிநீர் லாரிகளுக்காக மக்கள் காத்திருந்த காலம் இப்போது மாறி, மக்களுக்காக குடிநீர் லாரிகள் காத்துக்கிடக்கின்றன.

கழிவறை தேங்கி நிற்பதாக ஒரு தகவல் சொன்னால்போதும் அடுத்த சில நிமிடங்களில் அதை அகற்ற வாகனங்கள் வந்து நிற்கின்றன. தொகுதியில் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் புத்தம் புதிய நோட்டுக்கள் சர்வசாதாரணமாக புரளுகின்றன. 500 ரூபாய் நோட்டு கொடுத்து டீ குடிக்கின்றனர் ஆளுங்கட்சியினர்.

ஜவுளி நகரமான வண்ணாரப்பேட்டையில் உள்ள கடைகளில் வியாபாரம் படு ஜரூராக நடக்கிறதாம். இங்கு சேலை, வேட்டி, சுடிதார் மற்றும் துணிகளாக மொத்தமாக ஆர்டர் கொடுக்கிறார்களாம் ஆளுங்கட்சியினர். அந்த கடையிலிருந்தே குறிப்பிட்ட தெருவுக்கு டோர் டெலிவரி செய்யப்படுகிறதாம்.
 
ஒவ்வொரு வீடு, வீடாக ஓட்டு கேட்க செல்லும் ஆளுங்கட்சியினர், வீட்டில் உள்ளவர்களின் விவரங்களை குறிப்பெடுத்து கொள்ள மறப்பதில்லை. அந்த விவரங்கள்தான் இந்த டோர் டெலிவரிக்கு பயன்படுகிறதாம். அடுத்து தொகுதியில் உள்ள ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிகள் கையில், அந்த தொகுதி வாக்காளர்களின் பட்டியல் இருக்கிறது. அதில் எத்தனைபேர் ஆளுங்கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள், நடுநிலையாளர்கள் எத்தனை பேர், இதர கட்சியை சேர்ந்தவர்கள் யார்? தொகுதியை விட்டு வெளியில் குடியிருப்பவர்கள் யார்? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் லேப்டாப்பில் சேகரித்து வைத்திருக்கிறார்கள் ஆளுங்கட்சியினர். லேப்டாப் இல்லாதவர்கள் கையில் பிரிண்ட்அவுட் இருக்கிறது. அதன்அடிப்படையில் தேர்தல் கவனிப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

ஆளுங்கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள், நடிகைகள், நடிகர்களின் பிரசாரம் படுகேவலமாக இருக்கிறதாம். அதில் அதிகளவில் கலாய்க்கப்படுகிறார் டிராபிக் ராமசாமி. '92 வயது கிழவனையே படுக்க வைத்துவிட்டோம். 87 வயதாகும் உன்னை என்ன செய்யப்போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாரு'. அடுத்து, 'குடிகார விஜயகாந்த்தே... முதலில் நிதானமாக நின்று மைக்கைப்பிடித்து பேசு. வசனம் போல வெட்டி வீரம் பேசும் வைகோவே, 5 மாவட்டங்களில் செல்வாக்கு வைத்திருக்கும் ராமதாசே... உனக்கு தமிழகத்தை ஆள ஆசை எதற்கு. உன்னுடைய மகன் மீதே ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் போது ஊழலைப்பத்தி பேச உனக்கு என்ன அருகதை இருக்கு...?' என்பதே நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சாக இருக்கிறதாம்.
 

கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.மகேந்திரன் பிரச்சாரத்தின் போது 4 பக்க நோட்டீஸையும் எடுத்து செல்கிறார். அதில் அந்த தொகுதியில் உள்ள பிரச்னைகளை புட்டு புட்டாக வைத்து போட்டியிடும் ஜெயலலிதாவுக்கும் சில கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்.
சமூக வலைத்தளம் வழியாகவும் கம்யூனிஸ்ட்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். முகநூலில், 'ஜெயாவுக்கு வேட்டு கம்யூனிஸ்ட்டுக்கு ஓட்டு', 'ஆர்.கே. நகர் தேர்தல்- சிஎம் VS சிஎம்' என்று அக்கவுண்ட் தொடங்கி, அதில் தொகுதியில் உள்ள பிரச்னைகளை அலசி ஆராய்ந்து புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்கு கமென்ட்ஸ்களும் பொது மக்கள் தரப்பில் அள்ளி குவிக்கப்படுகிறது.

"ஈழத்தில் சிங்கள ராணுவத்தின் பிடியில் மக்கள் இருந்ததைப் போல ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் கரைவேட்டி, வெள்ளை சட்டை அணிந்த ஆளுங்கட்சியினரின் பிடியில் இருக்கிறார்கள்" என்கிறார் தோழர் ஒருவர்.No comments:

Post a Comment