சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 May 2015

விஜயகாந்த், நிஜவாழ்வில் ஒரு நல்ல மனிதாபிமானி!

விஜயகாந்தை எனக்கு சில விஷயங்களுக்காக பிடிக்கும்... எப்போதும் மனதில் பட்டதை பட்டென்று உடைத்து விடுபவர் அவர். திராவிட இயக்கத் தலைவர்கள் போல சரளமாகவெல்லாம் அவருக்கு பேச வராது. யதார்த்த நடையில் ஒரு கோர்வையில்லாமல்தான் பேசுவார். நாம்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டு புரிந்து கொள்ள வேண்டும். மூன்று முறை முதல்வராக இருந்த ஜெயலலிதாவே, இன்னும் எழுதி வைத்துதான் படிக்கிறார். 

இன்று விஜயகாந்த் மீது கல்லெறிபவர்களில் எத்தனை பேருக்கு சரளமாக பேச வரும்? ஒரு கட்சியின் தலைவர் நல்லா பேசினால் நன்றாகத்தான் இருக்கும். சரளமாக மடை திறந்த வெள்ளமென பேசும் பேச்சாளர்களை பார்த்திருக்கிறோம். எழுதி வைத்து படிக்கும் (பேசும்) பேச்சாளர்களை பார்த்திருக்கிறோம். இயல்பாக பேசும் ஒரு பேச்சாளராக விஜயகாந்த் இருந்துவிட்டு போகட்டுமே. இலக்கிய, இலக்கண நயத்துடன் பேசும் தலைவர்களிடம் மயங்கித்தானே இன்று ஒவ்வொன்றிற்கும் அரசாங்கத்தை நோக்கி கை நீட்டும் அடிமையாக இருக்கிறோம். 


இயல்பாகவே அப்படி பேசும் விஜயகாந்தின் எதிரியே, அவரின் இயல்பை மீறிய முன்கோபம்தான். யாராவது ஏதாவது கேட்டால் உடனே கோபப்பட்டு விடுவது அவரது பலவீனம். இதை மட்டும் குறைத்துக்கொண்டால் போதும். அவரின் செல்வாக்கு இன்னும் அதிகரித்துவிடும். ஆனால், அவரது முன் கோபத்தால் அவருக்கு கிடைத்திருக்கும் பட்டம் குடிகாரர். அநேகமாக இந்த பட்டத்தை அவருக்கு வழங்கியவர் ஜெயலலிதாதான். ஒரு ஆளாய் சட்டசபையில் இருந்தபோது இவரை ஜெயலலிதா இந்த வார்த்தையை கூறி விமர்சித்தபோது, "ஆமாம்... இவர்தான் பக்கத்தில் இருந்து ஊற்றிக்கொடுத்தார்!' என்று பதில் கொடுத்ததும் அப்போதைய பரபரப்பு செய்தி. பின்னாளில் அதே விஜயகாந்துடன், ஜெயலலிதா கூட்டணி வைத்ததும் வரலாறு.
எப்போது ஜெயலலிதா அவருடன் கூட்டணி வைத்தாரோ அப்போதே அவர் மீது ஜெயலலிதா சொன்ன குற்றச்சாட்டு அடிபட்டு போய்விட்டதாகத்தான் அர்த்தம். இன்னும் குடிகாரர் என்ற சொத்தை வாதத்தை அவர் மீது வைப்பதே அவரை சமாளிக்க முடியாமல்தான்.  

விஜயகாந்த் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவையே அலற வைத்தவர். செல்வாக்கு இல்லாதவருக்கு ஏன் ஜெயலலிதா 41 தொகுதிகளை ஒதுக்கினார்? சரத்குமாருக்கு போல வெறும் இரண்டு தொகுதிகள் மட்டுமே கொடுத்திருக்கலாமே? அல்லது வைகோவை போல கழட்டி விட்டிருக்கலாமே?

அப்போது, விஜயகாந்த் கேட்ட தொகுதிகளுக்கும் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்து விட. உடனே கடுப்பான விஜயகாந்த் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சியினரை தன் அலுவலகத்தில் கூட்டி ஜெயலலிதாவுக்கு கிலியை ஏற்படுத்தினார். பின்னர், வேறு வழியே இல்லாமல் இறங்கி வந்த ஜெயலலிதா, தான் அறிவித்த வேட்பாளர் பட்டியலை வாபஸ் வாங்கிக்கொண்டு விஜயகாந்த் கேட்ட சில தொகுதிகளை அவருக்கு ஒதுக்கிவிட்டு, புதிதாய் வேறு ஒரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விஜயகாந்தை சாந்தப்படுத்தினார். 

ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றிலேயே இப்படி இறங்கி வந்தது அப்போதுதான். அதுதான் விஜயகாந்தின் செல்வாக்கு. அப்படி அன்று ஜெயலலிதாவை அலற வைத்ததுக்கான தண்டனையைத்தான் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறார் விஜயகாந்த். ஆனாலும் அவர் பயப்படுவதுபோல இல்லை. அதுதான் விஜயகாந்த்.
நிஜவாழ்வில் இவர் ஒரு நல்ல மனிதாபிமானி. அரசியலுக்கு வருவதற்கு முன்பே தன் பிறந்த நாளின்போது ஏழைகளுக்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்திருந்தவர். அவர் ஆபிஸில் அன்னதானம் செய்து வந்தவர்.

'பாய்ஸ்' படத்தில் செந்தில் மணிகண்டனிடம் எங்கே, எப்போது, என்ன சாப்பாடு கிடைக்கும் என்று பட்டியல் போடுவார். அந்த பட்டியலில் விஜயகாந்த் ஆபீஸில் போடும் சாப்பாடும் இடம் பிடித்திருக்கும். அந்த அளவுக்கு ஏழைகளுக்கு உணவு போடுவதில் பிரபலமாக இருந்தவர். தன்னோடு நடிக்கும் அனைவருக்கும் எந்த பாகுபாடுமில்லாமல் ஒரே தரத்துடன் உணவு வழங்கி உபசரிப்பவர் அவர் என்ற பேச்சும் திரைத்துறையில் உண்டு. அதற்கு பின்னணியில் ஒரு கதையும் இருக்கிறது.

இப்படிப்பட்டவர் தேர்தலின்போது மட்டுமே மற்ற அரசியல்வாதிகள் மத்தியில் ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.  மற்ற நேரங்களில் எப்படி காமெடியனாக மாறினார் என்பதுதான் புதிராக இருக்கிறது. ஒருவேளை கோர்வையில்லாமல் தடுமாற்றத்துடன் பேசும் அந்த பேச்சாகத்தான் இருக்க முடியும் என்பது என் கணிப்பு. ஆனாலும் அந்த காமெடியனுக்குத்தான் இப்போது மவுசு.



No comments:

Post a Comment