‘‘சொந்த ஊர் ஆந்திராவுல திருப்பதிக்கு பக்கம். எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிக்கறதுக்காக சென்னை வந்தேன். பள்ளிக்கூடத்துல படிக்கிறப்பவே என்னை எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை இழுத்துடுச்சு. காலேஜ்ல சேர்ந்ததும், என்னை மாதிரியே எலக்ட்ரிகல் பைத்தியமா இருந்த சுதீப்போட ஃப்ரண்ட்ஷிப் கிடைச்சது. ரெண்டு பேரும் ரூம்மேட் ஆகிட்டோம். எந்த எலக்ட்ரிகல் பொருள் கண்ல பட்டாலும் விட மாட்டோம். பிரிச்சுப் போட்டு ஒரு அலசு அலசிடுவோம்.
உலகம் முழுக்க மக்கள் டி.வி பார்க்கறாங்க, அயர்ன் பண்றாங்க, துணி துவைக்கிறாங்க. அதனால அதுக்கான மெஷின்கள் எல்லாம் எப்பவோ கண்டுபிடிக்கப்பட்டு, ஒவ்வொரு காலத்திலும் மேம்பட்டுக்கிட்டே வருது. ஆனா, நமக்கு மட்டுமேயான நம்ம கண்டுபிடிப்புன்னு சிலது இருக்கு. உதாரணத்துக்கு மாவரைக்கிற வெட் கிரைண்டர். எல்.ஜி, சாம்சங் மாதிரி பெரிய கம்பெனிகள் அதுல கவனம் செலுத்த மாட்டாங்க. உலக மார்க்கெட்ல அதுக்கு மதிப்பில்லைன்னாலும், உள்ளூர்ல தனி மவுசு உண்டு. அது இல்லாம இன்னிக்கு ஒரு வாழ்க்கையை நினைச்சுப் பார்க்க முடியுமா? ‘வெட் கிரைண்டர் மாதிரியே, தினம் தினம் நம்ம ஊர் இல்லத்தரசிகள் பயன்படுத்துற மாதிரி ஒரு பொருளை நாம கண்டுபிடிக்கணும்'ங்கிற எண்ணம் ரெண்டு பேர் மனசுக்குள்ளயும் வந்துச்சு. அது, படிச்சு முடிச்சபிறகு இப்பதான் நிறைவேறியிருக்கு'' ஈஸ்வர் விகாஷ் நிறுத்த, தோசை பக்கம் அவர்களின் ஆய்வு திரும்பியதை நினைவு கூர்கிறார் சுதீப்...
‘‘காலேஜ்ல ஆல் இண்டியா டூர். டெல்லி போயிருந்தோம். நாங்க ரெண்டு பேருமே ஆந்திராங்கிறதால சாப்பாட்டுல தோசை, காரச்சட்னி காம்பினேஷன்னா ரொம்பப் பிடிக்கும். டெல்லியில ஒரு ஹோட்டல்ல தோசையோட விலையைக் கேட்டு தலை சுத்திப் போச்சு. 110 ரூபாயாம்! ‘ஏங்க இவ்வளவு காஸ்ட்லி'ன்னு கேட்டா, ‘தோசை மாஸ்டருக்கு டிமாண்டுங்க. அவருக்கே நிறைய பணம் தரவேண்டியிருக்கு'ன்னு சொன்னாங்க. அன்னிக்கு உதிச்சது ஐடியா. டூர் முடிச்சு வந்த மறுநாளே ‘இதுக்கு ஒரு மெஷின் கண்டுபிடிச்சா என்ன'ங்கிற ஆராய்ச்சியில இறங்கியாச்சு. எங்க ரெண்டு பேரோட ஃபிரண்ட்ஸ் சர்க்கிள்ல இருந்து சுதர்ஷன், அலிஸ்டர், இன்னொரு நண்பர்னு சேர, டீம் ஃபார்ம் பண்ணினோம்.
எலக்ட்ரானிக்ஸ் அறிவு எங்ககிட்ட இருந்தாலும், தோசை சுடுறது அதை விட பெரிய அறிவியல். அதைத் தெரிஞ்சுக்குறதுக்காக ஹோட்டல் ஹோட்டலா ஏறி இறங்கினோம். ஏற்கனவே இருக்கற சப்பாத்தி மேக்கர் மாதிரியான உபகரணங்களை வாங்கி, அதோட வடிவமைப்பு உள்ளிட்ட டெக்னிகல் விஷயங்களை சேகரிச்சோம். ஒருத்தருக்கொருத்தர் விஷயங்களைப் பரிமாறி, ஆறு மாசம் ராப்பகலா உழைச்சதுக்கு கைமேல பலன் கிடைச்சிருக்கு. இன்னிக்கு நிறைய ஹோட்டல்கள்ல ‘தோசாமேடிக்'குக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க. கம்பெனி பதிவு பண்ணி பேட்டன்டுக்கும் அப்ளை பண்ணியாச்சு. பிஸியான ஒரு ஹோட்டல்ல குறைஞ்சது 500 தோசை சுட வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு ‘தோசாமேடிக்' 700 தோசை வரைக்கும் சுடும். மாஸ்டர் தேவையில்லங்கிறதால தோசையோட விலையும் இப்ப இருக்கறதை விடக் குறைய வாய்ப்பிருக்கு!'' என்கிறார் அவர்.
பார்ப்பதற்கு மைக்ரோவேவ் அவன் மாதிரி இருக்கும் ‘தோசாமேடிக்'கில் மாவு, எண்ணெய்க்கு தனித்தனி பாத்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தோசை வேக டெம்பரேச்சர், எண்ணெய், மாவின் அளவு, தடிமன் போன்றவற்றை செட் செய்த பின், மெஷினை ஆன் செய்தால் நிமிடத்தில் ரெடியாகி, அழகாக சுருண்டு வெளியே வந்து விழுகிறது தோசை. ரோஸ்ட் போலவே கல்தோசையும் சாத்தியம். மசாலா, ஆனியன் எல்லாம் எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.
‘‘மொத்தமா தோசை சுடற ஹோட்டல்களை மனசுல வச்சுதான் இதைப் பண்ணினோம். அதனால இப்போதைக்கு ‘தோசாமேடிக்'கோட விலை கொஞ்சம் அதிகம்தான். ஆனா, ஒவ்வொரு வீட்டுலயும் பயன்படுத்தற மாதிரி இதைக் கொண்டு வர்றதுக்கு எல்லா வேலைகளையும் தொடங்கிட்டோம். அந்த முயற்சி சீக்கிரத்துலயே சக்ஸஸ் ஆகும்'' சுதர்ஷனும் அலிஸ்டரும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
‘தோசாமேடிக்'கை உருவாக்குவதற்கு இந்த இளைஞர்களுக்கு ஆறு லட்சம் வரை செலவானதாம். கண்டுபிடிப்பில் மூழ்கியதாலேயே சமீபத்தில் கிடைத்த வங்கி வேலையையும் உதறிவிட்டார் ஈஸ்வர். ‘‘நாளைக்கு ஒவ்வொரு குடும்பத் தலைவியும் பாராட்டலாம். அப்ப கிடைக்கப் போற சந்தோஷத்துக்கு முன்னாடி இதெல்லாம் பெரிசா சார்?'' என்கிறார் அவர்.
‘புன் முறுகலோடு' விடை தருகிறார்கள் மற்றவர்கள்!
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..!
மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக
முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!
No comments:
Post a Comment