சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Apr 2013

அம்மா உணவகம்

சென்னை- ஆலந்தூரில் அரசு நடத்தும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது அந்த பெண்மணியை பார்த்தேன். சமையல் கட்டின் அருகில் நின்று கொண்டு அங்கிருப்போருக்கு சில உத்தரவுகள் தந்து கொண்டிருந்தார். 

                                      

அம்மா உணவகம் பற்றி எழுத வேண்டுமென புகைப்படம் எடுத்த நேரம் அதே பெண்மணி தான் என்னிடம் வந்து " ஏன் சார் போட்டோ எடுக்குறீங்க? " என கேட்டது நினைவுக்கு வந்தது. " கணினியில் அம்மா உணவகம் பற்றி எழுத போறேன் " என்று சொல்ல " அப்படியா? யார் படம் எடுத்தாலும் எதுக்குன்னு நாங்க தெரிஞ்சு வச்சிக்கணும்; அதான்" என்றார் அவர். உணவுக்கு காசு வாங்கி கொண்டு பில் தந்தவரும் அந்த பெண்மணியே. இப்போது சமையலறை அருகில் நிற்கிறாரே என்று யோசித்த படி நான் நடக்க, அவர் தானாகவே வந்து பேச துவங்கினார்.

Mrs .
முரளி என்று தன்னை அறிமுகம் கொண்ட அவரிடம் பேசியதில் அம்மா உணவகம் பற்றி மட்டுமல்ல, அங்கு வேலை செய்யும் பெண்களின் வாழ்க்கை பற்றியும் நிறையவே அறிய முடிந்தது. 

இனி அவர் பேசியதிலிருந்து :

"
நாங்க எல்லாம் மகளிர் சுய உதவி குழுவில் இருந்தோம். இப்போ எங்களை மாதிரி மகளிர் சுய உதவி குழுவை சார்ந்தவங்களுக்கு தான் - இந்த வேலை முழுக்கவே குடுத்திருக்காங்க. இங்கே மட்டும் இருபதுக்கும் மேலே பெண்கள் வேலை செய்றாங்க. இட்லிக்கு மாவு ஆட்டுறது தொடங்கி, காய் நறுக்குவது, சாம்பார் செய்வது, கலந்த சாதம் தயாரிப்பது, காசு வாங்கிகிட்டு பில் தருவது, சாப்பாடு பரிமாறுவது, சாப்பிட்ட தட்டை எடுப்பது, அவற்றை கழுவவது என எல்லாருக்கும் வேலை சரியா இருக்கும்.



மகளிர் சுய உதவி குழுவில் யார் யார் எல்லாம் நல்ல படியா இயங்கி வந்தாங்களோ அவங்களுக்கு தான் இப்போ இந்த வேலை தந்திருக்காங்க. கலக்டர் கிட்டே நாங்க அப்ளை செய்து நேரடியா அவரே அனுமதி தந்தார். எனக்கு தெரிஞ்சு இது முழுக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தான் கிடைச்சிருக்கு. 

இங்கே வேலை செய்யும் பெண்கள் ஒவ்வொருத்தருக்கும் தினசரி 300 ரூபா சம்பளம். காலையில் 5 மணிக்கு வேலைக்கு வரணும். அப்போ தான் ஏழு மணிக்குள் இட்லி, சாம்பார் எல்லாம் தயார் செய்ய முடியும். ஏழு மணி முதல் 10 மணி வரை காலை டிபன் (இட்லி மட்டும்) அப்படின்னு போட்டிருக்கோம். ஆனா ஆறரைக்கே மக்கள் வந்துடுவாங்க. அதே போல மூடுற நேரம் பத்துன்னா கூட, பத்தரை வரை கியூ நின்னு சாப்பாடு வாங்குது. முடிஞ்சவரை எல்லாருக்கும் குடுத்துகிட்டு தான் இருக்கோம்.

