சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 May 2013

மரியாதைக்குரிய மனிதர்......


படித்ததில் பிடித்தது  
ஆறு வருடங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவருடைய திருமணத்திற்காக நான் எனது உறவினர்களுடன் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்திருந்தேன்.

திருமணம் முடிந்தபின் இங்குள்ள பிரசித்தமான கோவில்களுக்குச்சென்று சாமி தரிசனம் செய்து வந்தோம்.

அன்றும் அப்படித்தான் காரைக்கால்,திருநள்ளாறு சென்றுவிட்டு வரும் வழியில் சிதம்பரம் நடராஜர் கோவிலுகுச்செல்லலாம் என தீர்மானித்திருந்தோம். நாங்கள் சிதம்பரம் கோவிலை அடையும் போது மணி இரவு ஒன்பதை தொட்டிருக்கும். கோவிலில்  பெரிதாக கூட்டம் இருக்கவில்லை.  சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்தோம்.கோவில் வீதியில் பல கடைகள் இருந்தன.எனக்கு கோலம் போடுவதில் ஆர்வம் அதிகம் என்பதால் கோலப்புத்தகங்களும் நிறப்பொடிகளும் வாங்கி சேர்த்து வைத்து கொள்வேன்.

அப்படித்தான் ஒரு கோலப்புத்தகக்கடையில் நின்று புத்தகங்களை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது அருகில் உட்கார்ந்திருந்த ஒரு மனிதர் என் கவனத்தை ஈர்த்தார். ஒரு நாற்பது நாற்பத்தைந்து வயதிருக்கும். இரு கண்களிலும் பார்வையை இழந்தவர்  போல் காணப்பட்டார்.வறுமை தன் சுவடுகளை அவர்மேல் நன்றாக பதித்திருந்தது போல் தோன்றியது.அவர் அருகில் ஓர் எடை எந்திரம் இருப்பதையும் பார்த்தேன்.  நான் அங்கேயே நின்று அவரை கவனித்துக்கொண்டிருந்தேன்.அவர் தன் சட்டைப்பையில் இருந்த மிகவும் சொற்ப அளவு சில்லறைகளை எடுத்து கைகளினால் தொட்டுப்பார்த்து எண்ணிக்கொண்டிருந்தார். அநேகமாக அதுதான் அவருடைய அன்றைய  தின வருமானமாக இருந்திருக்க வேண்டும்.

அவரது நிலையைப்பார்த்த என்னுள் ஒரு பரிதாப உணர்வு எட்டிப்பார்த்தது.எனது கைப்பையில் கையை விட்டு துழாவி கையில் அகப்பட்ட சில்லறைகளை அள்ளிக்கொண்டேன்.அவர் முன் போய் நின்று "ஐயா" என்று அழைத்தேன்.உடனே அவர் "என்னம்மா வெயிட்டு பாக்கணுமா"என சொல்லிக்கொண்டே அவர் அருகில் இருந்த எடை எந்திரத்தை எடுத்து அவருக்கு முன்னால் வைத்தார்.நான் எதுவும் பேசாமல் என் கையில் வைத்திருந்த சில்லறைகளை அவர் கைகளில் திணித்தேன். அப்போது என்னுடன் வந்தவர்கள் கிளம்ப வேண்டும் என்று என்னை அவசரப்படுத்த நான் திரும்பி பார்க்காமல் வெளி நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.அப்போது "ஏன் இவளவு காசு குடுக்கிற. வேணாம்மா இத வாங்கிட்டு போயிடு" என்று அவர் கத்தியது என் காதில் விழுந்தது."ஏம்மா உன்ன கூப்பிடுறாரு. அவரு சும்மா குடுத்தா வாங்க மாட்டாரு" என்று அருகில் கோலப்புத்தகக்கடை வைத்திருந்தவர் சொன்னதும் என்காதில் விழுந்தது.

முன்னர் அவரைப்பார்த்த போது பரிதாப உணர்வு மட்டும்தான் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவர் சும்மா பணம் கொடுத்தால் வாங்க மாட்டார் என்பதை கேட்டவுடன் அவர் மேல் ஒரு மரியாதை உணர்வும் ஏற்பட்டது.ஏனெனில் அர்ச்சகர் "தட்டில் தட்சணையை போடுங்கோ" என்று கேட்டு வாங்குவதை இங்கே பல கோவில்களில் நான் பார்த்தேன். பல கோயில்களில் பணம் கொடுத்தே சாமி தரிசனம் செய்ய வேண்டி இருந்தது.இப்படி இங்கு பல இடங்களில் பணத்தால்தான் எங்கள் காரியம் நிறைவேற வேண்டி இருந்தது.

அப்படி இருக்கையில் பார்வையற்ற நிலையிலும் வறுமையிலும் சும்மா கொடுக்கும் பணத்தை வாங்க கூடாது என்று நினைக்கும் செம்மையான குணம் கொண்ட அந்த மனிதர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.இருந்தாலும் இப்பொழுதெல்லாம் அச்சம்பவத்தை நினைக்கும் போது அம்மனிதருக்கு பிச்சை கொடுத்து அவரை அவமானப்படுத்தி விட்டேனோ என்ற குற்ற உணர்வும் என்னுள் ஏற்படுகிறது.


No comments:

Post a Comment