மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் குடும்பச் சண்டையால் ஆதிபராசக்தி நிர் வாகமே சி.பி.ஐ-யின் தொடர் அதிரடிகளில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. சமீபத்திய ரெய்டு மேட்டருக்குள் நுழைவதற்கு முன் ஒரு ஃப்ளாஷ்பேக் மேல்மருவத்தூரில் உள்ள ஒரு சிறிய வேப்ப மரத்தடியில் குறிசொல்லி தனது ஆன்மிகப் பாதையைத் தொடங்கியவர் பங்காரு அடிகளார். அசுர வளர்ச்சி பெற்ற அடிகளார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவினார். ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களைத் தோற்றுவித்தார். ஆதிபராசக்தி அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலம் மெட்ரிகுலேஷன் பள்ளி, பாலிடெக்னிக், அறிவியல் கல்லூரி, இன்ஜினீரியங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, விவசாயக் கல்லூரி என பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். தமிழ்நாடு, வெளிமாநிலம், வெளிநாடு எனப் பல ஆயிரம் கோடி சொத்துக்களை வாங்கிக்குவிக்க, மேல்மருவத்தூர் இன்றுவரை தனி ராஜாங்கமாகவே செயல்பட்டு வருகிறது. மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் கால் பதிக்காத அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளே இல்லை எனும் அளவுக்கு 'சக்தி’ வாய்ந்தது மேல்மருவத்தூர்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 2010-ல் முதன் முதலாக சி.பி.ஐ. ரெய்டைச் சந்தித்தன மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள். சுமார் 200-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் மேல்மருவத்தூர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அடிகளாரின் குடும்பத்தில் உள்ள அனைவரின் வீடு களிலும் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த ரெய்டுக்குக் காரணம், அதற்கு சில நாட்களுக்கு முன், ஊழல் விவகாரத்தில் சிக்கிய மருத்துவக் கவுன்சில் தலைவர் தேசாயிடம் வருமான வரித் துறையிடம் கைப்பற்றிய முக்கிய ஆவணங்கள். அவர் கடைசியாக அனுமதி கொடுத்த கல்லூரிகளில் இதுவும் ஒன்று என்பதும் அனுமதி முறைகேடாகப் பெற்றது என்பதும் தெரிந்தது. இதனால், சி.பி.ஐ., வருவாய் புலனாய்வுப் பிரிவு, வரு மான வரித் துறை மூன்றும் இணைந்து ரெய்டை நடத்தின. 18 மணி நேரம் நடந்த விசாரணையில் மேல்மருவத்தூர் வட்டாரமே ஆடிப்போனது.
இரண்டாவது அதிரடி, கடந்த அக்டோபர் 2012-ல் நடந்தது. இந்திய மருத்துவக் கவுன்சில் 27 மருத்துவர்களை இந்திய மருத்துவப் பதிவில் இருந்து நீக்கியது. ஐந்து வருடங்கள் வரை அவர்கள் மருத்துவத் துறை சார்ந்த எந்தப் பணியிலும் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவு பிறப்பித்தது. அதில் 25 பேர் மேல்மருவத்தூர் மருத்துவக் கல் லூரியில் முழு நேரப் பணியாளர்களாக வேலை செய்வதாகக் காட்டிக்கொண்டு பணிபுரிந்து வந் தனர். இவர்களைத்தான் அதிரடியாக நீக்கியது இந்திய மருத்துவக் கவுன்சில். சி.பி.ஐ. கொடுத்த புகா ரின் அடிப்படையில் இவர்கள் நீக்கப்பட்டதாக இந்திய மருத்துவக் கவுன்சில் அப்போது விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், சி.பி.ஐ-யின் மூன்றாவது அதிரடி... கடந்த 7-ம் தேதி கைப்பற்றிய 25 லட்ச ரூபாய் லஞ்சப் பணம்!
கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் முதுநிலைப் பல் மருத்துவப் பாடப் பிரிவைத் தொடங்க டெல்லியில் உள்ள அகில இந்தியப் பல் மருத்துவக் கவுன்சிலிடம் கல்லூரி நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் செய்திருந்தனர். கல்லூரியை ஆய்வுசெய்ய கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அகில இந்தியப் பல் மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றனர். கட்டமைப்பை ஆய்வுசெய்த அதிகாரிகள், 'கட்டமைப்பு சரியாக இல்லை. அவற்றை சரிசெய்த பின்னரே அனுமதி வழங்கப்படும்’ என்று கைவிரித்தனர். 'அதனால், அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் பொறுப்பு, கல்லூரி நிர்வாக அதிகாரி ராமபத்திரனிடம் வழங்கப்பட்டது. இதற்காக, சென்னையைச் சேர்ந்த இந்திய பல் மருத்துவக் கவுன்சிலின் உறுப்பினர் டாக்டர் முரு கேசனை அணுகினர். அதற்கான பேரம் நடந் துள்ளது. தவணைமுறையில் பணம் கொடுக்க ராம பத்திரன் ஒப்புக்கொண்டார். சி.பி.ஐ-க்கும் தகவல் கசிய, அவர்களும் தயாராக இருந்தனர்’ என்று சொல்லப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் முருகேசன் நடத்திவரும் பல் மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி மாலை 6.30 மணிக்கு பணம் கைமாறியதாக சி.பி.ஐ. சொல்கிறது. அப்போது அதிரடியாக உள்ளே நுழைந்த சி.பி.ஐ. அதிகாரிகள் மேல்மருவத்தூர் தரப்பில் கொடுக்கப்பட்ட பணத்தைக் கைப்பற்றினர். அறக்கட்டளை நிர்வாகி கருணாநிதி, ஆற்காடு தொகுதியின் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பழனி, ஆதிபராசக்தி கல்லூரி நிர்வாக அதிகாரி ராமபத்திரன் ஆகியோர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அடிகளாரின் இளைய மகன் செந்திலின் மனைவி ஸ்ரீலேகாதான் இப் போது ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியை நிர்வகித்து வருகிறார். ரெய்டு நடக்கும் தகவல் தெரிந்ததும் ஸ்ரீலேகா தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. அவருடைய வீட்டை சி.பி.ஐ. முற்றுகையிட்டுள்ளது.
மேல்மருவத்தூர் அடிகளாருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் பெயர் அன்பழகன். இளையவர் பெயர் செந்தில். ஒன்றாக இருந்த இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர். முன்பு அவர்கள் கல்லூரியில் ரெய்டு நடந்த நேரத்திலும் நாம் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம். அடிகளாருக்கு அடுத்த இடத் தில் அன்பழகன் இருப்பதா, செந்தில் இருப்பதா என்பதே இவர்களது போட்டியாக இருந்தது. அந்தப் போட்டிதான் இந்த ரெய்டு வெளியில் தெரியக் காரணம் என்கிறார்கள். 'அன்பழகன்தான் மீடியாவுக்கு செய்தியைக் கசிய விட்டார்’ என்று சந்தேகிக்கிறது அவருடைய தம்பி செந்தில் தரப்பு.
இதுகுறித்து விளக்கம் கேட்க செந்திலுடைய செல்போனுக்குத் தொடர்பு கொண்டோம். அது சுவிட்ச்டு ஆஃப். அவருடைய வழக்கறிஞர் பாலாஜி நம்மிடம் பேசினார். ''ரெய்டு நடந்து சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். மருத்துவக் கவுன்சிலுக்கு அவர்கள் லஞ்சம் கொடுக்கவில்லை. தவறாக பில்டப் செய்கிறது சி.பி.ஐ. இப்போது, ஸ்ரீலேகா இங்கு இல்லை. எங்கு இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியாது. அவர்களது குடும்பச் சண்டைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது'' என்றார்.
இந்தநிலையில், அன்பழகன் ஒரு வழக்குத் தாக் கல் செய்திருப்பதாகவும் அதில், தான் மட்டுமே உண்மையான வாரிசு என்றும் மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி நாம் அன்பழகனிடம் கேட்டபோது, ''இது என்னுடைய குடும்பப் பிரச்னை. அதை சரிசெய்துகொள்ள எனக்குத் தெரியும். நான் கோர்ட்டுக்குப் போகவும் இல்லை. வழக்கும் தொடரவில்லை'' என்றார்.
போகப் போகத்தானே எல்லாம் தெரியும்!