இப்போதைக்கு ஏழு நாளும் நாங்க வேலை பாக்க வேண்டியிருக்கு. வாரத்தில் ஒரு நாள் மாத்தி மாத்தி லீவு கொடுங்கன்னு கேட்டுகிட்டு இருக்கோம். அதே போல ஒவ்வொருத்தரும் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை - 11, 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கு. நான் கிளம்ப சாயங்கலாம் அஞ்சு, அஞ்சரை ஆகிடும். வேலை நேரத்தையும் 8 அல்லது 9 மணி நேரமா மாத்தினா நல்லாருக்கும். இவ்ளோ நேரம் வேலை செய்றது கஷ்டமா தான் இருக்கு. ஆனா இப்ப தானே புதுசா ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுக்கும் எவ்ளவோ கஷ்டம் இருக்கும். அதனால நாங்க ரொம்ப அழுத்தி கேட்கலை. கொஞ்ச நாள் போகட்டும்னு இருக்கோம்.

காலையில் இட்லிக்கு - 27 கிலோ இட்லி அரிசி (ரேஷன் அரிசி தான்) ; 5 கிலோ பச்சரிசி, 10 கிலோ உளுந்து போட்டு மாவு அரைப்போம். சில நேரம் அதுவே பத்தாம போயிடுது. குறிப்பா ஞாயித்து கிழமை கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கும். கிரிக்கெட் ஆடுற பசங்க, வாக்கிங் போறவங்க அப்படின்னு வழக்கமா வர்ற ஆட்களை தவிர புது ஆளுங்க அன்னிக்கு அதிகமா இருக்கும். அன்னிக்கு மாவு இன்னொரு 50 % அதிகம் அரைக்க வேண்டியிருக்கும். 

வார நாளில் காலையில் 2500 இட்லி போகுது (ஒரு இட்லி ஒரு ரூபாய் என்பதால் - வருமானம் 2500 ரூபாய்) மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் 3500 ரூபா போகுது (சாம்பார் சாதம் 5 ரூபா; தயிர் சாதம் 3 ரூபா) சாம்பார் சாதம் கொஞ்சம் அதிக சேல்ஸ் ஆகும்.

எங்களுக்கு கொடுக்கிற சம்பளம், வாங்குற பொருட்கள் இதெல்ல்லாம் சேர்த்து பார்த்தா அரசாங்கத்துக்கு நிச்சயம் இன்னும் அதிக செலவு தான் ஆகும். அவங்க மேலே காசு போட்டு தான் நடத்துறாங்க

20
பெண்களுக்கும் வேலை சரியா இருக்கு. இடத்தை எப்பவும் ரொம்ப க்ளீனா வச்சிக்கணும்னு சொல்லிருக்காங்க. உடனே உடனே கூட்டி பெருக்கி கழுவி வச்சிருப்போம். சாப்பாடு நேரத்தில் யாருக்கும் உட்கார நேரம் கிடைக்குறது ரொம்ப கஷ்டம் தான். 


                                      


இப்போதைக்கு காலை, மதியம் ரெண்டு வேலை தான் சாப்பாடு குடுக்குறோம் ஏன் நைட்டுக்கும் தர கூடாதுன்னு நிறைய பேர் கேட்கிறாங்க. இதோ இந்த ரிஜிஸ்தரில் எழுதிட்டு போறாங்க.

அங்கிருக்கும் Feedback ரிஜிஸ்தரை காட்டுகிறார். படித்து பார்த்தால் ஒவ்வொரு நாளும் 50 பேராவது அதில் கருத்துகள் எழுதி விட்டு போவதை காண முடிந்தது. பலரும் இந்த சிஸ்டத்தை வாழ்த்தி எழுத, ஒரு சிலர் "இரவு சாப்பாடு போடலாமே ; இட்லி இன்னும் சற்று பெரிய சைஸ் ஆக இருக்கலாம் " என்றெல்லாம் கருத்து சொல்ல தவற வில்லை. 

குறிப்பாக வெளி மாநிலத்தை சேர்ந்த பலரும் தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் மிக மகிழ்ச்சியுடன் இந்த உணவகத்தை வாழ்த்தி எழுதியிருப்பதை காண முடிந்தது. இங்கு வேலை செய்யும் பெண்கள் மிக விரைவாகவும், அன்புடனும் சிறிதும் கோபப்படாமல் உள்ளனர் என பலரும் குறிப்பிட்டு எழுதியிருந்தனர். அதை அவரிடம் காட்டியதும் மகிழ்வுடன் ஆமோதித்தார். 

