சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 May 2015

பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டோம்: மாவோயிஸ்டுகள் திடுக் தகவல்!

பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக திடுக்கிடும் தகவல்களை கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்டுகள் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

மேற்கு வங்கம், பீகார், சத்தீஷ்கார், ஒடிசா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தி பெரும் சவாலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி-அன்னூர் ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் நேற்று முன்தினம் மாலை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் சிலர் டீ குடித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து இருக்கிறது. அதிரடியாக கியூ பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி முனையில் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.


கைது செய்யப்பட்டவர்கள், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மல்லப்பள்ளியை சேர்ந்த ரூபேஷ் (43), அவரது மனைவி சைனா (37), திருச்சூரை சேர்ந்த அனூப் (40), மதுரையை சேர்ந்த கார்த்தி என்கிற கண்ணன் (39) மற்றும் கடலூரை சேர்ந்த ஈஸ்வரன் என்கிற வீரமணி (42) ஆவார்கள். இதில், ரூபேஷ் ஒரு சட்ட பட்டதாரி; தகவல் தொழில் நுட்ப டிப்ளமோவும் படித்தவர். ஆந்திரா, கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரளா ஆகிய 4 மாநில மாவோயிஸ்டு தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக இருந்தவர். ‘மாவோயிஸ்டு’, ‘வசந்தத்திலே பூமரங்கள்’ என்ற இரு நாவல்களை அவர் எழுதி வெளியிட்டு இருக்கிறார்.


இவரது மனைவி சைனா, கேரள உயர் நீதிமன்றத்தில் கிளார்க்காக வேலை பார்த்தவர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு மாயம் ஆனவர். இவர் கணவர் ரூபேசுக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்திருக்கிறார். இவர்களுக்கு 2 மகள்கள். இவர்கள் தங்களது பாட்டியுடன் திரிச்சூர், வளப்பாடில் வசித்து வருகின்றனர்.

கைதான 5 பேரிடமும் கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் உள்ள மாவட்ட கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டது. தமிழக கியூ பிரிவு டி.ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், கோவை மாநகர துணை கமிஷனர் பிரவேஷ்குமார், ஆந்திர மாநில நக்சலைட்டு எதிர்ப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு, கேரள மாநில நுண்ணறிவு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சதானந்தா, வாகேஷ் ஆகிய 3 மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையின் போது அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளனர். அதில், ''தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களில் 193 மலைக்கிராமங்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. எங்கள் இயக்கத்தினர் தினமும் ஒவ்வொரு மலைக்கிராமத்துக்கும் தலா 4 பேர்வீதம் சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தூண்டினோம். மலைவாழ் மக்களுக்கு வழங்கிய நிலங்களை, நலத்திட்ட உதவிகளை அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பறித்துக் கொண்டார்கள் என்று கூறி, அவர்கள் மத்தியில் போராட்ட உணர்வை தூண்டினோம்.

நீலகிரி மாவட்டத்தையொட்டிய கேரள ஆதிவாசி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்ததால், அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களை தகர்க்க சதித்திட்டம் தீட்டினோம். ஆதிவாசி மக்களை மூளைச்சலவை செய்து, எங்கள் ஆதரவாளர்களாக மாற்றினோம். ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் எங்கள் இயக்கத்தினரை ஒழிக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருவதால், அங்கு சென்றால் பிடிபட்டு விடுவோம் என்பதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காகத்தான் கோவையை அடுத்த கருமத்தம்பட்டிக்கு வந்தோம்.

ஆந்திராவில் செம்மர கட்டைகள் கடத்தியதாக அப்பாவி தமிழர்கள் 20 பேரை ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு படையினர் சுட்டுக்கொன்றதால், ஆந்திர போலீசார் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டோம். அதற்கான வியூகங்களை வகுக்கவும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் உங்களிடம் வசமாக மாட்டிக் கொண்டோம்" என்று திடுக்கிடும் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.


அதன்பின் 5 மாவோயிஸ்டுகளும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்கள் அனைவரையும் அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார். அதையடுத்து, போலீசார் அவர்கள் 5 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.


No comments:

Post a Comment