உலகில் வேறு எந்த நாட்டில் மக்களவை உறுப்பினருக்கும் இல்லாத அளவில் இந்தியாவில் எம்.பி.க்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்தில் ஒரு எம்.பி.க்கு ஓர் அறையுள்ள அலுவலகம் மட்டும்தான் வழங்கப்படுகிறது. இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு பங்களா உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு வகையான சலுகைகளை அரசு வழங்குகிறது.
மக்களவை உறுப்பினருக்கு மாதச் சம்பளம் ரூ.16,000, மாதத் தொகுதிப்படி ரூ.20,000, மாத அலுவலகப்படி ரூ.4,000, மாத கடிதச் செலவுக்கு ரூ.2,000, உதவியாளர் ஊதியம் ரூ.14,000, ஒரு நாளைக்கு அவையில் பங்கேற்பதற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதுமட்டுமில்லாது டெல்லியில் உள்ள வீட்டுக்கு இலவசமாக 50,000 யூனிட் மின்சாரமும், 4,000 கிலோ லிட்டர் தண்ணீரும் ஒரு ஆண்டுக்கு இலவசமாக இரண்டு தொலைபேசிகளில் ஒரு லட்சம் இலவச அழைப்புகள், இண்டர்நெட்டில் பொருத்தப்பட்ட தொலைபேசிக்கு 50,000 இலவச அழைப்புகள், மொபைல் இன்டர்நெட்டில் இந்தியா முழுவதும் ரோமிங், வாடகை மற்றும் இணைப்புக் கட்டணம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தியாவில் எங்கும் செல்லக்கூடிய அளவில் பயணச் சீட்டுகள், 34 முறை இலவச விமானப் பயணங்கள் வழங்கப்படுகிறது. தொகுதியில் இருந்து மக்களவையில் கலந்துகொண்டு விவாதங்களைப் பார்வையிட 8 பேருக்கு பயணச் சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் வகுப்பு ஏ.சி. ரயிலில் தன் குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதியும், சோஃபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டுக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது. வீட்டில் உள்ள இருக்கைகள் மேஜைகள், திரைச்சீலைகள் பழுதுபார்த்தும் தரப்படுகின்றன. இந்தச் சலுகைகளை அனுபவிக்கும் எம்.பி. நமக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதில்லை.
இதையெல்லாம் அனுபவித்தது போக சட்டத்துக்கு புறம்பாகவும் சம்பாதிக்கின்றனர் நம் எம்.பி.க்கள். அவர்களுடைய வேலைகளை செய்வதற்க்கும் லஞ்சம், செய்யாமல் இருப்பதற்க்கும் லஞ்சம், தொகுதிக்கு ஒதுக்கும் பணத்திலும் ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். எம்.பி.க்களுக்கு இப்படி ஒதுக்கப்படும் பணம் அத்தனையும் ஏழை, மற்றும் நடுத்தர மக்களால் அரசாங்கத்துக்கு கட்டப்படும் வரிகள் மூலம் வரும் வருவாய்கள் தான். ஆனால் இவர்கள் ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் உயர எதாவது செய்கின்றனரா? என்றால் இல்லை.
தமிழ்நாட்டின் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெறும் ஒரு எம்.பி. அடுத்த ஐந்து வருடங்களுக்கு அந்த தொகுதி பக்கம் வருவாரா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் தேர்தல் சமயத்தில் மட்டும் தொகுதி மேலும் தொகுதி மக்கள் மேலும் பாசம் வந்துவிடும். என் தொகுதி எம்.பி தமிழக ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பி. ஆவார். ஆனால் அவர் இந்த ஐந்து வருடங்களில் ஒரு முறை கூட தொகுதியில் எந்த ஒரு அரசு நிகழ்ச்சிகளிலோ அல்லது அவர் சார்ந்த கட்சி கூட்டங்களிளோ கலந்து கொண்டதாக நான் படித்தது இல்லை.
தற்போது நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சீட் வழங்கபடவில்லை. ஏனென்றால் கட்சியிலேயே அவருக்கு ஆதரவு இல்லை. ஆனால் அவர் அதற்க்கு கவலைபடவும் இல்லை. ஏனென்றால் அவர் பதவியில் இருக்கும் போதே "நன்றாக" சம்பாதித்து நிரந்தர வருவாய்க்கு ஒரு மிகப்பெரிய மாடர்ன் ஸ்கூலை கட்டிவிட்டார். ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஏ.ஸி. வசதி செய்யப்பட்டதாக கேள்வி. அப்படி வசதிகள் நிறைந்த பள்ளியின் அட்மிஷன் வாங்க எவ்வளவு டொனேஷன் தர வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும்.
இனி வரும் தேர்தலில் நம் கஷ்டத்தை புரிந்து ஒரளவாவது மக்களுக்கு நன்மை செய்யும், எளிதில் மக்கள் அணுக கூடிய வேட்பாளரை தேர்ந்தெடுக்க உங்களின் ஓட்டுக்களை பதிவு செய்யுங்கள். தயவு செய்து சாதி, மத அடிப்படையிலோ, கட்சி சார்ந்தோ , ஓட்டு போட பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடாதீர்கள். ஊழல் , மற்றும் கொலை, கொள்ளை குற்றச்சாட்டுகளில் இருக்கும் வேட்பாளர்களை தயவு செய்து நிராகரித்து விடுங்கள். மக்கள் ஊழல் செய்யும் வேட்பாளர்களை ஆதரிப்பதில்லை என்பதை பட்டவர்த்தனமாக அனைவருக்கும் புரியும் படி சொல்லும் பொறுப்பு தமிழ்நாட்டின் நீலகிரி தொகுதி மக்களின் பொறுப்பு. இந்திய மக்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று அத்தனை அரசியல்வாதிகளுக்கும் உணர்த்த வேண்டிய பொறுப்பு நீலகிரி தொகுதி மக்களின் சுட்டுவிரலில் படும் கறையில் தான் உள்ளது.
நாம் நம் கைவிரலை கறைப்படுத்தி கொண்டு நம் நாட்டின் மீதிருந்த கறையை அகற்றுவோம்.
No comments:
Post a Comment