சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Nov 2012

சச்சின் vs பாண்டிங்


                 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு  பெறுகிறார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங். இதையடுத்து, தனது ஓய்வு குறித்தும் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு சச்சின் தள்ளபட்டுள்ளார். 

                    ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக் கேப்டனாக விளங்கியவர் ரிக்கி பாண்டிங், 37. இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை (2003, 2007) உலக கோப்பை வென்று சாதித்தது. கடந்த 1995ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் காலடி வைத்த இவர், 17 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். ஏற்கனவே இவர், 2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின் சர்வதேச "டுவென்டி-20' போட்டிகளில் விளையாடவில்லை.
டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இவர், பெரிதாக சோபிக்கவில்லை. இதில் கடைசியாக விளையாடிய தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்டில் மொத்தம் 20 ரன்கள் (0, 4, 16 ரன்) மட்டுமே எடுத்தார். இதனால் இவரது "பார்ம்' குறித்து விமர்சனம் எழுந்தது.

              இந்நிலையில் பெர்த்தில் இன்று துவங்கவுள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பாண்டிங் தெரிவித்தார். இதன்மூலம் இவரது 17 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. உள்ளூர் போட்டிகளில் "டாஸ்மானியா' அணியுடனான ஒப்பந்த காலம் முடியும் வரை விளையாடப் போவதாக தெரிவித்துள்ளார்.
     
           பாண்டிங் கூறியது: நீண்ட நாட்களாக யோசித்து எடுத்த இந்த ஓய்வு முடிவு கடினமான ஒன்று. சமீபகாலமாக போட்டியில் எனது செயல்பாடு சிறப்பானதாக இல்லை. அணியின் வெற்றிக்கு தேவையான பங்களிப்பை என்னால் முழுமையாக கொடுக்க முடியவில்லை. எனவே ஓய்வு பெறுவதற்கு இது சரியான தருணம் என நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். இது எனது சொந்த முடிவு. தேர்வுக்குழுவினரோ அல்லது வேறு யாருடைய ஆலோசனையின் படி முடிவு எடுக்கவில்லை.
               
            கிரிக்கெட் போட்டி காரணமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தினருடன் நீண்ட நேரம் செலவழிக்க முடியவில்லை. ஓய்வுக்கு பின் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பேன். இனி குடும்பம் தான் எனது புதிய அணி.
இவ்வாறு பாண்டிங் கூறினார்.


அடுத்து சச்சின்:
                   கிரிக்கெட் அரங்கில் பாண்டிங் மற்றும் இந்தியாவின் சச்சினை ஒப்பிட்டு பேசுவதுண்டு. சதம் அடிப்பதிலும், ரன் குவிப்பதிலும் இருவருக்கும் இடையே எப்போதும் போட்டி காணப்படும். தற்போது பாண்டிங் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், "பார்ம்' இல்லாமல் தவிக்கும் சச்சினும் விரைவில் ஓய்வு குறித்து முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரண்டாவது இடம்
                  கடந்த 17 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் பாண்டிங், இதுவரை 167 டெஸ்டில் 41 சதம், 62 அரைசதம் உட்பட 13,366 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு (15,562 ரன்) பின் இரண்டாவது இடம் பிடித்தார்.
பத்தாயிரம் ரன்களை கடந்தவர்கள்:
வீரர்                        போட்டி          ரன்         100/50
சச்சின் (இந்தியா)          192         15,562   51/65
பாண்டிங் (ஆஸி.,)    167        13,366 41/62
டிராவிட் (இந்தியா)   164       13,288 36/63
காலிஸ் (தெ.ஆ.,)   157        12,941 44/56
லாரா (வெ.இ.,)            131        11,953 34/48
பார்டர் (ஆஸி.,)            156        11,174 27/63
ஸ்டீவ் வாக் (ஆஸி.,)   168        10,927 32/50
சந்தர்பால் (வெ.இ.,)   146        10,696 27/61
ஜெயவர்தனா (இலங்கை) 135       10,640 31/43
கவாஸ்கர் (இந்தியா)        125       10,122 34/45

                * பாண்டிங், ஒருநாள் போட்டியிலும் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர், 375 ஒருநாள் போட்டியில் 30 சதம், 82 அரைசதம் உட்பட 13,704 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் (463 போட்டி, 18,426 ரன்) உள்ளார்.
           
                   * டெஸ்ட் அரங்கில், அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் பாண்டிங் (41 சதம்). முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் சச்சின் (51 சதம்), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (44) உள்ளனர்.
          
             * இதுவரை 6 முறை இரட்டை சதம் அடித்துள்ள பாண்டிங், ஒருமுறை கூட 300 ரன்களை தொட்டதில்லை. கடந்த 2003ல் இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த டெஸ்டில் 257 ரன்கள் எடுத்து, தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றார்.

