சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 May 2015

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி...மோடி காட்டிய பூச்சாண்டி !

லகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி 4 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு முறை கூட ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது இல்லை. அதற்கான பேச்சுகள் கூட இதுவரை மருந்துக்கு கூட எழுந்தது இல்லை.
வரும் 2016ஆம் ஆண்டு பிரேசில் நாட்டிலும், 2020-ல் ஜப்பானிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெறப் போகிறது.  இந்நிலையில்தான் 2024-ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விரும்புவதாகவும், அகமதாபாத் நகரில் ஒலிம்பிக் போட்டியை நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக வெளியான தகவல் ஆஹா... மோடி என்று விளையாட்டு பிரியர்களை சொல்ல வைத்தது.

மோடியுடன் ஒலிம்பின் கவுன்சில் தலைவர் சந்திப்பு

கடந்த இரு தினங்களுக்கு முன் ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த மோடி விருப்பம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மோடியுடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விருப்பம் தெரிவிக்கவில்லை என்று உண்மையை போட்டு உடைத்தார். வரும் 2024-ம் ஆண்டில் ஒலிம்பிக் இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், பின்னர் எப்போதுதான் இந்தியா ஒலிம்பிக் போட்டியை நடத்தும் என்ற கேள்வியும் எழுகிறது.

ஆட்சியாளர்கள் கையில் ஒலிம்பிக்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (gdp) நமக்கு அடுத்த இடத்தில் உள்ள பிரேசில் நாடு அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தவுள்ளது. பல்வேறு நிதிச் சிக்கலுக்கு இடையிலும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்திக் காட்டிய பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்காகவும் முற்றிலும் தயாராகி விட்டது. ஆசியாவில் 48 நாடுகள் ஒலிம்பிக் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளன.  இதில் ஜப்பான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டியை நடத்தியுள்ளன. இந்தியாவில் தற்போது ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றாலும், எதிர்காலத்தில் நிச்சயம் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. அது நமது ஆட்சியாளர்களின் கையில்தான் உள்ளது. 

பிரேசிலில் தொடர்ந்து எதிர்ப்பு 

கடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பிரேசிலில் நடத்துவதற்கு அந்நாட்டு மக்களே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடு தற்போது இருக்கும் சூழலில் மக்கள் பிரச்னை மீது கவனம் செலுத்தாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து கால்பந்து போட்டியை நடத்துவதா? என கொந்தளித்த பிரேசில் மக்கள் அரசுக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தினர்.

கால்பந்து போட்டி மைதானத்தில் நடந்து கொண்டிருந்தபோது வெளியே போராட்டம் நடத்திய மக்களை அடக்க பெரும்பாடுபட்டது பிரேசில் காவல்துறை. அதேபோல் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கும் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்து வருகின்றனர் பிரேசில் வாசிகள். 

இங்கிலாந்திலும் கிளம்பியது எதிர்ப்பு


உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான, ஜி8 நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. சுமார் 3.94 பில்லியன் அமெரிக்க டாலரில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், செலவு சுமார் 15.28 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இழுத்தது. ஒலிம்பிக் போட்டியை நடத்த இங்கிலாந்து தயாராகிக்கொண்டிருந்த போது அந்தநாடும்  பொருளாதாரம் மந்தநிலையில்தான் இருந்தது. இங்கிலாந்து மக்களும் ஒலிம்பிக்கிற்கு எதிராக போராட்ட களத்தில் குதித்தனர். அவர்களையும் சமாளித்து தீவிரவாத அச்சுறுத்தல்களை மீறி வெற்றிகரமாக ஒலிம்பிக்கை நடத்தி காட்டியது இங்கிலாந்து.
ஒலிம்பிக் போட்டியை நடத்துவதன் நோக்கம் என்ன? 

இவ்வளவு எதிர்ப்புகளுக்கு பின்னரும் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு பல நாடுகள் விரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒலிம்பிக் போட்டியை நடத்துவதன் மூலம் ஒரு நாடு உலகில் தனக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். ஒலிம்பிக் போட்டியின்போது செய்யப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை  நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்வது, ஒலிம்பிக்கின் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி அதன் மூலம் வருவாயை பெருக்கிக்கொள்வது போன்ற காரணிகளும் ஒலிம்பிக் போட்டிக்கு பின்னணியில் உள்ளன. 

ஊழல் மிகப் பெரிய பிரச்னை
2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும் என அறிவிக்கப்போது இந்திய விளையாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளை நடத்த முடியவில்லை என்றாலும், காமன்வெல்த் போட்டியை நடத்தும் அளவிற்கு இந்தியா முன்னேறி இருக்கிறது எனவும் சிலாகித்தனர் .
ஆனால் அந்த மகிழ்ச்சியை போட்டி அமைப்பாளர்கள் சிதைத்தனர். தரமற்ற கட்டுமானங்கள், போட்டியை நடத்துவதில் ஊழல், போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் வரை நடைபெற்ற கட்டுமானப்பணிகள் என சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தினர் 

சிறை சென்ற கல்மாடி

அப்போதைய டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்தும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சுரேஷ் கால்மாடியும் காமன்வெல்த் ஊழல் வழக்கை தற்போது வரை எதிர்கொண்டு வருகின்றனர். இதில் சுரேஷ் கல்மாடி சிறை சென்று மீண்டு வந்தார். ஒலிம்பிக் போன்ற பிரமாண்ட போட்டியை நடத்துவது என்றால் முதலில் இந்த ஊழல் பிரச்னையை இந்தியா சமாளிக்க வேண்டியது இருக்கும்.


வரும் 2024ஆம் ஆண்டுக்கு இன்னும் 8 ஆண்டுகளே உள்ள நிலையில், இந்தியாவில் வெகு விரைவான கட்டுமானப்பணிகள் சாத்தியமா? என்றால் நிச்சயம் இல்லை. அதுமட்டுமல்ல, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை இந்தியா ஒலிம்பிக் போட்டியை நடத்த முடக்க வேண்டியது இருக்கும். அப்படியே நிதி ஒதுக்கினாலும் அது முறையா செலவிடப்படுமா? என்றால் அதற்கு பிரதமர் மோடி தலைமையில் குழு அமைத்தாலும் அது சாத்தியமல்ல என்றே சொல்ல முடியும். 
தேவை ஒரு லட்சம் கோடி

அதோடு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் ஒருநாட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் விளையாட்டு போட்டியை நடத்த ஒதுக்கியுள்ளோம் என்றால் அவ்வளவுதான். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்தியா வந்த ஒலிம்பிக் கவுன்சில் தலைவரிடம் பிரதமர் மோடி  மருந்துக்கு கூட ஒலிம்பிக்கை நடத்துகிறோம் என்று வாய் திறக்கவில்லை.
இதனால், பிரதமர் மோடி- தாமஸ் பாச் ஆகியோரின் சந்திப்பு சம்பிரதாயமாக முடிந்தது. முதலில் நாட்டின் பொருளாதாரத்தை வலம் பெறச் செய்தால்தான் ஒலிம்பிக் போட்டி போன்ற பிரமாண்ட போட்டிகளை இந்தியாவில் நடத்துவதிலும் ஒரு அர்த்தம் இருக்க முடியும்.
ஆகையால்... இப்போதைக்கு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி என்பது மோடி காட்டும் பல பூச்சாண்டிகளுள் ஒன்றே...!



No comments:

Post a Comment