சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Mar 2013

நேற்று வரை ஆட்டோ டிரைவர்... இன்று அட்வகேட் !

பதின்மூன்று வருடங்களாக ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த ஒரு பெண்தன் கடுமையான உழைப்பாலும்படிப்பாலும் இன்று வழக்கறிஞராக தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார்
பெங்களூரு மாநகரச் சாலையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் சில பெண்களில் நாற்பது வயதாகும் வெங்கடலட்சுமியும் ஒருவர்ஆனால்பதின்மூன்று வருடங்களாக ஆட்டோ ஒட்டிக் கொண்டே இவர் செய்திருக்கும் சாதனைஅனைத்து ஆட்டோ ஓட்டுநர்களையும் பெருமையடையச் செய்திருக்கிறதுஆம்இனி அவர் ஆட்டோ டிரைவர் மட்டுமல்லதற்போது ஓர் அட்வகேட்.




நேற்றுவரை தன் குடும்பத்திற்காகவும், தன் லட்சியக் கனவிற்காகவும் ஆட்டோ ஒட்டிக் கொண்டிருந்த அவர், அந்த வருமானத்தில் தன் மகளின் பள்ளிச் செலவு உட்பட குடும்பத் தேவைகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டே, பட்டப் படிப்பை முடித்ததோடு ஒரு வழக்கறிஞராகவும் பட்டம் பெற்றிருக்கிறார்.

ஏழைகளின் நீதிக்காக இனி வாதாடப் போகிறேன்" என்கிற லட்சுமியின் வாழ்க்கைப் போராட்டம் மிக நீண்டது...

பள்ளியில் படிக்கும்போதே வெங்கடலட்சுமிக்கு, எதிர்காலத்தில் வழக்கறிஞராக வர வேண்டும் என்பதுதான் கனவு. பள்ளி இறுதித் தேர்வில் முதல் மாணவியாக தேறியும் தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்திப் படிக்க இயலாதபடி குடும்பச் சூழ்நிலை தடுத்திருக்கிறது. ஆனாலும் அரசு கல்லூரியில் சேர்த்து படிக்கிறபோதுதான் அந்தச் சம்பவம் நடக்கிறது. கல்லூரி விட்டு திரும்பிக் கொண்டிருந்த இவரை ஆட்டோவில் வந்த ஒரு சமூக விரோதக் கும்பல் கடத்திச் சென்றிருக்கிறது. ஆனால் அவர்களிடம் தைரியமாகப் போராடி தப்பித்த வெங்கடலட்சுமி, போலீஸ் ஸ்டேஷன் சென்று அந்த ரௌடிகள் மீது புகார் கொடுத்திருக்கிறார்.

ஆனால், அந்த வழக்கு கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் இழுத்தடிக்கப்படும் என்று அப்போது லட்சுமி உணரவில்லை. அந்த ரௌடிகளுக்கு எதிராக லட்சுமி போராடுவதைக் கைவிடுமாறு போலீசாரும் குற்றவாளிகளின் வக்கீல்களும் இவரை பலமுறை நிர்பந்தித்த போதும், அதற்கு ஒப்புக் கொள்ளாமல் விடாப்பிடியாக அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தந்திருக்கிறார் லட்சுமி.

அடிக்கடி கோர்ட்டுக்கு அலைய வேண்டியிருந்ததால், கல்லூரிப் படிப்பு பாதியிலே நின்று போயிருக்கிறது. அம்மாவின் கட்டாயத்தின் பேரில் திருமணத்திற்குச் சம்மதித்திருக்கிறார், லட்சுமி. ஆனால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் வரதட்சணைக் கொடுமையால் நின்று போயிருக்கிறது. அப்போது குடும்ப நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான ராஜேந்திரா என்பவர், லட்சுமியைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்திருக்கிறார். வெல்டரான ராஜேந்திராவின் உழைப்பில் தட்டுத் தடுமாறி ஓடிக் கொண்டிருந்த குடும்பத்திற்குக் கிடைத்த மத்திய வங்கிக் கடன்தொகை, கணவருக்கு ஒரு ஆட்டோ வாங்கவும், சொந்தமாக அவர்கள் வீட்டிலேயே ஒரு மெஸ்ஸை ஆரம்பிக்கவும் வழி செய்திருக்கிறது.

