சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Apr 2013

மனிதனின் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்


சில நாட்களுக்கு முன்பு பார்த்த ஒரு சம்பவம் இது. எங்கள் வீட்டருகே இருக்கும் ஒரு டீக்கடைக்கு இரவு 10 மணிதாண்டி சென்றிருந்தேன். அந்த நேரத்திற்கு தான் மாநகராட்சி குப்பை வண்டிகள் தெருக்களுக்கு வந்து குப்பைகள் எடுத்துச் செல்லும். அன்று, என்னைத் தாண்டிச் சென்ற குப்பை வண்டியில் இருந்து, இரண்டு மாநகராட்சி தொழிலாளர்கள் இறங்கி, குப்பைத் தொட்டிகளை வண்டியில் கவிழ்த்து தங்கள் வேலையை வேகமாக செய்து கொண்டிருந்தனர். சிறிய தெருவாதலால், குப்பை வண்டியைத் தாண்டி வேறெந்த வண்டியும் செல்ல முடியவில்லை. ஒரு 4, 5 வண்டிகள் அதன் பின்னாலேயே நின்றிருந்தன. காத்திருந்த வண்டிகளை ஓட்டி வந்த அத்தனை பேரும், குப்பை வண்டியை நடந்து கடந்து சென்ற அத்தனை பேரும், மூக்கைப் பிடித்து, அறுவருத்து பார்த்தபடியே தான் சென்றனர். இதனை கண்டும் காணாமலும் அந்த தொழிலாளர்கள் தங்கள் வேலையை முடித்து வண்டியை கிளப்பிச் சென்றனர். மற்ற வண்டிகளும் நகர்ந்தன. இதே நிலையை, சாக்கடை அள்ளும் தொழிலாளர்களைப் பார்க்கும்போதும் பார்த்திருக்கிறேன்.

                             

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். தாங்கள் செய்யும் ஒரு தொழிலை, சுற்றியுள்ள அனைவரும், மூக்கைப் பிடித்து, அறுவருத்து பார்ப்பதை பார்க்கும்போது, அந்த தொழிலாளர்களின் மனம் எவ்வளவு நொந்து போகும் ? ஆம். அது அசிங்கம் தான். நாற்றம்தான். குப்பைதான். ஆனால், அது அவனின் அசிங்கம் அல்ல. நமது அசிங்கம். நமது நாற்றம். நமது குப்பை. குப்பைத் தொட்டியிலே, வீட்டில், கடைகளில் மீந்து போன சாம்பாரையும், அழுக்கு நீரையும் ஊற்றும் நமது அறிவீனம். நமது நாற்றத்தைப் போக்க அவன் நாறவேண்டும். நம்மை சுத்தமாக்கிக் கொள்ள அவன் அழுக்காக வேண்டும். நாம் அழகாக இருக்க அவன் அசிங்கமாக வேண்டும். ஆனால், அவனை நாம் மூக்கைப் பிடித்துக் கொண்டு, அறுவருப்பாகத்தான் பார்ப்போம். ம்ம். இதன் பின் இருக்கும் ஆழமான சாதியக் கூறுகளும், பல வலிகள் நிறைந்தவை. ஆச்சாரமானவர்கள் என்று கூறிக்கொண்டு இத்தொழிலாளர்களை கேவலமாக பார்ப்பவர்கள் எதற்காக வீட்டில் கக்கூஸ் வைத்திருக்கிறீர்கள்? அது ஆச்சாரமான இடமா? நீங்கள் கழியும் போது, மூக்கைப் பிடித்துக்கொண்டு, அறுவருத்துக்கொண்டா கழிகிறீர்கள்? இல்லையே... பேப்பர் படித்துக்கொண்டும்,மொபைல்களை நோண்டிக்கொண்டும்தானே அதையும் செய்கிறீர்கள். ஆனால் அசுத்தப்படுத்திய நீங்கள் சுத்தமானவர்கள். சுத்தப்படுத்தும் அவன் அசுத்தமானவன். சாதி, நிறம், தொழில், வர்க்கம் என அத்தனையும் இதில் அடங்கியிருக்கிறது. முக்கியமாக பொதுப்புத்தி.

அப்படி அவனை கேவலமாக பார்ப்பவர்கள், நாளையிலிருந்து, நீங்களே உங்கள் சாக்கடைகளை சுத்தம் செய்துகொள்ளத் தயாரா? நீங்களே, குப்பைகள் அகற்றி, கழிவுகளை நீக்கத்தயாரா? ஒரு நாள் அவன் வேலைக்கு லீவ் போட்டால், அன்று அவன் மிக சுத்தமாகத்தான் இருப்பான். நீங்கள்தான் நாறிப்போவீர்கள். தயாரா? இல்லை. தயார் இல்லை. ஏனென்றால், உங்கள் வேலை ஆபிஸில். அவன் வேலை சாக்கடையில். அவன் பரம்பரை ஆபிஸிற்கு வரமுடியாது. வந்தாலும் ஆபிஸ் கக்கூஸை க்ளீன் பண்ணத்தான் வரவேண்டும். இல்லையா? இதுதானே வர்ணாசிரம தர்மமும் அறிவுறுத்துகிறது. 4ஜி, 5ஜி என்று நாகரித்தின் உச்சம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தாலும், மனிதனின் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்

 இன்னமும் அரங்கேறிக்கொண்டுதானே இருக்கிறது. வெளிநாடுகளில் தொழில்நுட்பத்தோடு சேர்த்து மனித உழைப்பும் இருந்தாலும் அங்கு அதுஒரு வேலை. அவ்வளவே. யார் வேண்டுமானாலும் விண்ணப்பித்து, சேர்ந்து, மற்ற தொழில்களைப் போல் நிறைய சம்பாதிக்கக் கூடிய ஒரு வேலை. ஒரு சமூக சாபம் அல்ல. மலத்தையள்ளும் மனிதனையும் மலமாகவே பார்க்கும் நிலை அங்கு இல்லை. வேலைப்படி தாழ்தல் இல்லை. இங்கு மட்டும் ஏன் இப்படி? இந்த பிரச்சினையை விஞ்ஞானத்தாலும், அரசுகளாலும் தீர்க்க முடியாதா? நினைத்தால் நிச்சயம் முடியும். ஆண்ட இனங்களும், ஆளும் இனங்களும், பேண்டதை அகற்றும் நிலை வந்தால் முடியும். ஒரு குறிப்பிட்ட சாதிகள், குறிப்பிட்ட பிரிவுகள் மட்டும் இந்த வேலையை செய்யும் நிலை இருக்கும் வரை, இது மாறாது என்றே கருதுகிறேன்.

                                  

எப்படி விருப்பமில்லாமல், கொட்டி வரும் பணத்திற்காக, மண்டை பிளக்கும் சாப்ட்வேர் பணிகளையும், வேறுசில பணிகளையும் நீங்கள் சிரிப்புடன் ஏற்றுக்கொள்கிறீர்களோ, அதுபோல், வேறு வழிகள் ஏதும் இல்லாமல், சில ஆயிரங்களாக இருந்தாலும், வீட்டு அடுப்பை எரிய வைக்க வேறு வழிகள் இல்லாததால், தன் மனைவியின் பசியடைக்க, குழந்தைக்கு பால் குடுக்க, பிள்ளையை படிக்க வைக்க, அம்மாவிற்கு மருந்து வாங்க, தாத்தாவிற்கு வெத்தலை வாங்க, தன்னை விட கஷ்டப்படும் பக்கத்து வீட்டுக்காரனுக்கு கடன் கொடுக்க, எப்போதாவது பசியென தென்படும் பிச்சைக்காரனுக்கு தன் சோற்றைக் கொடுக்க என்று, அவன் உங்களை விட நேர்மையான காரணங்களுக்காகத்தான் இந்த வேலையை செய்கிறான். யாரையும் ஏமாற்றாமல், யார் வயிற்றிரும் அடிக்காமல். மலத்தை தன்னுள் சுமக்காமல் நடைபோடும் ஒரு மனிதனை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா??? அவனைக் கடந்து செல்லும் சில சில நொடிகளில், அவனை கட்டியணைத்து கொண்டாட வேண்டாம், கை கொடுத்து பாராட்ட வேண்டாம், ஒரு சிறு புன்னகை கூட வேண்டாம். மூக்கைப் பொத்தாமல் செல்லுங்கள். அது போதும். நாற்றம் அடித்தால், அந்த சில நொடிகள், மூச்சு விடாமல் மூச்சை அடக்கிக்கொண்டாவது கடந்து செல்லுங்கள். நிச்சயம் சாக மாட்டீர்கள். பல மனங்களை விட, அவன் உடல் ஒன்றும் அவ்வளவு நாற்றமில்லை.விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment