சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 May 2015

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் -6

சென்னையில் ஜல்லிக்கட்டும்...சர்க்கஸ் புலிகளும் 

ஜல்லிக்கட்டுக்குத் தடை என்றார்கள். அது வெளிநாட்டு கலாசாரம் என்றும், மிருகவதை என்றும் பல காரணங்களை சொன்னார்கள். காளை மாடுகளை வைத்து இன்னும் எத்தனை காமெடிகள் வருமோ? நான் சொல்ல வந்தது, 1973-ல் சென்னையில் தமிழக அரசு நடத்திய ஜல்லிக்கட்டு பற்றி.

மூர் மார்க்கெட்டுக்குப் பின்புறம் இருந்த நேரு விளையாட்டு அரங்கம் (படம்), அன்றைய கிரிக்கெட் மைதானம். அதில்தான் ஜல்லிக்கட்டு நடந்தது. இன்றைக்கு நடந்தால் மிருக வதையோடு 'பிட்ச்' வதை என்றும் பிச்சு எறிந்திருப்பார்கள். 


பொங்கல் அன்றே ஏகப்பட்ட காளைகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டன. காளையை அடக்கவந்த இளங்காளைகளும் வந்து சேர்ந்தனர். எல்லா காளைகளும் மதுரை ஏரியாவில் இருந்து வந்ததுதான். மாட்டுப் பொங்கல் அன்று உச்சிவெயில் நேரத்தில்ம், கையில் கரும்போடு அந்த ஜல்லிக்கட்டை ரசித்தது நினைவிருக்கிறது. அன்றைய முதல்வர் கலைஞர் ஹெலிகாப்டரில் வந்து மைதானத்தின் மீது தாழப் பறந்தபடி, கூடை கூடையாகப் பூக்களைத்  தூவினார். 'அதோ கலைஞர்... அதோ கலைஞர்...!' என மக்கள் உற்சாகமாக ஹெலிகாப்டரைப் பார்த்தனர்.

அலங்கா நல்லூரில் இருப்பது போல காளையை அடக்குபவர்களோடு பார்வையாளர்களும் சேர்ந்து மொய்த்தபடி வாடிவாசல் அருகே நிற்கவைக்கப்படவில்லை. பார்வையாளர்கள் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கும் கேலரிகளில் அமரவைக்கப்பட்டிருந்தோம்.

வாடிவாசலில் இருந்த ஆவேசமாக வெளியே வந்த காளைகள் திகைத்துப் போயின. ஒருவிதத்தில் ஏமாந்து போயின. அங்கே தங்களை அடக்க வந்திருந்த ஆறேழு பேரை அலட்சியமாகப் பார்த்துவிட்டு அசையாமல் நின்றன. சில காளைகளோ பரந்து விரிந்து கிடந்த விளையாட்டு அரங்கில் இங்கும் அங்கும் நாலுகால் பாய்ச்சலில் துள்ளி ஓடின.சில காளைகள் வேகமாக ஓடி, விளையாட்டு அரங்கிலே முளைத்திருந்த புற்களை மேய ஆரம்பித்தன. அந்த ஜல்லிக்கட்டைப் பார்த்த மக்கள் மட்டுமல்ல; அதில் பங்கேற்ற அந்தக் காளைகளும் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்தேன். மக்களையும் அந்த விளையாட்டு மைதானத்திலே இறக்கிவிட்டிருந்தால், காளைகள் சந்தோஷமாக அந்த ஜல்லிக்கட்டிலே பங்கேற்று இருக்கும். ஏனோ அப்படி செய்யவில்லை. மக்களுக்கு ஏடாகூடமாக ஏதாவது விபத்து நடந்துவிடக்கூடாது என்பதுதான் காரணமாக இருந்திருக்கக் கூடும்.
அந்த விளையாட்டு மைதானமும் பின் ஒரு நாளில் இடிக்கப்பட்டு நேரு உள்விளையாட்டு அரங்கமாக மாறியது. விளையாட்டுகளைவிட அதிகமாக சினிமா கலை நிகழ்ச்சிகள் அதிலே நடத்தப்படுகின்றன. உச்சிவெயில் சூரியனுக்குக் கீழே, கை எல்லாம் கரும்புச்சாற்றின் கறையோடும், தாகத்தோடும் பார்த்த அந்த அரங்கம் இப்போது குளிரூட்டப்பட்டு நவீனமாகக் காட்சியளிக்கிறது. 

