சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 May 2015

இந்த வாரம் பாமக யாருடன் கூட்டணி? திமுக நக்கல்!

"பாமக இந்த வாரம் யாருடன் கூட்டணி என்பது பற்றி உங்கள் கட்சி அலுவலகத்திற்கு வெளியே அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற நிலைமைதானே இன்றைக்கு இருக்கிறது? நீங்கள் கூட்டணி வைக்காத தமிழக கட்சி ஒன்றை சொல்ல முடியுமா?" என்று திமுக பொருளாளர் ஸ்டாலினை விமர்சித்த அன்புமணிக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது திமுக.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக எம்.பி. அன்புமணி எழுதிய கடிதத்துக்கு தருமபுரி தொகுதி முன்னாள் திமுக எம்.பி. இரா.தாமரைச்செல்வன் பதில் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதற்கு இதுவரை முதலமைச்சரிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால் அழைப்பே இல்லாமல் திருமணத்திற்கு ஆஜராகியிருக்கும் அன்புமணி குறிப்பாக திராவிட இயக்கம் வளர்த்த தொட்டிலில் வளர்ந்து டாக்டர் பட்டம் பெற்ற அன்புமணி, இன்றைக்கு பதில் சொல்கிறேன் என்ற போர்வையில் திக்குத் தெரியாமல் பாய்ந்திருக்கிறார்.

அன்புமணிக்கு பழைய அரசியல் தெரியாமல் போயிருக்கலாம். குறைந்த பட்சம் அவர் தனது தந்தையிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். "தேர்தல் திருடர்கள் பாதை" என்றும் "தேர்தலை புறக்கணிப்போம்" என்று கூறித்தானே இந்த சமுதாயத்தை வளைத்துப் போட நினைத்தீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி துவங்கிய பிறகு "என் உயிர்மூச்சு உள்ளவரை நானோ அல்லது என் வாரிசுகளோ எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவிக்கு போட்டியிடமாட்டோம்" என்றுதானே உரக்கக் குரல் எழுப்பி நலிவடைந்து கிடந்த வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றினீர்கள்?


ஆனால் எங்கள் தலைவர் கலைஞர் அப்படியல்ல. வன்னியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீடு கிடைக்காமல் தவித்த போது கை தூக்கி விட தலைவர் கலைஞர்தான். அன்று கூட அவர் தன்னிச்சையாக இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கலாம். ஆனால் அன்புமணியின் தந்தையை அழைத்துப் பேசி வன்னியர் சமுதாயத்திற்காக முதன் முதலில் 20 சதவீத இட ஒதுக்கீட்டும் மத்திய அரசில் வன்னியர் ஒருவருக்கு கேபினட் அமைச்சர் பதவியும் கொடுத்தவர்தான் கருணாநிதி. இல்லையென்று அன்புமணியால் மறுக்க முடியுமா?

இப்படி ஏதாவது ஒரு சாதனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக கோலோச்சிய அன்புமணி தன் துறையில் வன்னிய சமுதாயத்திற்காக செய்ததாகக் கூற முடியுமா? அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டால் அரசு பணிகளிலும், தலைமைச் செயலகங்களிலும் இன்று வன்னியர் சமுதாயத்தினர் முக்கிய பதவிகளுக்கு வந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

ஆனால் அதை அன்புமணியின் தந்தை மறக்கவில்லை. இட ஒதுக்கீடு வழங்கிய தலைவர் கருணாநிதியை இதே விழுப்புரம் மாவட்டத்திற்கு அழைத்து வந்து கூட்டம் போட்டு, தனியாக நாற்காலி ஒன்றுப் போட்டு "கருணாநிதி முதல்வராக வந்தால்தான் சமூக நீதி காப்பாற்றப்படும்" என்று பகிரங்கமாக அறிவித்தார்.

அன்புமணிக்குத் தெரியவில்லை என்றால் தன் தந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஏன் சமீபத்தில் கூட தன் பேத்தியின் திருமண விழாவில் பேசிய அன்புமணியின் தந்தை, "1989 ஆம் ஆண்டு ஆலிவர் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் இடஒதுக்கீடு பற்றி பேசிய நாள் முதல் எங்கள் நட்பு தொடர்கிறது" என்று கூறியதை ஏனோ அன்புமணி மறந்து விட்டது விந்தையாக இருக்கிறது.