இந்தியாவுக்கு எதிராக அதிகம்
            இதுவரை 167 டெஸ்டில் விளையாடி 13,366 ரன்கள் எடுத்துள்ள பாண்டிங், இந்தியாவுக்கு எதிராக 29 டெஸ்டில் அதிகபட்சமாக 2555 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 8 சதம், 12 அரைசதம் அடங்கும். தவிர இவர், இந்தியாவுக்கு எதிராக மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.
ஒவ்வொரு அணிக்கு எதிராக பாண்டிங் எடுத்த ரன்கள்:
எதிரணி          போட்டி               ரன்                100/50
இந்தியா                      29                2555          8/12
இங்கிலாந்து              35                2476           8/9
தென் ஆப்ரிக்கா      25                2120           8/11
வெஸ்ட் இண்டீஸ் 24                 1977         7/7
பாகிஸ்தான்                15                  1537         5/6
நியூசிலாந்து                 17                  1076         2/6
இலங்கை                14                   975         1/7 
ஜிம்பாப்வே                  3                   290         1/1
வங்கதேசம்                 4                   260               1/2
உலக லெவன்         1                   100            0/1

ஸ்டீவ் வாக் சாதனை சமன்
                      இன்று தனது 168வது டெஸ்டில் விளையாட உள்ள பாண்டிங், டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தை முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்குடன் பகிர்ந்து கொள்ள உள்ளார். சர்வதேச அளவில் இரண்டாவது இடம் பெற உள்ளார். முதலிடத்தில் 192 டெஸ்டில் விளையாடிய இந்தியாவின் சச்சின் உள்ளார்.
  
முதலும்...முடிவும்
                    கடந்த 1995ம் ஆண்டு பெர்த் நகரில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான பாண்டிங், 17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பெர்த் மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதன்மூலம் டெஸ்ட் வாழ்க்கையை துவங்கிய மைதானத்திலேயே ஓய்வு பெற இருப்பது சுவாரஸ்யமான ஒன்று.

வெற்றிக் கேப்டன்
                   டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன்கள் வரிசையில் பாண்டிங் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 77 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட இவர் 48 வெற்றியை தேடித்தந்துள்ளார். 16 டெஸ்டில் தோல்வி கண்ட இவர், 13 போட்டியை "டிரா' செய்துள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5' கேப்டன்கள்:
வீரர் போட்டி வெற்றி தோல்வி "டிரா' வெற்றி சதவீதம்
பாண்டிங் (ஆஸி.,) 77 48 16 13 62.33
ஸ்மித் (தெ.ஆ.,) 96 44 26 26 45.83
ஸ்டீவ் வாக் (ஆஸி.,) 57 41 9 7 71.92
லாய்டு (வெ.இ.,) 74 36 12 26 48.64
பார்டர் (ஆஸி.,) 93 32 22 38 34.40

* இந்தியா சார்பில் கங்குலி (21 வெற்றி), தோனி (20 வெற்றி) ஆகியோர் அதிக வெற்றியை தேடித் தந்துள்ளனர்.

சூப்பர் பீல்டர்
              "பீல்டிங்கில்' வல்லவரான பாண்டிங், டெஸ்ட் வரலாற்றில் அதிக "கேட்ச்' பிடித்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதுவரை 196 "கேட்ச்' பிடித்துள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் டிராவிட் (210 கேட்ச்) உள்ளார். தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (190 கேட்ச்) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா பாராட்டு
                         பாண்டிங் ஓய்வு குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) தலைவர் வாலி எட்வர்ட்ஸ் கூறுகையில், ""பாண்டிங் நேர்மையான வீரர். இவர், நிறைய போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கைகெடுத்துள்ளார். சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல் சிறந்த வீரராகவும் ஜொலித்த இவருக்கு மனமார்ந்த பாராட்டுகள். இவரது இடத்தை பூர்த்தி செய்வது கடினம். இவர், இளம் வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். ஓய்வுக்கு பின், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.

வற்புறுத்தக்கூடாது: காம்பிர்
                        இந்திய வீரர் காம்பிர் கூறுகையில்,""பாண்டிங் ஓய்வு பெறுவதால், சச்சினும் ஓய்வு பெற வேண்டும் என்று அர்த்தமில்லை. ஒவ்வொருவருக்கும், எப்போது ஓய்வெடுக்க வேண்டும் எனத் தெரியும். எனவே, யாரையும் ஓய்வு பெற வற்புறுத்தக்கூடாது. இருவரும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். எனவே ஒப்பிட்டு பேசக்கூடாது. 

                       இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் சச்சின். அணிக்காக, இன்னும் அதிக ரன்கள் எடுக்கக்கூடிய திறமை இவரிடம் உள்ளது. எல்லா மனிதர்களுக்கும் ஏற்றமும், இறக்கமும் இருக்கத்தான் செய்யும். விளையாட்டை தாண்டியும், இவர் அதிகம் செய்துள்ளார். 
சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றாற் போல, ஆடுகளம் வேண்டும் எனக் கேப்டன் தோனி கேட்பதில் தவறில்லை. அசாருதின் கேப்டனாக இருந்த போதும், இப்படித்தான் இருந்தது. அப்போது, யாரும் கேள்வி கேட்கவில்லையே. அடுத்து நடக்க உள்ள கோல்கட்டா டெஸ்டில் இந்திய அணி எழுச்சி பெறும்,''என்றார். 

No comments:

Post a Comment