சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தேர்வு மையத்தில், பொறியியல் கவுன்சிலிங் நடக்கும். கவுன்சிலிங் தினத்தன்று, மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வர வேண்டும்.
தினசரி ஒவ்வொரு பிரிவு கவுன்சிலிங்கின் முடிவில் காலியிட விவரங்கள், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu ) வெளியிடப்படும்.
1. கவுன்சிலிங் நடக்கும் இடத்தில் வங்கி கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருக்கும். கவுன்சிலிங்கிற்கு வரும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் 1,000 ரூபாயும், இதர மாணவர்கள் 5,000 ரூபாயும் கவுன்சிலிங் முன்பணமாக கட்ட வேண்டும். கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள் இப்பணத்தை வங்கி கவுன்டரில் கட்டி, கவுன்சிலிங் படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
2. குறிப்பிட்ட நேரத்தில் கவுன்சிலிங்கிற்கு வரவேண்டிய மாணவர்கள் ஒலிபெருக்கி மூலம் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர். மாணவருடன், பெற்றோர் அல்லது உறவினர் ஒருவர் அனுமதிக்கப்படுவர். முதலில் கவுன்சிலிங் விளக்க அறைக்கு செல்ல வேண்டும். அங்கு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைமுறைகள் இரு பெரிய திரைகளில் விளக்கப்படும். மேலும் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை எந்த வரிசையில் அடுக்கி வைத்து எடுத்து வர வேண்டும் என்பதும் தெரிவிக்கப்படும். அதன்படி, மாணவர்கள் சான்றிதழ்களை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
3. இதற்கடுத்து, சான்றிதழ் சரிபார்க்கும் அறைக்கு செல்ல வேண்டும். அங்கு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். மாணவர்கள் கொண்டு வரும் சான்றிதழ்கள் உண்மையானவையா அல்லது போலியா என்பதை கண்டறிய நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருக்கும் மதிப்பெண்கள் உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருக்கின்றனவா என்பது சரிபார்க்கப்படும்.
4. அடுத்தகட்டமாக, கவுன்சிலிங்கிற்கு செல்ல வேண்டும். கவுன்சிலிங் அறையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் முன், வரிசை அடிப்படையில் மாணவரும் அவரும் ஒரு நபரும் அமர வைக்கப்படுவர். ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கு அருகிலும் ஒரு உதவியாளரும் இருப்பார். அந்த உதவியாளர் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்ய உதவுவார். அவரது உதவியுடன் காலியாக உள்ள இடங்களில், மாணவர்கள் தாங்கள் எந்தக் கல்லூரியில், எந்த பாடப்பிரிவில் சேர விரும்புகிறோம் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் ஒவ்வொரு மாணவர்களாக, தாங்கள் சேர வேண்டிய கல்லூரி, பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால், ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களுக்கு உரிய கல்லூரி, பாடப்பிரிவு கண்டிப்பாக கிடைக்கும்.
5. கவுன்சிலிங்கில் இடத்தை தேர்வு செய்யும் மாணவர்கள், கவுன்சிலிங் நடக்கும் கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள அறைக்கு சென்று, தங்களுக்கான இடஒதுக்கீட்டு கடிதத்தை (Allottment Letter) பெற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த பொறியியல் கல்லூரி மற்றும் தேர்வு செய்த பாடப்பிரிவு தான் இடஒதுக்கீட்டுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
6. அண்ணா பல்கலைக்கழகத்திலும், பல கல்லூரிகளிலும் மாணவர்களிடம் மருத்துவ தகுதிச் சான்றிதழ் கோரப்படுகிறது. இடஒதுக்கீட்டு கடிதத்தை பெற்ற பிறகு, தேவைப்படும் மாணவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு சென்று மருத்துவ தகுதிச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்.
தகவல் மையம்: பொறியியல் கவுன்சிலிங் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை 044 - 22358265, 66, 67, 68 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த தகவல் மையம் தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..!
மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.! நல்ல கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !
No comments:
Post a Comment