சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Apr 2013

குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் - முதல்வர் ஜெயலலிதா அறிக்கை

ராமநாதபுரம், தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்; திண்டுக்கல்லுக்கு காவிரி நீர்: ஜெயலலிதா

சென்னை: ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 100 மில்லியன் லிட்டர் திறனுடைய கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் அவர் அளித்த அறிக்கையில் இதைத் தெரிவித்தார். அந்த அறிக்கையில், 

                                      
                                            
நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப குடிமைப் பணிகளை உயர்ந்த அளவில் நிறைவேற்றிக் கொடுப்பதும், நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும் உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமை என்றாலும், மாநில அரசுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. 

இதனை உணர்ந்த அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்ல சுற்றுப்புற சூழலை ஏற்படுத்துவதிலும், பொது சுகாதாரத்தை பராமரிப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதிலும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறது. 

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 3.80 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 3.80 மில்லியன் லிட்டர் குடிநீரை பெற முடியும்.

இதே போன்று, ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தான் வடிவமைக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் உள்ளூர் நீராதாரங்களின் தரமும், நம்பகத்தன்மையும் தற்போது குறைந்து வருவதால், இம்மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது. 

எனவே, சென்னை மாநகரத்தின் நீர்த் தேவையை சமாளிக்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்ததைப் போல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிலவும் நிலத்தடி நீரின் நிலையற்ற தன்மை மற்றும் குடிநீர் தர பிரச்சனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து காலங்களிலும் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வகையில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் திறனுடைய கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படும். 

6 மாவட்டங்களில் ஆற்று நீரைக் கொண்டு கூட்டுக் குடிநீர்த் திட்டம்: 

அதே போல திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். 

திண்டுக்கல்லுக்கு காவிரி நீர்: 
ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைப் பொறுத்த வரையில், ஊரகப் பகுதிகளில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் என்ற இலக்கை எய்த வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு ரூ. 450 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். 
இதன் மூலம், ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, சாணார்பட்டி, நத்தம், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர், குஜிலியம்பாறை, திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம் மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1,342 குடியிருப்புகளைச் சேர்ந்த 5,62,000 மக்கள் பயன் பெறுவர். 

பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறுக்கு கொள்ளிடம் நீர்: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பேராவூரணி, பெருமகளூர், அதிராம்பட்டினம் பேரூராட்சிகள்; மற்றும் பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஓரத்தநாடு மற்றும் திருவோணம் ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 1,153 குடியிருப்புகளில் வசிக்கும் 5,76,000 மக்கள் பயன் பெறும் வண்ணம் கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு ரூ. 125 கோடி மதிப்பில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். 

கோவை மாவட்டத்துக்கு பவானி கூட்டுக் குடிநீர்த் திட்டம்: கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர், பூலுவபட்டி, தென்கரை, வேடப்பட்டி, தாளியூர், ஆலந்துறை, பேரூர் ஆகிய 7 பேரூராட்சிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 134 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் 1,55,000 மக்கள் பயன் பெறும் வகையில் பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு ரூ. 114 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். 

திருப்பூர் மாவட்டத்துக்கும் காவிரி நீர்: 
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோயில், மூலனூர், தாராபுரம், குண்டடம் மற்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள 1,262 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் 2,80,140 மக்கள் பயன்பெறும் வண்ணம் காவிரி ஆற்றினை நீராதாரமாகக்ந கொண்டு ரூ. 76 கோடியே 44 லட்சம் செலவில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். 

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறைக்கும் காவிரி நீர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர், மணிகண்டம் மற்றும் மணப்பாறை ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 177 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் 1,27,720 மக்கள் பயன்பெறும் வண்ணம் காவேரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு ரூ. 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். ஆக மொத்தம் ரூ. 797 கோடியே 69 லட்சம் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நடப்பாண்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். 

திருநெல்வேலி, ஆரணி, பெரியகுளத்தில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்: திருநெல்வேலி மாநகராட்சி, ஆரணி மற்றும் பெரியகுளம் உள்ளிட்ட 3 நகராட்சிகளில் 2013-14ம் ஆண்டில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட நிதி ஆகியவற்றின் கீழ் ரூ. 227 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார் ஜெயலலிதா.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment