மக்கள் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்த தினத்தன்று நடந்தவைகள் பற்றி ஜூனியர்விகடனில் செளபா எழுதிய நேர்முக வர்ணனை இது :
முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள் இருந்து வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு, முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடு.. ஒரு தட்டு நிறையப் பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள் மயமாய் இருந்தது.
தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ''இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... 'எதுன்னாலும் நீ என்னை வந்து பார்... ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்?'' என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர்.
ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து, ''ரஷ்யாவில் லெனினின் உடலை ரசாயனத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலேயே ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பல முறை கல்வி அமைச்சருக்கு பெட்டிஷன் கொடுத்து இருக்கிறார்...'' என்றார்.
சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ., ''அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதை விரும்ப மாட்டார். அண்ணாவைப்போல, சந்தனப் பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்!'' என்றார். அந்தப் பிரமுகர் விடாப்பிடியாக, ''சந்தனப் பெட்டி நாட்பட நாட்படக் கரைஞ்சு போகும். நாம் கண்ணாடிப் பெட்டியில் ரசாயனத் திரவத்துக்குள் தலைவரைவெச்சு, அதை சந்தனப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், உடல் அப்படியே இருக்கும்!'' என்றார்.
சற்று யோசித்த ஆர்.எம்.வீ., ''எக்ஸ்பெரிமென்டலா எதையும் செய்ய முடியாது. முறையல்ல... அதெல்லாம் வேண்டாம்!'' என்று மறுத்தார். பின்னர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன் அடங்கிய குழு ஒன்று, முதல்வர் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்தைப் பார்வையிடக் கிளம்பியது.
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயலலிதாவிடம் சென்று, ''காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்...'' என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.
முதல்வரின் நெருங்கிய உறவினர்களை அழைத்தார் டி.ஜி.பி. ரவீந்திரன்! ''இறுதிச் சடங்குகள் குடும்ப வழக்கப்படிதானே...?'' என்றார். அவர்கள், ''ஆம்'' என்றதும், ''நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்படுங்க... நாளை மதியம் இரண்டு மணிக்கே அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்துடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்டாம்!'' என்று, அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார்.
திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.
ஒரு காவல் துறை அதிகாரியிடம், ''அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்... என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!'' என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது.
வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ''நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே... எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா...'' என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ''இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு...'' என்று விசும்பினார்!
கோவையில் இருந்து மருத்துவப் பல்கலைக்கழக விழாவுக்கென்று பஸ் பிடித்து வந்திருந்த ஒரு குழுவிடம் எழிலகம் அருகே பேச்சுக் கொடுத்தோம். நா தழுதழுக்கச் சொன்னார்... ''அடிமட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு... நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க... பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க... இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க... இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க...'' என்று குமுறிக் குமுறி அழுதார் அந்த அ.தி.மு.க. தொண்டர்!
ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட அதே சமயம், நாவலர் மற்றும் உயர் அதிகாரிகள், சமாதிக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க மெரினா பீச் வந்தார்கள். முதலில் ஐ.ஜி. ஆபீஸ் எதிரே போய்ப் பார்த்து, எந்த இடத்தில் எந்த அமைப்பில் சமாதி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்தார் நாவலர். ஆனால், உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் மற்றும் ஜேப்பியார் போன்றோர், ''அண்ணாவின் இதயக்கனி என்று பெயர் வாங்கியவர் தலைவர். அவரை அண்ணா சமாதிக்கு அருகில்தான் புதைக்க வேண்டும்...'' என்று வாதிட்டார்கள். பின்னர் நாவலரும் சம்மதித்து அண்ணா சமாதி அருகே வந்து இடம் தேர்ந்தெடுத்தார்.
இடம் தேர்ந்தெடுத்த அரை மணி நேரத்தில், பொதுப் பணித் துறையின் பணியாளர்கள் வெகுவேகமாகச் செயல்பட்டார்கள். ஆனால், வியாழன் மதியம் தொடங்கிய வேலை, வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் முடிந்தது. உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும் அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டு வேலையைத் துரிதப்படுத்தினர்.
முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்... ஆயிரக்கணக்கில் போலீஸ்...
டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. ''அடப் பாவிங்களா... தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா...'' என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ''வாத்யாரே... தெய்வமே... அப்பா...'' என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்... ''தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்... சுடுங்க...!'' என்று அலற, போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.
சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ''சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்...'' என்று முணுமுணுத்தார்.
அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ''எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க...'' என்றார். ''கழட்ட வேண்டாம்'' என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது.
தொடர்ந்து உள்துறைச் செயலாளர் ''எல்லோரும் பார்த்தாகிவிட்டதா?'' என்று கேட்கும்போதே என்.டி.ஆர்., ''எம்.ஜி.ஆர்!'' என்று உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தபடியே பேழையை மூட, ''வாழ்க!'' என்ற கோஷம் எதிரொலிக்க, கூடியிருந்த அமைச்சர்கள் சிலர் கலங்கிப் போய் ''ஏன் மூடினீங்க... திறங்க... தலைவர் முகத்தைக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்...'' என்று கதறினார்கள். குறிப்பாக ராஜாராமும் ஆர்.எம்.வீ.யும், ''திறங்க...'' என்றார்கள் உரக்க!
ஆனால், டி.வி.வெங்கட்ராமன், ''வேணாம் சார்... ஒரு முறை மூடிட்டா திரும்பத் திறக்கக் கூடாது... அது சம்பிரதாயம்...'' என்றார். இப்போது வீரப்பனுடன் சௌந்தரராஜனும் சேர்ந்து, ''ப்ளீஸ்... கடைசியா ஒரு தடவை பார்த்து விடுகிறோம்...'' என்று கெஞ்சினார்கள். உடனே உள்துறைச் செயலாளர் கையெடுத்துக் கும்பிட்டு, ''வேணாங்க... சம்பிரதாயப்படி மூடப்பட்ட பெட்டியைத் திரும்பத் திறக்கக் கூடாது... நான் நல்லதுக்குதான் சொல்றேன்...'' என்று சொன்னார். அத்துடன், ''உம்! சந்தனக் கட்டையை எடுங்கப்பா...'' என்று குரல் கொடுக்க, துண்டு துண்டாய் இருந்த சந்தனக் கட்டைகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டன.
பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை... குண்டுகள் முழங்க, பேழைக் குழியினுள் இறக்கப்பட்டது. சௌந்தரராஜன் தன் மடியில் வைத்து இருந்த புனித கங்கை நீர்ச் செம்பை உடைத்துக் குழியில் தெளித்தார். மற்றவர்கள் அழுது கொண்டே சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள்.
டி.ஜி.பி. ரவீந்திரன், ''உப்பு...'' என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு, அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது.
உள்துறைச் செயலாளர் தன் பாக்கெட்டில் இருந்து சூடம் எடுத்து சௌந்தரராஜனிடம் கொடுக்க, அவர் அதைக் கொளுத்தினார். ஒவ்வொருவராய் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்!
விறுவிறுப்பாக
வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன்பெற்றுக் கொள்வதற்காக
பகிர்ந்து கொள்ளுங்கள்.! நல்ல கருத்துக்களை உங்களோடு
பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை
ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !
No comments:
Post a Comment