சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jun 2015

ஜூன் 25: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம்

விஸ்வநாத் பிரதாப் சிங், சுருக்கமாக வி.பி.சிங் என அழைக்கப்பட்ட இவர், மிகக்குறுகிய காலம் நாட்டை ஆண்ட மிகச்சிறந்த பிரதமர். நேருவின் காலத்தில் அரசியலில் குதித்த இவர், ராஜ வம்சத்தை சேர்ந்தவர்,இன்னொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டவர்.வினோபாபாவேவின் பூமிதான இயக்கத்தில் கலந்து கொண்டு தன்னுடைய எல்லா நிலங்களையும் ஏழைகளுக்கு கொடுத்தார்.
இந்திரா அமைச்சரவையில் இருமுறை இடம்பிடித்த இவர். எமெர்ஜென்சியில் ஆட்சியை இழந்து பின் மீண்டும் ஆட்சியை காங்கிரஸ் பிடித்த பின்பு சஞ்சய் காந்தியுடன் இருந்த நெருக்கத்தால் உத்தர பிரதேசத்தின் முதல்வர் ஆனார் மனிதர். கொள்ளையர்களை அடக்க பல நடவடிக்கைகள் எடுத்தார் .

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொள்ளையர்களை ஒடுக்கி விடுகிறேன் என்று தீவிரமாக இயங்கியவர் தன்னுடைய சகோதரரே கொள்ளையர்களால் உயிரிழந்தபொழுது பதவி விலகுவதாக சொல்லி நாற்காலியை துறந்தார். இந்திராவின் மறைவுக்கு பிந்திய ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சர் ஆனார்,அம்பானிக்கள்,வாடியாக்கள் உட்பட பல வரி ஏய்ப்பு செய்பவர்களை வாட்டி எடுத்தார் ,வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்குகளை ஃபேர்ர்பாக்ஸ் என்கிற அமைப்பை கொண்டு விசாரித்தார்.
காங்கிரசுக்கு கரன்சிகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்த பலரின் தலைகள் உருளுவதை ராஜீவ் பார்த்து இவரை நிதி மந்திரி பதவியில் இருந்து நகர்த்தி பாதுகாப்பு மந்திரி ஆக்கினார். HDW நீர்மூழ்கி கப்பல் வாங்குவதில் நடந்த முறைகேடுகளை அவர் துருவி எடுக்க ராஜீவ் அதிர்ந்தார். அங்கேயும் தீவிரமாக இயங்கி போபர்ஸ் பீரங்கி ஊழலை நோண்டி எடுத்தார் ;பல ஆதாரங்கள் இவரிடம் இருப்பதாக கிசுகிசுக்கபட இவரை அமைச்சரவையை விட்டு இறக்கினார் ராஜீவ்.
ஜன் மோர்ச்சா தனிக்கட்சியை தொடங்கினார் வி.பி.சிங்.  தேர்தல் நடந்தது. காங்கிரசிற்கு மெஜாரிட்டி இல்லாமல் போகவே பிஜேபி ஆதரவோடு ஆட்சி அமைத்தார். பி.ஜே.பியின் நிர்ப்பந்தத்தால் பிரச்னைக்குரிய ஜக்மோகனை காஷ்மீர் கவர்னர் ஆக்கினார். காஷ்மீரை இன்னமும் ரத்தம் தோய்ந்த பூமியாக அவரின் செயல்கள் ஆக்கின.
இந்திய அமைதிப்படையை இலங்கையை விட்டு வெளியேற்றினார். பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். கூடவே,பஞ்சாப் பில் அமைதி திரும்ப மனதார முன்னெடுப்புகள் எடுத்தார். இவரின் புகழ் உச்சத்தை நெருங்குவதை கவலையோடு காங்கிரஸ் மற்றும் பிஜேபி கவனித்தன
வெகுகாலமாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷனின் பரிந்துரையான பிற்படுத்தபட்டோருக்கு 27 % இடஒதுக்கீட்டை தனி மெஜாரிட்டி இல்லாத பொழுதும் தைரியமாக அமல்படுத்தினார். அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள்,தீக்குளிப்புகள் முதலியவை உயர் ஜாதியினரால் நிகழ்த்தப்பட்ட பொழுதும் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். சோம்நாத்தில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை கிளம்புவதாக அத்வானி சொல்ல, ஆட்சி பறிபோகும் எனத்தெரிந்தும் அறம் சார்ந்து அவரைக்கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சி பறிபோனது.
அதற்கு பின்பு நடந்த அரசியல் கூட்டமொன்றில் இவர் அமர்ந்திருக்கும் பொழுது மேடையின் மீது கற்கள் வீசப்பட்டன. சரத் யாதவ்,அஜித் சிங் முதலியோர் தாக்கப்பட்டார்கள். அப்பொழுது இவர் இப்படி தீர்க்கமாக சொன்னார்,"நான் ரத்தமும்,சதையுமாக உங்கள் முன் நிற்கிறேன். என்னை தாக்க வேண்டுமென்றால் என்னை மட்டும் தாக்குங்கள் ; நான் சமூக நீதிக்காக,சமூகத்தின் சமத்துவத்துக்காக செயல்பட்டேன் என்கிற உறுதி எனக்கு உள்ளது !" என்றார். கலவரக்காரர்கள் அமைதியானார்கள்.

ஆட்சி போனதும் தேர்தல் வந்தது ராஜீவின் மரணம் காங்கிரசை அரியணை ஏற்ற நல்ல பிரதமர் ஒருவரின் காலம் முடிவுக்கு வந்தது. மீண்டும் ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பு கிடைத்த பொழுதும் அதை மறுத்தார். அதற்கு இப்படி காரணம் சொன்னார் ,“இந்த அரசியலின் நோக்கம் நூற்றாண்டுகளாக அரசியல்,சமூக மற்றும் பொருளாதார திகாரம்,உரிமைகள்,சலுகைகள்மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அவற்றை வழங்குவதே ஆகும். அவர்கள் எதை கேட்கிறார்களோ எதை பெறுகிறார்களோ அது அவர்களுக்கு நியாயமாக உரியது. ஆகவே,அந்த சமூகங்களில் இருந்து தலைவர்கள் எழுந்து அதிகாரம் பெற்று அதை சிறப்பாக பயன்படுத்துகிற பொழுது என் வரலாற்று பங்களிப்பு முழுமை பெறுகிறது. பதவி என்பது இங்கே முக்கியமில்லை !" என்று கம்பீரமாக சொன்ன அந்த தபோவனத்து முனிவர் அப்படி எழுந்த கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் இல்லாததை விமர்சிக்கவும் தவறவில்லை.
அவரின் கவிதை நூலுக்கு ,'ஒரு துளி வானம்,ஒரு துளி கடல்' என்று அவர் பெயரிட்டு இருந்தார். பொழிந்து கொண்டே இருந்த வானாகவும்,தந்து கொண்டே இருந்த கடலாகவும் இருந்த அரசியலில் அழுக்காகாத அற்புத துளி அவர் !



No comments:

Post a Comment