சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Jun 2015

தல Vs தளபதி

ச்சர்யம்... இந்திய கிரிக்கெட் அணிக்குள் இப்போது இரண்டு கேப்டன்கள்! 
'டீம் இந்தியா’வில் இது மிக அரிதான காட்சி. மகேந்திரசிங் தோனி (ஒரு நாள்), விராட் கோஹ்லி (டெஸ்ட்) என இரண்டு கேப்டன்கள், இப்போது ஒரு நாள் போட்டிகளில்  விளையாடுகிறார்கள். இருவரிடமும் எந்தவிதமான ஈகோ மோதல்களும் இல்லைதான். ஆனால், அவர்களை பகடைக்காய்களாக வைத்து ஓர் அரசியலை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி, விரைவில் பயிற்சியாளர் ஆகவிருக்கிறார். சச்சின், கங்குலி, லக்‌ஷ்மண் போன்ற சீனியர் வீரர்கள், அணியின் ஆலோசகர்களாக நியமிக்கப்படுவார்கள். ஆனால், அவர்களின் வேலை என்ன என்ற தெளிவின்மை நிலவுகிறது. களத்துக்கு வெளியே நிலவும் அரசியல், இந்திய அணியைப் பாதிக்கும் சிக்னல்கள் அழுத்தமாக வெளிப்படுகின்றன!

களப் பலிக்குத் தயாராகும் தோனி !
இந்திய அணியின் கேப்டனாக தோனி எப்படி உருவாக்கப்பட்டாரோ, அதே ரூட்டில்தான் கோஹ்லியும் கேப்டன் ஆக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அதில் ஒரு சின்ன மாற்றம். 2007-ம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்னர் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி. டெஸ்ட் அணிக்கு கும்ப்ளே கேப்டனாக இருந்தார். இப்போது ஒரு நாள், டி20 போட்டிகளுக்கு தோனி கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு கோஹ்லி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
'ஓடும் லாரிக்கு முன்னால் போய் நில்லுங்கள்’ எனச் சொன்னால், தயங்காமல் போய் நிற்கக்கூடிய 16 பேர்தான் எனக்கு வேண்டும்’ என, ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதும் சொன்னார் தோனி. அப்போது இந்திய அணியில் சச்சின், கங்குலி, டிராவிட், ஷேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான்... என சீனியர்களின் படையே இருந்தது. சீனியர்களை தனக்கு ஆலோசகர்களாகவும், ஜூனியர்களை தன் நண்பர்களாகவும் வைத்துக்கொண்டு வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்தார் தோனி.
2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டம், தோனிக்கும் இந்திய அணிக்கும் பொற்காலம். டி20 உலகக் கோப்பை வெற்றி, பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை சுற்றுப்பயணங்களில் வெற்றி, உலகின் நம்பர்-1 டெஸ்ட் ரேங்கிங் எனக் குவிந்த வெற்றிகளின் உச்சமாக, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையையும் வென்றது இந்திய அணி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற உலகக் கோப்பையை, தோனியின் சாதனையாகவே கொண்டாடியது கிரிக்கெட் உலகம். ஆனால், அது வரை மெகா வெற்றிகளைக் குவித்த தோனி அணி, அதன் பிறகு எதிர்கொண்டது  மெகா சறுக்கல்கள்!
ஒரு கதை சொல்வார்கள். பிரான்ஸில் நடைபெற்ற ஒரு போரில் வெற்றிக்குப் பிறகு, போரைத் தலைமையேற்று நடத்திய பிரெஞ்சு ஜெனரலிடம், 'இந்த வெற்றிக்குக் காரணம், உங்கள் படையின் துணைத் தளபதிதானே?’ எனக் கேட்டார்களாம். அதற்கு அந்தத் தளபதி, 'நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மைதான். ஆனால், இந்தப் போரில் தோல்வியடைந்திருந்தால் நான் மட்டுமே அதற்கு முழுப் பொறுப்பாகி இருப்பேன். இந்தக் கேள்வியே எழுந்திருக்காது’ என்றாராம். தோனி கதையில் நடப்பதும் இதுதான். இந்திய அணி வெற்றி பெறும்போது, தோனி இருக்கும் இடமே தெரியாது. எந்த வெற்றிப் பேரணிகளிலும் தோனி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு முன்னால் நடந்தது இல்லை. கோப்பைகளுடன் வலம் வந்தது இல்லை. ஆனால், இந்திய அணி தோல்வியைச் சந்திக்கும்போது எல்லாம் முதல் ஆளாக முன்னால் வந்து நிற்பார்.
தோனி கேப்டனாக இருந்த கடந்த ஏழு ஆண்டுகளில், அணி வெற்றி பெற்றால் போட்டி முடிந்ததும் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு 'மேன் ஆஃப் தி மேட்ச்’ பட்டம் வென்றவரைத்தான் அனுப்பிவைப்பார் தோனி. ஆனால், தோல்வியடையும் போட்டிகளின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு தோனியைத் தவிர, வேறு யாரும் வந்தது இல்லை. 2007-2011-ம் ஆண்டு காலகட்ட வெற்றிகளுக்கு சச்சின், ஷேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான் எனப் பலருக்கும் பாராட்டுக்கள் பகிர்ந்து அளிக்கப்பட, 2011-2015-ம் ஆண்டு காலகட்டத் தோல்விகளுக்கு தோனி மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டார். அணியின் நட்சத்திர ப்ளேயர்களான கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ஜடேஜா... என யாருமே சீனில் இல்லை.
ரவிசாஸ்திரி ஏன்?
33 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய, அணி வீரர்களுக்குள் நல்ல நட்புறவு கொண்டிராத விராட் கோஹ்லி எப்படி டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்? அதற்கும் ரவிசாஸ்திரியின் வருகைக்கும் முடிச்சுப்போடுகிறது கிரிக்கெட் வட்டாரம்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது கோஹ்லிக்கும் ஷிகர் தவானுக்கும் இடையே வெடித்த மோதல், தோனியை மிகவும் பாதித்ததாகச் சொல்கிறார்கள். தோனி தலைமையில் செயல்படத் தொடங்கியதில் இருந்து, அணி வீரர்களுக்குள் அப்படி ஒரு சண்டை வந்ததே இல்லை. கோஹ்லி - தவான் இடையிலான சண்டையில் கோஹ்லியை ஆதரித்திருக்கிறார் அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி. பின்னர் ஆஸ்திரேலியாவில் அணியினருக்கு விருந்து கொடுத்திருக்கிறார் ரவிசாஸ்திரி. அப்போது, 'அணிக்குள் இளம் வீரர்கள் முக்கியமான இடத்தைப் பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் இளம் வீரர்களின் பக்கம்தான் இருப்பேன். நீங்கள் நினைப்பதைவிடவும் நான் அணிக்குள் நீண்ட காலம் இருப்பேன்’ என வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் ரவிசாஸ்திரி.
இவரின் இயக்குநர் நியமனமே, தனக்கு எதிராகச் செயல்படும் மும்பை பி.சி.சி.ஐ-யின் லாபி என்பதைப் புரிந்துகொண்டார் தோனி. அதனால்தான் டெஸ்ட் தொடரின் இடையிலேயே டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இதேபோல சர்ச்சை கிளப்பி விரைவில் ஒரு நாள் போட்டி கேப்டன் பொறுப்பில் இருந்தும் தன்னை நீக்க முயற்சிப்பார்கள் என்பதையும் உணர்ந்திருக்கிறார்.
கங்குலிக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கேப்டனாக இருந்தவர் தோனி. 'நான் பல கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறேன். அதில் தோனிதான் சிறந்தவர்’ என, சச்சின் டெண்டுல்கராலேயே புகழப்பட்டவர் தோனி. அந்த அளவுக்குத் தலைமைப் பண்புகள் நிறைந்த தோனிக்கு, மாற்றாக முன்வைக்கப்படும் கோஹ்லியிடம் வேகமும் துடிப்பும் மட்டுமே இருக்கின்றன.
தலதளபதி... ஓர் ஒப்பீடு!
வெற்றி கிடைக்கும் வரை வியூகங்களை மாற்றிக்கொண்டே இருப்பதும், அணியினரின் திறமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதிலுமே ஒரு கேப்டனின் பொறுப்பு வெளிப்படும். அதை கோஹ்லி சரியாகச் செய்வாரா என்பதற்கு, காலம்தான் பதில் சொல்லும்! 

No comments:

Post a Comment