உணவகத்திற்கு வருகிறவர்கள் செருப்பை வெளியே தான் விட்டு செல்ல வேண்டும். ஒரு சிலர் செருப்புடன் உள்ளே வர, திருமதி. முரளி எல்லோருக்கும் கேட்கிற மாதிரி சற்று சத்தமாக இப்படி பேசினார் :

"
தயவு செஞ்சு செருப்பை வெளியே விட்டுட்டு வாங்க. இது நீங்க சாப்புடுற இடம். நீங்களே சுத்தமா வச்சிக்க வேணாமா? ப்ளீஸ் கோ ஆபரேட் பண்ணுங்க "

உள்ளே ஒரு சில ஆர்டர்கள் தந்து விட்டு மீண்டும் நம்முடன் வந்து பேச துவங்கினார். 

"
சமையலுக்கு தேவையான இட்லி, உளுந்து, பருப்பு எல்லாம் முன்னாடியே வந்துடும். ஸ்டோர் ரூமில் பத்திரமா வச்சிக்கணும். வரும்போதும் எழுதணும். அங்கிருந்து ஏதாவது எடுத்தாலும் ரிஜிஸ்டரில் எழுதிட்டு தான் எடுக்கணும். எப்ப வேண்ணா வந்து செக்கிங்க் பண்ணுவாங்க

இன்னைக்கு கூட எதிரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு மீட்டிங் இருக்கு. அதுக்கு கலக்டர் வர்றார். அவர் நேரடி கண்ட்ரோலில் நடக்குறதால இங்கே வந்து பார்ப்பார்னு நினைக்கிறோம். அவரு வர்றாருன்னு இல்லை எப்பவுமே இடம் சுத்தமா தான் இருக்கும். அதனால் எந்த பிரச்னையும் இல்லை. யார் வேணும்னா எப்ப வேண்ணா வந்து பார்க்கலாம்

இந்த இடம் ஆலந்தூர் முனிசிபல் ஆபிஸ் பக்கத்தில் இருப்பதால் அங்கே வேலை செய்றவங்க ரொம்ப உதவியா இருக்காங்க. ஏதாவது உணவு பொருள் தேவைன்னாலும் சரி, கேஸ் சிலிண்டர் காலி ஆனாலோ அல்லது இன்னொரு இட்லி பானை வேணும்னாலோ உடனே வாங்கி கொடுத்துடுறாங்க

                                           

குடி தண்ணீருக்கு தனி வாட்டர் பியூரிபையர் போட்டிருக்கு. ஆலந்தூரில் வரும் பாலாற்று தண்ணியை சுத்தம் பண்ணி நல்ல தண்ணியா கொடுக்குறோம். அருமையான மினரல் வாட்டர்.

இங்கு எந்த விதமான மக்கள் அதிகம் வருகிறார்கள் என்று கேட்க, " ஏழைகளுக்குன்னு துவங்கியது தான். ஆனா எல்லா விதமான மக்களும் வர்றாங்க. ஆபிஸ் வேலைக்கு போறவங்க, செக்கியூரிட்டிங்க, கூர்க்கா, தினம் ஸ்கூல் போகும் சின்ன பசங்க, கட்டிட வேலை செய்றவங்க இப்படி எல்லாரும் வர்றாங்க".

இப்போதைக்கு எங்களுக்கு கஷ்டம்னு பார்த்தா மாவு அரைப்பது தான் பெரிய விஷயமா இருக்கு. அப்புறம் 10 -12 மணி நேரம் வேலை செய்றது ; ஏழு நாளும் வேலை செய்றது இது மட்டும் சரி பண்ணா எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்றார்.

"
ஒரு நல்ல விஷயம் செஞ்சுகிட்டு இருக்கீங்க செய்றது அரசாங்கம் என்றாலும், எல்லாரும் உங்களை தான் மனசார வாழ்த்திட்டு போறாங்க. அது ரிஜிஸ்டரை பார்க்கும் போதே தெரிஞ்சுது. அவ்ளோ புண்ணியமும் உங்க புள்ளைகளுக்கு தான் சேரும்" என்று நான் சொல்ல முகம் மலர்ந்து புன்னகைத்து நமக்கு விடை கொடுத்தார் அந்த பெண்மணி !

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!




No comments:

Post a Comment