சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 May 2014

என் தலைவன்


சமீபத்தில் முகநூலில் நண்பர் ஒருவர் " நீங்கள் யாருடைய போட்டோவை உங்கள் பர்சில் வைத்திருக்கிறீர்கள்? என்று பதிவு போட்டு இருந்தார். நானும் பர்சை எடுத்து பார்த்தேன். அதில் என் தாத்தா ( அப்பிச்சி ) திரு .வெள்ளியங்கிரித்தேவர் அவர்களின் போட்டோ இருந்தது. பின்னர் அந்த நண்பரின் பதிவுக்கு" என் அப்பிச்சியின் போட்டோவை நான் வைத்திருக்கிறேன். அவர் தான் என்னுடைய ஹீரோ, என்னுடைய ரோல் மாடல் " என்று பின்னுட்டம் போட்டேன். பின் வந்த இரண்டு நாட்களாக அவருடைய நினைவுகளாகவே இருந்தேன். என் அப்பாவுடைய அம்மா, அப்பா இருவரும் அவருடைய சிறு வயதிலேயே இறந்துவிட்டார்கள். அதனால் அவர்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.

என் அம்மாவுடைய அப்பா என் அப்பிச்சி வெள்ளியங்கிரித்தேவர் வளர்ப்பிலேயே நான் அதிகம் வளர்ந்தேன். அவரை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இதை கருதுகிறேன். என் அப்பிச்சி வெள்ளியங்கிரித்தேவர் அவரது சிறுவயதிலேயே விவசாய வேலை செய்திருக்கிறார். அவருடைய அப்பாவுக்கு விவசாயத்தில் அக்கறை இல்லாததால் அந்த வேலையை தன் பத்து வயதில் செய்திருக்கிறார். அதன் பின்பு அப்பா செய்த கடனால் தோட்டத்தை கடன் கொடுத்தவர் எடுத்து கொள்ள வேறு வழியில்லாமல் திருப்பூரில் சலவைபட்டறைக்கு ( இன்று அது டையிங் ) வேலைக்கு சென்று சம்பாதித்துள்ளார்.

அடமானத்தில் உள்ள வீட்டை தன் கடுமையான உழைப்பால் மீட்டு தன் தங்கைக்கும் திருமணம் செய்து அவரையும் தன் சொத்தில் கொஞ்சம் இடம் கொடுத்து தன்னருகிலேயே வைத்து கொண்டார். தனது 34 வது வயதில் என் பாட்டி ( அம்மையா ) மயிலாத்தாளை திருமணம் செய்தார். பின் என் அம்மா பிறந்தவுடன் சில வருடங்களில் என் அம்மையா காசநோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அன்றைய நாட்களில் காசநோய் என்பது மிகவும் கொடிய நோயாம்.

அப்போது மருத்துவ வசதியும் நோயை பற்றிய விழிப்புணர்வும் இல்லாததால் அம்மையாவை காப்பாற்ற முடியவில்லை. அதன்பின் தனியாளாக என் அம்மாவை வளர்த்துள்ளார். தன் சுக துக்கங்களை மதிக்காமல் தன் மகளின் நழ்வாழ்க்கைகாக கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். பின் என் அம்மாவுக்கும் என் அப்பாவுக்கும் திருமணம் ஆனது. மகளை பிரிய மனம் இல்லாமல் தன் வீட்டிலேயே என் அப்பாவையும் இருக்க வைத்து திருப்பூரில் வேலையும் வாங்கி கொடுத்து இருக்கிறார். இதெல்லாம் அவரை பற்றி நான் என் அம்மா அப்பா மூலமாக கேட்டு தெரிந்து கொண்டவைதான்.
நான் பிறந்த பிறகு தான் அவருக்கு சந்தோசம் அதிகமாம். தனக்கு மகன் இல்லாததால் தன்னுடைய அண்ணன், தம்பிகளின் மகன்களையே கொஞ்சி வந்தவருக்கு பேரனாக நான் வந்ததும் அப்படியொரு சந்தோசமாம். நான் குழந்தையாக இருக்கும் போது கீழே படுக்க வைக்க விடமாட்டாராம். கீழே படுத்தால் உடம்பு வலிக்கும் என்று என் அம்மாவை திட்டுவாராம். என்னை தோளிலேயே தூக்கி சுமந்து சுற்றுவாராம்.


நான் விளையாட ஆட்டுக்குட்டிகளை வாங்கி கொடுத்திருக்கிறார். அதனுடன் தான் சிறு வயதில் விளையாட்டு. மாட்டு வண்டியில் விளையாடுவது,வண்டியை ஓட்டுவது எங்கள் ஊர் குளத்தில் நீச்சல் அடிக்க கற்று கொடுத்தது என அவரின் நினைவுகள் பல. என் தங்கை பிறந்தும் என் மீதான பாசம் துளியும் குறையவில்லை.

இரவு நேரத்தில் எங்கள் வீட்டு வாசலில் அவருடைய கட்டிலில் நானும் என் தங்கையும் படுத்து கொண்டு கதை கேட்போம். நாங்கள் தூங்கும் வரை அவருடனே வைத்து விட்டு தூங்கிய பின் வீட்டுக்குள் எடுத்து சென்று படுக்க வைப்பார். நான் பள்ளி சென்றால் என் அம்மாவுக்கு தெரியாமல் காசுகள் கொடுப்பார். இது நான் பன்னிரெண்டாம் வகுப்பு செல்லும் வரை தொடர்ந்தது. அதிகாலையில் எழுந்து சென்று விடுவார். நான் பள்ளிக்கு செல்லும் நேரம் சரியாக வீட்டுக்கு வந்து விடுவார். அல்லது பஸ் ஸ்டாப்பிற்கு வந்து பார்த்து விட்டு காசு கொடுத்து செல்வார்.
ஒரு சமயம் விபத்தில் அடிபட்டு அரசு மருத்துவ மனையில் இருந்தார். குணமாகி வீட்டுக்கு வந்தவுடன் மாட்டு வண்டியை வாங்கி வேலைக்கு சென்று விட்டார். 60 வயதில் வாழைத்தார்களை தோளில் தூக்கி செல்வதை பார்த்திருக்கிறேன். இன்று நாம் அதை செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

என்றும் அவரிடம் எனக்கு பிடித்தது அவருடைய தைரியம் தான். ஆனாலும் அளவுக்கு மிஞ்சின தைரியம். மாட்டு வண்டி ஓட்ட முடியாது என்ற பொழுது தென்னை கீற்றுகளை வாங்கி வந்து அதை தடுக்காக பின்னி விற்று சம்பாத்தித்து வந்தார். அவர் இறப்பதற்கு இரண்டு நாள் வரை தன் சொந்த உழைப்பை மட்டுமே நம்பி இருந்தவர். தன் சொந்த காசினால் தான் சாப்பிட்டு வந்தார்.


அவரின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அது என்னவென்றால் உள்ளூரில் தனக்கு தெரிந்தவர்களிடம் " என் பேரன் ஸ்டேட் பேங்குக்கு மேனஜரா வேலைக்கு போவான்" என்று அடிக்கடி சொல்வார். அப்போது எனக்கு அது வெறும் வார்த்தையாக தான் தெரிந்தது. ஆனால் இப்போது அவரின் ஆசையாக, ஏக்கமாக தெரிகிறது. என்னால் அதை செய்ய முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. இருந்தாலும் நான் இப்போது சிஸ்டம், லேப்டாப் என இருப்பதை பார்த்திருந்தாலும் அவர் மனம் சந்தோஷ பட்டிருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
என் அம்மா என்னிடம் செல்லமாக " எங்கப்பன் இல்லேன்னா நீ இப்படி சொகுசா வளர்ந்திருப்பியா என்று திட்டுவார்கள். நானும் அதற்க்கு " ஆமா கிழவன் இல்லேன்னா நான் அப்பிடியே இருந்திருப்போம் என்று விளையாட்டாக பதில் சொல்வேன். உண்மையில் என் அப்பிச்சி தான் எனக்கு பிடித்த தலைவன், ஹீரோ, ரோல்மாடல், எல்லாமுமாக இருப்பவர். அவரை பார்த்து அவரின் வளர்ப்பில் வளர்ந்ததாலோ என்னவோ அவரின் குணங்கள் எனக்கும் இருக்கிறது. இது நானே சொல்வது அல்ல. என் சில நடவடிக்கைகளை பார்த்து என் சொந்தங்கள் சொன்னது தான். அவரின் நினைவுகள் என்றும் என்னை சுற்றியே இருக்கும்.

No comments:

Post a Comment