இரண்டு வருடங்களில் மெஸ் வருமானமும் அதிகரித்ததோடு கணவருக்கும் துபாயில் வெல்டராக வேலை கிடைத்திருக்கிறது. அவர் வெளிநாடு போனதால், குழந்தையுடன் தனிமையில் இருந்த லட்சுமியிடம் வசதி படைத்த வீட்டு உரிமையாளரின் பாலியல் தொந்தரவும், அவருக்கு உடன்படாத காரணத்தால் அவருடன் ஏற்பட்ட மோதலாலும் லட்சுமி, தன் குழந்தையோடு அந்த மெஸ்ஸையும் வீட்டையும் விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்.

துபாயிலிருந்து வந்த கணவர் ராஜேந்தருக்கோ அங்கே தொடர்ந்து வெல்டிங் மிஷினில் ஈடுபட்டதால் கண் பார்வை குறைந்து போயிருக்கிறது. அதனால், அவர் மீண்டும் ஆட்டோ ஓட்ட முடியாத நிலை. இங்கேயும் லட்சுமி, மனம் தளரவில்லை. யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். கணவரிடமிருந்த ஆட்டோ சாவியை வாங்கி, அதே ஆட்டோவில் பயிற்சியும் அதற்கான லைசென்ஸையும் பெற்றிருக்கிறார், லட்சுமி. குடும்பச் செலவுகளுக்காக, லட்சுமியின் ஆட்டோ காலை முதல் நள்ளிரவு வரை ஓடிக் கொண்டிருந்தாலும் அதை, லட்சுமியின் ஆரம்பக்கால கனவு துரத்திக் கொண்டே இருந்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தில் முதலில் பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்கிறார் லட்சுமி.

பின்னர் பெங்களூரு பஸ்வேஷ்வரா நகரில் உள்ள, பாபு ஜெகஜீவன் ராம் சட்டக் கல்லூரியில், எல்.எல்.பி., படிக்க ஆரம்பித்திருக்கிறார். காலை எட்டு மணிக்கெல்லாம் ஆட்டோவில் தன் மகளைப் பள்ளியில் இறக்கிவிட்டு, ஒன்பது மணிக்கெல்லாம் சட்ட வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கிறார். பின்னர் மாலை முதல் நள்ளிரவு வரை ஆட்டோ சவாரி. வீட்டுக்குப் போன பிறகும் வகுப்புப் பாடங்களை மிக சிரத்தையாக படித்திருக்கிறார். எல்.எல்.பி. தேர்வில், அவர் வெற்றி பெற்றாலும் பார் கவுன்சில் தேர்வில் வெற்றி பெற்றால்தான், வழக்குகளில் ஆஜராக முடியும் என்பதால், அந்தத் தேர்வுக்காகவும் தன்னைக் கடுமையாக தயார்படுத்திக் கொண்டு அந்தத் தேர்வையும் சிறப்பாக எழுதி இருக்கிறார் லட்சுமி.

கடந்த பிப்ரவரி எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான பார் கவுன்சில் தேர்வில் லட்சுமி தேர்வான விஷயம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அந்த வெற்றிச் செய்தி தனக்கு எப்படிக் கிடைத்தது என்பதை லட்சுமி நெகிழ்வாக பகிர்ந்து கொள்கிறார்...

தற்போது ப்ளஸ் டூ படிக்கும் என் மகளை வழக்கம்போல பள்ளியில் விட ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு போய்க்கொண்டிருந்தேன். பின் சீட்டில் அவளுக்காக கஷ்டப்பட்டு நான் வாங்கிக் கொடுத்திருந்த லேப்டாப்பில் அவள் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென சத்தமாக கத்த ஆரம்பித்தாள்... அதிர்ச்சியோடு அவளை நான் திரும்பிப் பார்த்தேன். ‘அம்மா! பார் கவுன்சில் எக்ஸாம்ல நீ பாஸாயிட்டம்மா... நெட்ல ரிசல்ட் வந்திடுச்சு...’ என்று முகம் நிறைய மகிழ்ச்சியோடு அவள் சொன்னதும் என்னால் அதற்கு மேல் ஆட்டோவை ஓட்ட முடியவில்லை. ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கிப் போய் என் மகளை அப்படியே கட்டிப் பிடித்துக்கொண்டேன். இரண்டு பேர் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடுகிறது. போகிறவர்கள் எல்லாம், ‘என்னாச்சு இவர்களுக்கு?’ என்று பார்த்தபடியே செல்கிறார்கள். அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து வெளிவர ரொம்ப நேரமானது ..."

வெல்டன் அட்வகேட் வெங்கடலட்சுமி.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment