என் தங்கையின் மகன் லிங்கேஷ்க்கு குருவாயுரப்பன் கோவிலில் சோறூட்டும் நிகழ்வுக்காக செல்ல வேண்டியிருந்தது. சனிக்கிழமை இரவு 11 மணிக்கு கோவையிலிருந்து டெம்போ டீராவலரில் எங்கள் குடும்பம் ,தங்கையின் குடும்பமும் சென்றோம். முன்பே என் தங்கையின் முதல் குழந்தை அக்ஷ்யாவிற்க்காக ஒருமுறை குருவாயூர் சென்றதுதான் என்பதால் எங்களுக்கு திட்டமிடுதலில் எந்த குழப்பமும் இல்லை. காலை நான்கு மணி அளவில் குருவாயுரை அடைந்தோம். அந்த நேரத்திலும் குருவாயூர் பரபரப்பாகாவே இருந்தது. காலை நான்கு மணிக்கு முன்பே எழுந்து குளித்து விட்டு சாமி தரிசனம் செய்ய பெரிய வரிசை கட்டி நிற்கின்றனர் கேரள மக்கள்.
கோவிலை சுற்றி ஹோட்டல்கள் நிறைய இருக்கிறது. தங்குவதற்கு பல வசதிகளுடன் கூடிய அறைகள் இருக்கின்றன.பெரிய நடுத்தர ஹோட்டல்களும் இருக்கின்றன. மேலும் வசதியில்லாத மக்களுக்காக கோவிலின் கெஸ்ட் ஹவுஸ்களும் இருக்கிறது . இதையும் சில பேர் பயன்படுத்துவதில்ல்லை. குளியல் அறைகளில் குளித்து உடை மாற்றி விட்டு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டு விடுகின்றனர்.
சாமி தரிசனம் செய்ய பெரிய வரிசை நிற்கிறது. உள்ளூர் மக்கள் சன்னீதானத்தின் முன் நின்று கும்பிட்டு விட்டு நடையை கட்டி விடுகின்றனர். தரிசனம் செய்ய செல்லும் போது வெள்ளை வேட்டி, துண்டு மட்டுமே உடுத்தியிருக்க வேண்டும். சட்டை அணிய அனுமதி இல்லை. ஆனால் சில கேரளத்து ஆண்கள் சட்டையை கழட்டி ஒரு கையில் மட்டும் அணிந்து உள்ளே செல்கின்றனர். காவலர்களும் கண்டு கொள்வதில்லை . ஆனால் மற்ற மாநில ஆண்கள் சென்றால் சட்டை கழட்ட சொல்கிறார்கள் .
சாமிக்கு படைக்கப்பட்ட நைவேத்தியங்களை குழந்தைகளுக்கு முதன் முறையாக கொடுக்கின்றனர்.இந்த நிகழ்ச்சி முன்பு சந்நீதானத்தின் முன்பு தான் நடைபெறும். ஆனால் தற்போது மேலே மாடியில் அதற்கென்று தனியாக அறை ஒதுக்கியுள்ளனர். இப்போது கூட்டம் அதிகம் வரும் போல தெரிகிறது . ஒரே வரிசையில் 30 குழந்தைகளுக்கு சோறூட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோவிலினுள் கேமரா,செல்போன் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. கோவில் நிர்வாகமே போட்டோ எடுக்க ஏற்பாடு செய்கிறது. எத்தனை போட்டோ வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.ஒரு காப்பிக்கு இவ்வளவு அதுபோக ஆல்பம் என தனியாக ரேட் பேசுகிறார்கள். எங்கும் வியாபார மயமாகி விட்டது. அதேபோல கோவிலை சுற்றியுள்ள உணவகங்களில் சாப்பிடவும் முடியாது. முன்தினம் இரவு வைத்த இட்லியை காலையில் ஜில்லென்று பரிமாறுகிறார்கள். முன்பு அனுபவப்பட்டதால் இந்த முறை நாங்கள் தேவையான உணவை எடுத்து சென்று விட்டோம்.
