சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 May 2015

தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் திரை உலகு 7 விருதுகளை அள்ளியது!

டெல்லியில் நடந்த விழாவில் தேசிய திரைப்பட விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இதில், தமிழ் திரை உலகு 7 விருதுகளை அள்ளி இருக்கிறது.
மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்தியாவில் முதன் முதலாக தயாரான ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படம் கடந்த 1913 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி வெளியானது. அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஆம் தேதி தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2014 ஆம் ஆண்டுக்கான 62வது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வுக்குழுவின் தலைவரான பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி அறிவித்தார். அதில், தமிழ் திரைப்பட துறைக்கு 7 விருதுகள் கிடைத்தன. புதிய இயக்குனர் எம்.மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ படத்துக்கு 2 விருதுகளும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்துக்கு 2 விருதுகளும், சைவம் படத்துக்கு 2 விருதுகளும் கிடைத்தன. மொழி வாரியான படங்களில் சிறந்த தமிழ்ப் படமாக ‘குற்றம் கடிதல்’ தேர்ந்து எடுக்கப்பட்டது.
‘காக்கா முட்டை’ சிறந்த குழந்தைகள் படமாக தேர்வு செய்யப்பட்டதோடு, அதில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக அறிவிக்கப்பட்டனர். தேர்ந்து எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
சிறந்த குழந்தைகள் படமாக தேர்வு செய்யப்பட்ட ‘காக்கா முட்டை’ படத்துக்கான விருதை அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ், இயக்குனர் மணிகண்டன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அந்த படத்தில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை பெற்றனர். ‘நானு அவனல்ல அவளு’ என்ற கன்னட படத்தில் நடித்த விஜய் தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். ‘குயின்’ இந்தி படத்தில் நடித்த கங்கனா ரணாவத்துக்கு சிறந்த நடிகைக்கான விருதை ஜனாதிபதி வழங்கினார்.
இதேபோல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகர் விருதை ஜனாதிபதி வழங்கினார். அந்த படத்தின் எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த எடிட்டருக்கான விருது வழங்கப்பட்டது. சைவம் படத்தில் இடம் பெற்ற ‘அழகே, அழகே’ பாடலை எழுதிய நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. அந்த பாடலை பாடிய பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா உன்னி கிருஷ்ணனுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருது வழங்கப்பட்டது.


மொழி வாரியான படங்களில் சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்ட ‘குற்றம் கடிதல்’ படத்துக்கான விருதை அந்த படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், இயக்குனர் பிரம்மா ஆகியோர் பெற்றனர். ஜி.தனஞ்செயன் எழுதிய தமிழ் சினிமாவின் பெருமை (1931–2013) என்ற புத்தகத்தை சிறந்த புத்தகமாக விருதுக்குழு தேர்வு செய்து இருந்தது. அதற்கான சான்றிதழை ஜி.தனஞ்செயன் பெற்றுக் கொண்டார்.

தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருது ‘கோர்ட்’ என்ற மராத்தி மொழி படத்துக்கும், சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான விருது பிரியங்கா சோப்ரா நடித்த ‘மேரிகோம்’ இந்தி படத்துக்கும் வழங்கப்பட்டது. ‘சோதுஷ்கோன்’ என்ற வங்காள மொழி படத்தை இயக்கிய ஸ்ரீஜித் முகர்ஜி சிறந்த இயக்குனருக்கான விருதையும், ‘ஹைதர்’ என்ற இந்தி படத்துக்கு இசை அமைத்த விஷால் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் பெற்றனர். இவர்கள் தவிர தேர்ந்து எடுக்கப்பட்ட மற்ற கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

77 வயதான பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூருக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. உடல் நலக்குறைவின் காரணமாக அவர் விழாவுக்கு வரவில்லை. பின்னர் ஒரு நாளில் மும்பையில் உள்ள சசிகபூரின் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.



No comments:

Post a Comment