அந்த மைதானத்துக்கும் பின்னாலே எஸ்.ஐ.ஏ.ஏ. திடல் என்ற காலி  மைதானம். அங்குதான் நேஷனல் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ், ரஷ்யன் சர்க்கஸ் என ஆண்டுதோறும் ஜனவரி மாதங்களில் உற்சாகமாக சர்க்கஸ் நடக்கும். மிருகவதைச் சட்டங்களின் ஆவேசங்கள் இல்லாத அந்த நாளில் பத்து பதினைந்து சிங்கங்கள், புலிகள், கருப்புப் புலி, நீர் யானை, யானைகள், ஒட்டகங்கள், நாய்கள், பாம்புகள், குதிரைகள், கரடிகள் என அணிவகுக்கும். அத்தனை விலங்குகளை அவ்வளவு அருகில் பார்ப்பது ஆனந்தம்தான். அதுவும் பந்து விளையாடும் புலி, பாப்கார்ன் சாப்பிடும் சிம்பஞ்சி, பார்வதி வேடத்தில் இருக்கும் பெண்ணை சுமந்து வரும் சிங்கம், சிங்கத்தின் வாய்க்குள் வாயை நுழைக்கும் ரிங் மாஸ்டர், வாயைப் பிளந்து காண்பிக்கும் நீர் யானை, அதை வாய் பிளந்து பார்க்கும் மக்கள் கூட்டம், உலகத்தில் எங்கும் பார்த்திருக்க முடியாத பஞ்ச வர்ணக் கிளிகள்... சர்க்கஸ் விலங்குகளின் உலகமாக இருந்த அந்தக் காலம் மலை ஏறிவிட்டது.

பறக்கும் பாவை, அபூர்வ சகோதரர்கள், ஏழாம் அறிவு போன்ற சில படங்கள் அந்த சர்க்கஸ் கூடாரங்களில் படமாக்கப்பட்டன. இதே வரிசையில் இந்தப் படங்களில் அந்த விலங்குகள் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனதை கவனிக்க முடியும்.

சினிமா என்பது இந்த விதத்தில் ஒரு சரித்திர சான்றாகவும் இருக்கிறது. மிகவும் மலைப்பாகத் தோன்றும் ஒரு பாடல் காட்சி ஒன்று அடிக்கடி மனத்தில் தோன்றி மறையும். 'காதலிக்க நேரமில்லை' படத்தில் முத்துராமனும் காஞ்சனாவும், சென்னை மெரினா கடற்கரையில் சென்னை பல்கலைக்கழகத்தின் எதிரே அந்தப் பாடல் காட்சியில் பாடி ஆடுவார்கள் (படம்). 'என்ன பார்வை... உந்தன் பார்வை...' என்ற அந்தப் பாடல் காட்சியில் அந்தச் சுற்றுவட்டாரம் தெரியும்.

அந்த இடத்தில் எம்.ஜி.ஆர் சமாதியோ, அண்ணா சமாதியோ இல்லாத அந்த வெட்டவெளி காட்டப்படும். அப்படியானால் அப்போது அவர்கள் எல்லாம் இருந்தார்கள் என்ற மிக எளிமையான ஓர் உண்மை ஏனோ என்னை பரவசப்படுத்தும். சென்னையில் படம்பிடிப்பதற்காக இப்படி நிறைய இடங்கள் இருந்தன. சென்னை அண்ணா நகரில் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்ட 70-களில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் அண்ணா நகரின் பல பகுதிகள் புதர் மண்டிய வனாந்திரமாக இருந்ததைப் பார்க்கலாம். ஒரு சினிமா ஓர் ஆவணமாக மாறுகிற அற்புதம் அது. 

சென்னையில் இருந்த சினிமா படப்பிடிப்புத் தளங்கள் பல இப்போது கிடங்குகளாகவும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன. அவை பற்றி அடுத்து பார்க்கலாம்...



No comments:

Post a Comment