குழந்தைகளுக்கு சோறூட்ட செல்பவர்கள் வரிசையில் நின்று சாமி கும்பிடுவது என்றால் இரவாகிவிடும். அந்த அளவு கூட்டம் இருக்கும். அதனால் இதுவரை சாமியை அருகில் சென்று பார்த்ததில்லை.ஆனால் இந்த முறை லிங்கேஷின் அதிர்ஷ்டமோ என்னவோ சாமியை பல்லக்கில் வைத்து வெளியே எடுத்து வந்தனர். அதனால் இந்த முறை அருமையாக அதிக நேரம் தரிசனம் கிடைத்தது.
தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்து குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு ( அதுவும் விலை அதிகம் தான். 20 ரூபாய் பொருள் 40 ரூபாய். ) ஆனாலும் குழந்தைகளுக்காக வாங்கித்தானே ஆக வேண்டும். பின் ஒரு நல்ல நிழலான இடமாக பார்த்து சாப்பிட்டோம். அடுத்து புன்னையூரில் உள்ள யானைகள் முகாம் பார்க்க செல்லலாம் என்று கிளம்பினோம்.
வாகனங்கள் உள்ளே செல்ல 10 ரூபாய் கட்டணம் .பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறுவர்களுக்கு 10 ரூபாயும் கட்டணம். கேமரா, செல்போன் கொண்டு செல்லவும் கட்டணம் உண்டு. ஆனாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. நானே என் செல்போனில் பல வீடியோக்களும் ,போட்டோக்களும் எடுத்தேன். ஒரு யானையை கட்டி சோறு போடுவது என்பதே ஆகாத காரியம் . ஆனால் இங்கு 60க்கும் மேற்ப்பட்ட யானைகளை பராமரிக்கிறார்கள். சில யானைகளை கும்கியாகவும் பயன்படுத்துகிறார்கள். மற்ற யானைகளுக்கு உணவு கொண்டு செல்லவும், இன்னொரு யானையை கும்கியாக பயிற்சி கொடுக்கவும் பயன்படுத்துகிறார்கள்.
சில யானைகள் பாகனின் மேலே கோபம் கொள்கின்றன.பாகன் அருகில் செல்லவே பயப்படுகிறார். பாகனின் மேல் சேற்றை எடுத்து வீசுவதும், சாப்பிட கொடுத்த இலையை தூக்கி வீசுவதும் , தும்பிக்கையால் பாகனை அடிக்க முயல்வதையும் நான் நேரிலேயே பார்த்தேன். அதே போல மிக சாந்தமான யானைகளும் இருக்கின்றன. சில யானைகளின் கண்களை பார்த்தால் அதன் கண்களில் உள்ள கோபம் தெரிகிறது. பாகன்கள் யானைக்கு பயிற்சி கொடுக்கும் போது யானை தவறாக செய்தாலோ , அல்லது செய்ய மறுத்தாலோ அவர்கள் வைத்திருக்கும் அங்குசத்தால் அடிக்கின்றனர்.பெரும்பாலும் அங்குசம் இரும்பினால் செய்யப்பட்டதாகவே இருக்கிறது. குழந்தைகள் எந்த பயமும் இல்லாமல் யானைகளை கண்டு வியக்கிறார்கள் .ஆனாலும் பெரியவர்கள் ஒரு சிறிய பயத்துடனேயே தான் பார்த்து விட்டு வெளியே வந்தோம்.
அடுத்து மீன்குளத்து பகவதியம்மன் கோவில். இதன் வரலாற்று சிறப்புகள் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இப்போதைய சிறப்பு கோவிலுக்கு எதிரில் ஒருபுறம் கட்டண கழிப்பிடமும், மறுபுறம் பாரும் உள்ளது. கோவிலின் முக்கியமான பிரச்சனை மிக அசுத்தமான குளம் தான்.குளத்துநீரில் குளித்துவிட்டு தான் அம்மனை தரிசிக்க செல்வார்களாம். ஆனால் ஒரு சொட்டு தண்ணீர் பட்டால் என்னென்ன நோய்கள் வரும் என்று தெரியாது ? அந்தளவு குளத்து நீர் மாசடைந்துள்ளது. கொளுத்தும் வெயிலில் அம்மனை தரிசித்து விட்டு வந்தோம்.
வெளியில் வந்தால் லாட்டரி சீட்டு வியாபாரம் பட்டையை கிளப்புகிறது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று விற்ற லாட்டரி சீட்டு இப்போது 20,
30,50,100 ரூபாய் என்று விற்கிறார்கள். ஒரு பெண்ணும் கூட லாட்டரி வாங்குவதை பார்த்தேன். படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம் கேரளா என்கிறார்கள்.ஆனால் லாட்டரி சீட்டில் மக்கள் மூழ்கிப் போய்விட்டார்களோ என்று தோன்றுகிறது.
அடுத்து பாலக்காடு வந்து சாப்பிட்டு விட்டு மலம்புழா வந்து பார்த்து விட்டு வீடு வந்து விடலாம் என்று திட்டமிட்டோம். மலம்புழா வரும் வழியெங்கும் போஸ்டர்கள் அதிகம் காணப்படுகின்றன. காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கட்-அவுட்கள், பேனர்கள், போஸ்டர்கள் என பட்டையை கிளப்புகின்றனறன. தமிழ்நாடு காங்கிரஸ் போலவே கேரளத்திலும் கோஷ்டி அரசியல் இருக்கும் போல தெரிகிறது. இவர்களுக்கு போட்டியாக சினிமா நடிகர்களின் போஸ்டர்களும் இருக்கின்றன. இப்போது மோகன்லால், மம்தாமோகன்தாஸ், பத்மபிரியா உட்பட நான்கு நாயகிகளுடன் போஸ்டர்களில் இருக்கிறார். இவருக்கு போட்டியாக திலீப் இருக்கிறார்.
வரும் வழி அனைத்தும் மலையடிவாரத்தை ஒட்டியே உள்ளது. நிறைய வீடுகள் மலை அடிவாரத்தில் உள்ளது . ஆனாலும் மழைக்கலாத்தில் மண்சரிவில் வீடுகள் இடிந்ததாக எந்த தகவலும் இல்லை. அதே போல எங்கும் மரம் இல்லாத வீடுகளை பார்க்க முடியவில்லை.விதவிதமான மாடல்களில் வீடுகளை கட்டி வைத்துள்ளனர். 3 சென்ட் அளவுள்ள இடத்தில் பாதி இடத்தில் வீட்டை கட்டி விட்டு மீதி இடங்களில் மரங்களை வளர்க்கின்றனர். அதனால் எங்கும் பசுமையாகவே இருக்கிறது. இருந்தாலும் கோடை வெப்பம் சில இடங்களில் தாக்கத்தான் செய்கிறது. கேரளத்தின் பிசியான சிட்டி நம் தமிழ்நாட்டின் இரண்டாம் தர நகரத்தை போன்று தான் உள்ளது.
அடுத்து நாங்கள் வந்து சேர்ந்த இடம் மலப்புழா அணைக்கட்டு. முன்பு ஒருமுறை வந்தபோது பார்த்ததை விட இப்போது மிகக்குறைவான நீரே அணையில் உள்ளது. ஆனாலும் தோட்டங்களை முடிந்தளவு நன்றாகவே பராமரிக்கிறார்கள். குழந்தைகள் விளையாட பூங்கா , ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு என நேரம் போவதே தெரியாது. இருட்ட தொடங்கியதும் பூங்கா முழுவதும்
விளக்கொளியில் வண்ணமயமாய்
ஜொலிக்கிறது. பார்க்க
பார்க்க இடத்தை
விட்டு நகர
மனம் வரவில்லை.
எப்படி இருந்தாலும்
கேரளத்தின் அழகை
ரசிக்க ஒருநாள்
என்பது பத்தாது.
கேரளம்
- கடவுளின் சொந்த
பூமி ( KERALA - GOD 'S WON COUNTRY ) என்று
கேரளத்து மக்கள்
சொல்வது உண்மைதானோ?
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..!
மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக
முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!
No comments:
Post a Comment