வீட்டுச் சண்டை வீதிக்கு வந்தது!
அடிகளாரின் குடும்பம் இப்போது சொத்துப் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது. சில வருடங்களாக சொத்துக்காக நடந்த சகோதர யுத்தம் இப்போது உச்ச நிலையை அடைந்துள்ளது.
வேலூர் மாவட்டம் கலவையில் உள்ள ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, இன்ஜினீயரிங் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றை அடிகளாரின் மூத்த மகன் அன்பழகன் நிர்வகித்து வந்தார். மேல்மருவத்தூர் இன்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி போன்றவற்றை இளைய மகன் செந்தில் நிர்வகித்து வந்தார். மேல்மருவத்தூரில் உள்ள பார்மஸி, பல் மருத்துவக் கல்லூரி போன்றவற்றை இளைய மகள் உமாதேவி நிர்வகித்து வந்தார். அடிகளாரின் மூத்த மகளின் கணவரான டாக்டர் ரமேஷ், மேல்மருவத்தூர் மருத்துவமனையை நிர்வகித்து வந்தார். மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை லட்சுமி பங்காரு அடிகளார் நிர்வகித்தார். இவர்கள் அனைவரும் மாதம் ஒருமுறை கூடி தங்கள் குடும்ப மீட்டிங் நடத்துவார்கள்.
மூத்த மகன் அன்பழகன் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் என்ற அமைப்பை 11 ஆண்டுகளுக்கு முன் நிறுவினார். பல இடங்களில் நிதிஉதவி பெற்று விழாக்கள் நடத்தி வந்தார். தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் செய்வார். இதனால், அன்பழகன் அந்த வட்டாரத்தில் பிரபலம் ஆனார். ஒரு கட்டத்தில் கொதிப்படைந்த செந்தில், கோயில் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மாநில ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி என்ற அமைப்பை உருவாக்கினார்.
இந்த நிலையில், 2010-ல் சி.பி.ஐ. ரெய்டு நடந்த அந்த இரண்டு நாட்களும் மாவட்டத்தின் எல்லைக்குள் நுழையாமல் தனது காரில் பயணம் செய்தபடியே இருந்தார் செந்தில். அன்பழகன் கல்லூரியில் நின்று, சி.பி.ஐ. அதிகாரிகளைச் சமாளித்தார். இது குடும்ப வட்டாரத்தில் அன்பழகனுக்கு மரியாதையை அதிகரித்தது. கூடவே, சகோதர யுத்தமும் உச்சத்துக்கு வந்தது. இரண்டு தரப்பினரும் உளவாளிகளை நியமித்து நோட்டமிடத் தொடங்கினர். இருவரின் ஆதரவாளர்களும் அடித்துக்கொள்ளத் துவங்கினர். அடிகளாரின் மகள்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் குறைக்கப்பட்டன. மேல்மருவத்தூரில் நடக்கும் எந்த விழாவுக்கும் அன்பழகன் அழைக்கப்படுவது இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தனது ஆதரவைத் தெரிவிப்பதாக அடிகளாரின் மூத்த மகன் அன்பழகன் கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வந்தார். இளைய மகன் செந்தில், ஜெயலலிதாவைச் சந்திந்துவிட்டு வந்தார்.
கடந்த புத்தாண்டு அன்று பக்தர்கள் எதிரே பேசிய லட்சுமி பங்காரு அடிகளார், 'அம்மாவுக்குப் பிறகு யாரும் வாரிசு கிடையாது. சின்ன அம்மா, பெரிய அம்மா என்று யாரையும் நம்ப வேண்டாம்’ என குண்டைத் தூக்கிப் போட்டார்.
இந்த நிலையில், நான்தான் உண்மையான வாரிசு என நீதிமன்றப் படி ஏறி இருக்கிறார் அன்பழகன். பங்காரு அடிகளார், லட்சுமி பங்காரு அடிகளார், செந்தில் குமார், ரமேஷ், ஸ்ரீதேவி, உமாதேவி, வெங்கடசாமி, மாரிமுத்து, கருணாநிதி என ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்து உள்ளார்.
எல்லாம் பங்காளிச் சண்டைப் பகை!
No comments:
Post a Comment