அன்புமணி தன் பதவிக்காக எதையும் பேசி விட்டுப் போகட்டும். ஆனால் இந்த சமுதாயத்திற்காக தி.மு.க. ஆற்றிய பணிகளை கொச்சைப்படுத்திப் பேச வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வன்னிய சமுதாயத்தின் காவலனாக தொன்று தொட்டு நின்று வரும் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை குறை சொல்ல இந்த சமுதாயத்திற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத அன்புமணி சொல்வதற்கு தார்மீக உரிமை இல்லை. மத்திய அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார் அன்புமணி. மத்திய அரசு பணியில் வன்னியர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பது பற்றி என்றைக்காவது அவர் கோரிக்கை வைத்தது உண்டா? அது போகட்டும் வன்னியர் சமுதாய நலனிற்காக என்றைக்காவது ஒரு நாள் நாடாளுமன்றத்தில் இவர் பேசியதுண்டா?

தமிழுக்கு தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள் என்கிறார் அன்புமணி. இதோ அவரது தந்தை, கலைஞர் சமச்சீர் கல்வி கொண்டு வந்த போது பாராட்ட வில்லையா? அக்கல்வியை அடித்தட்டு மக்களும் பயன்பெற வேண்டும் என்று கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சி என்பது அன்புமணிக்கு ஞாபகம் இல்லையா?

ஏன் அவரது தந்தை “செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. கலைஞர் முதலமைச்சராக அதை நல்ல முறையில் செய்தார்” என்று பாராட்டினாரே அதையும் அன்புமணி மறந்து விட்டாரா? ஏன் அன்புமணி ராஜ்ய சபா சீட் பெறுவதற்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக வருவதற்கும் உதவி செய்தவர் கலைஞர்தான். தி.மு.க.வை விமர்சிக்கும் முன்பு அதை தன் நெஞ்சில் கைவைத்து ஒரு முறை யோசித்துக் கொள்ள வேண்டும். அப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரானவர் என்ன செய்தார்? இந்தூர் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு இன்றைக்கு டெல்லி நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நடந்து கொண்டிருக்கும் அன்புமணி ஊழல் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது. ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிக் கொண்டிருக்கும் அன்புமணி இன்றைக்கு ஊழலை ஒழிப்பேன் என்று பேசுவது விந்தையிலும் விந்தை.

உங்கள் தந்தை பா.ம.க.வை துவங்கும் போது என்ன சொன்னார்? "என் கட்சியில் உள்ளவர்கள் அல்லது நானே கூட ஊழல் அல்லது தவறு செய்தால் மக்கள் மன்றத்தின் முன்னாள் பகிரங்கமாக விசாரணை நடத்தி, அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முச்சந்தியில் நிற்க வைத்து என்னை சவுக்கால் அடியுங்கள்" என்று பிரகடனப்படுத்தினார். அவருக்குப் பிள்ளையாகி, மத்திய அமைச்சராகி நீங்கள் இன்றைக்கு சாதித்துள்ளது என்ன? சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறீர்கள்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து நீங்கள் தமிழகத்தின் நலனுக்காக என்ன செய்துள்ளீர்கள் என்று நீங்களே பட்டியலிட எண்ணினாலும் அது வெற்று காகிதமாகத் தான் இருக்க கூடும். ஏன் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நீங்கள் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை பேரை டாக்டராக்கினீர்கள்? உங்களால் பட்டியலிட முடியுமா?

“சமூக நீதி காப்பவர்” என்று கூறி தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பீர்கள். “அன்பு சகோதரி பார்த்துக் கொள்வார்” என்று கூறி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தீர்கள். ஏன் வாழப்பாடி ராமமூர்த்தி துவங்கிய ராஜீவ் காங்கிரஸுடன் கூட கூட்டணி வைத்தீர்கள். “என் வழக்கைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தீர்கள்.

“ஒரு சில கேள்விகளுக்கும், ஒரு சிலரைப் பற்றியும் நான் பதில் அளிப்பதில்லை” என்று உங்கள் தந்தை கூறிய பிறகும், விஜயகாந்தை தேடிச் சென்று சால்வை அணிவித்து “என் தொகுதியில் உங்கள் கட்சிக்காரர்களை வாக்களிக்கச் சொல்லுங்கள்” என்று கெஞ்சியது யார்?

நியூ உட்லன்ட்ஸ் ஹோட்டலில் தனியாக இருந்த விஜயகாந்தை அவரது அறைக்கே சென்று சந்தித்து சால்வை போட்டது எதற்காக? அது என்ன வன்னிய சமுதாயத்தை மேம்படுத்தவா?. நீங்கள் நாடாளுமன்றத்திற்குப் போகத்தானே கெஞ்சி கூத்தாடினீர்கள். நீங்கள் கூட்டணி வைக்காத தமிழக கட்சி ஒன்றை இன்றைக்கு உங்களால் சொல்ல முடியுமா? தி.மு.க.வுடன் மாறி மாறி கூட்டணி வைக்கும் போது கருணாநிதி பற்றி தெரியவில்லையா? ஸ்டாலினின் நிர்வாகத் திறமை பற்றி அறியவில்லையா? கின்னஸ் ரிக்கார்டுகளை முறியடிக்கும் வகையில் மாறி மாறி கூட்டணி வைத்த போது தெரியவில்லையா? எத்தனை முறை கூட்டணி மாறினோம் என்பது உங்கள் கட்சி தலைமைக்கே கணக்கிட முடியாமல் போயிருக்கும். இந்த வாரம் யாருடன் கூட்டணி என்பது பற்றி கட்சி தொண்டர்களுக்கு அறிவிக்க நீங்கள் உங்கள் கட்சி அலுவலகத்திற்கு வெளியே அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற நிலைமைதானே இன்றைக்கு இருக்கிறது.

இன்றைக்கு சென்னை மேம்பாலங்கள் நிறைந்த மாநகரமாக இருக்கிறது என்றால், போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஸ்டாலின்தான். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் இன்றைக்கு குடிநீர் கிடைக்கிறது என்றால் அதற்கு ஸ்டாலின் வகுத்துக் கொடுத்து, நிறைவேற்றிய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்தான். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு மட்டுமல்ல, அப்போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நிதியுதவி செய்து, அவர்களை தியாகிகள் என்று அறிவித்து அவர்களுக்கு பென்ஷனும் கொடுத்து கௌரவித்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்.

இதை வன்னிய சமுதாயம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. தயவு செய்து உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பதவி ஆசைக்காக இந்த சமுதாய மக்களை அடகு வைக்காதீர்கள்.

தும்மினால் உடனே மதுவிலக்கு என்கிறீர்கள். நான் உங்களை ஒன்று கேட்கிறேன். நீங்கள்தானே சுகாதாரத்துறை அமைச்சராகத்தானே இருந்தீர்கள். நாடு முழுவதும் ஒரே மது விலக்குக் கொள்கையை அமல்படுத்த என்றைக்காவது உங்கள் துறையின் சார்பில் ஒரு மசோதா கொண்டு வர வேண்டும் என்று கருதியது உண்டா?

மக்களின் சுகாதாரத்தின் மீது இவ்வளவு போலி அக்ககறை காட்டும் நீங்கள் ஏன் மத்திய அரசில் இருந்த போது முன்னெடுத்துச் செல்லவில்லை. எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கூட திருநங்கைகளுக்காக தனி நபர் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறார். ஆனால் ஏன் உங்களால் மதுவிலக்கு தொடர்பாக ஒரு தனி நபர் மசோதாவாவது கொண்டு வர முடியவில்லை? அதை விடுத்து தரமற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு எப்படி அனுமதி வழங்குவது என்று சட்டத்தை வளைப்பதில்தானே குறியாக செயல்பட்டீர்கள்.

அது போகட்டும் அய்யாவின் தோட்டத்திற்கு அருகில் உள்ள பாண்டிச்சேரியில் மதுவிலக்கு வேண்டும் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை? அங்கு வேறு முதல்வர் வேட்பாளரை வன்னியர் சமுதாயத்திலிருந்து முன்னிறுத்த நீங்கள் தயங்குவதுதான் காரணமா?


தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை, சிப்காட் தொழில் பூங்கா என பல திட்டங்கள் கொண்டு வருவோம் என்றீர்களே. அதற்கு ஏதாவது சிறு நடவடிக்கையாவது எடுத்தீர்களா? நிர்வாகம் பற்றி கிழக்கு மேற்கு தெரியாத உங்களுக்கு பேராசை இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் உங்கள் பேராசைக்கு வன்னியர் சமுதாயத்தையும், அந்த சமுதாயத்திற்காக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நிகழ்த்திய சாதனைகளையும் கொச்சைப் படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுக்கு உங்கள் பதவி வெறி முக்கியமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு, எங்கள் இயக்கத்திற்கு இந்த வன்னியர் சமுதாய நலன் முக்கியம். ஏனென்றால் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அமைச்சர்களாக, டி.ஜி.பி.க்களாக, தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தலைவராக, துணை வேந்தர்களாக அமர வைத்து அழகு பார்த்த இயக்கம் தி.மு.க. அந்த இயக்கத்தின் வழிகாட்டியாக, தியாக விளக்காக, எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ஸ்டாலினை குறை சொல்வதை நிறுத்தி விட்டு அவர் உழைப்பில் ஒரு சதவீதத்தையாவது மக்களுக்காக- குறிப்பாக இந்த வன்னியர் சமுதாயத்திற்காக செய்யுங்கள்.

ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் தமிழகத்தை மருத்துவர் என்ற முறையில் என்னால் மீட்க முடியும் என்று கூறியிருக்கிறீர்கள்.

பணம் வாங்கிக் கொண்டு தரமற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கினீர்களே அந்த கல்லூரிகளில் இருந்து மருத்துவரைக் கொண்டு வந்து வைத்து மீட்கப் போகிறீர்களா? அ.தி.மு.க. கஜானாவை சுரண்டியது போக மிச்சமிருப்பதை சுரண்டுவதற்கு திட்டத்தை தீட்டியிருக்கிறீர்களா? கடமை உணர்வும் நேர்மையும் இல்லாத உங்களை, டெல்லி நீதிமன்றத்தில் ஊழல் வழக்கில் ஆஜராகிக் கொண்டிருக்கும் உங்களை மருத்துவராகவும், அரசியல்வாதியாகவும் எப்படி கருதமுடியும்? ஆகவே தமிழகம் என்பது தைலாபுரம் தோட்டம் அல்ல. நீங்கள் நிர்வகிப்பதற்கு. அதே போல் இந்த வன்னியர் சமுதாயம் ஒன்றும் உங்கள் ஏமாற்றுப் பேச்சுக்களை நம்பி மோசம் போவதற்கு தயாராகவும் இல்லை.

தி.மு.க.வும், கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கும் இந்த சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகளை அவ்வளவு எளிதில் உங்களது கோயபல்ஸ் பிரச்சாரத்தால் முறியடித்து விட முடியாது. தங்களையும், தங்கள் கட்சியையும் மக்கள் நம்புவார்கள் என்ற தங்களின் கனவு பகல் கனவாகவே இருக்கும். தாங்கள் இப்போது செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஸ்டாலினின் உழைப்பை கற்றுக் கொள்ளுங்கள். அவர் செய்த தியாகத்தைப் படியுங்கள். 

“வெட்டியாக கடிதம்” எழுதி இப்படி உங்கள் நேரத்தை மட்டுமின்றி தமிழக மக்களின் நேரத்தையும் வீணடிக்காமல், அரசியலில் அரிச்சுவடியை தளபதியின் புத்தகத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் அவரது தியாகத்தில் ஒரு சதவீதமாவது செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். கூடவே வன்னியர் சமுதாயத்தை “வசனம்” பேசியே வஞ்சிக்காமல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு திட்டங்களால் முன்னேறிக் கொண்டிருக்கும் அந்த சமுதாயத்தை தொந்தரவு பண்ணாமல் தயவு செய்து விட்டு விடுங்கள். 

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது



No comments:

Post a Comment