'ஒவ்வொரு படைப்பின்போதும் நான் புதிதாகப் பிறக்கிறேன். ஒவ்வொரு நொடியும் நான் படைப்புச் சிந்தனையிலேயே இருக்கிறேன். இறக்கும்போதும் நான் ஒரு சிசுவாகத்தான் இறப்பேன்’ - இப்படித் தன் படைப்புகள் குறித்து தீர்க்கமாகச் சொன்னவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா. பள்ளிப் பாடப் புத்தகங்களில், அரசுப் பேருந்துகளில், அரசு அலுவலகங்களில், நீதிமன்றங்களில்... என பல இடங்களிலும், நாம் பார்த்துப் பழகிய மார்பு வரை நீண்ட வெண்தாடியோடு, ஒரு கையில் எழுத்தாணியையும், மறு கையில் பனை ஓலையையும் பிடித்தபடி அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தவர் இவர்தான். அதுவரை உருவம் இல்லாத திருவள்ளுவருக்கு 1959-ம் ஆண்டு தன் தூரிகையால் உயிர் கொடுத்தவர்.
அந்தத் திருவள்ளுவர் ஓவியம், தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிரமாண்ட விழா நடத்தி 1964-ம் ஆண்டு அப்போதைய இந்திய ஜனாதிபதி ஜாகீர் உசேனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது. அந்த ஓவியம் மட்டும் அல்ல... நின்ற நிலையில் திருவள்ளுவர், தமிழ்த்தாய், அறிஞர் அண்ணா... என இவர் தீட்டியிருக்கும் சில அரிய ஓவியங்கள் மீது இதுவரை ஒரு புகைப்பட வெளிச்சம்கூட விழுந்தது இல்லை. அந்த ஓவியங்களை, தன் வாழ்நாள் பொக்கிஷங்களாகப் பாதுகாத்துவருகிறார் வேணுகோபால் சர்மாவின் மகன் ஸ்ரீராம் சர்மா. அவற்றை விகடனுக்காக மட்டும் பிரத்யேகமாக, முதல்முறையாக வெளி உலகுக்குக் காட்டினார். இவர் யுனெஸ்கோ விருது பெற்ற குறும்பட இயக்குநர்.
'ஓவியம், சிற்பம், நாட்டியம், தமிழ்... என இந்த நான்கிலும் அப்பா தீவிரமாக ஆய்வுகள் மேற்கொண்டவர். அவர் செய்த வேலைகளில் மிக முக்கியமானது திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தது. இதற்காக சுமார் 30 ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். பல நூறு ஓவியங்களை வரைந்து, இறுதியாக இப்போது நாம் எல்லோரும் காணும் திருவள்ளுவரை வரைந்தார். அதை அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டு எட்டுத்திக்கும் கொண்டுசென்றார்கள். 'திருவள்ளுவரை ஈன்றெடுத்த தமிழ்த்தாய்க்கும் உருவம் தர வேண்டும்’ என சாண்டில்யன், தமிழ்வாணன், அறிஞர் அண்ணா மூவரும் அப்பாவிடம் கோரிக்கை வைத்தார்கள். 'தமிழ்த்தாய் எப்படி இருக்க வேண்டும் என ஏதேனும் குறிப்புகள் இருக்கிறதா அண்ணா?’ என அறிஞர் அண்ணாவிடம் அப்பா கேட்க, 'அதை நீங்கதான் கண்டுபிடிக்கணும். உங்களால் முடியும்’னு ஊக்கப்படுத்தினார் அண்ணா. நீண்ட நாட்கள் குறிப்புகள் கிடைக்கவே இல்லை. மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய 'எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து...’ என்ற வரிகளில்தான் அப்பாவுக்கு சின்ன லீட் கிடைத்தது. 'சீரிளமைத் திறம்வியந்து’ என்றால், தமிழ்த்தாய் இளமைத் தோற்றத்தில் இருக்க வேண்டும் என முடிவுசெய்து, 1959-ம் ஆண்டு வரையத் தொடங்கி 1979-ம் ஆண்டு தமிழ்த்தாய் உருவத்தை வரைந்து முடித்தார். 'இந்தத் தமிழ்த்தாய் ஓவியத்தை இப்படி வரைய என்ன காரணம்?’ என 19 காரணங்களை அடுக்கி நீண்ட விளக்கமும் எழுதியிருக்கிறார். அப்பா தன் வாழ்நாளின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கல்வெட்டுபோல தன் டைரியில் எழுதிவைத்திருக்கிறார். அதன் மூலம்தான் இவை எல்லாம் எனக்குத் தெரியவந்தன' என அந்த டைரியை நம்மிடம் காண்பித்தார்.
'அப்பா கடைசியாக வரைந்தது தமிழ்த்தாய் ஓவியம். அதன் பிறகு அவருக்கு ஸ்ட்ரோக் வந்துவிட்டது. நல்லவேளை அதற்கு முன்பே, அறிஞர் அண்ணா, முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத், தியாக பிரம்மம், தங்கமயில் முருகன்... என பல அரிய ஓவியங்களை வரைந்துவிட்டார். இவற்றில் திருவள்ளுவர், முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத்... ஆகிய மூன்று ஓவியங்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருக்கின்றன. மீதம் இருக்கும் இந்த ஓவியங்களை வரைந்து முடித்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இவற்றை எங்கள் குடும்பத்தினர் தவிர வேறு யாரும் பார்த்தது இல்லை. அப்பா பிறந்த டிசம்பர் மாதத்தில் இந்த ஓவியங்களைக் கண்காட்சியாக வைக்கலாம் என முடிவு எடுத்திருக்கிறோம். அதற்கு முன்பாக சில ஓவியங்களை விகடன் மூலமாக உலகத்தின் கண்களுக்கு அர்ப்பணிக்கிறோம்' எனக் கைகூப்புகிறார் ஸ்ரீராம் சர்மா!
சிரிக்கும் அண்ணா
அறிஞர் அண்ணாவை ஓவியமாக வரைய நிறையப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார் வேணுகோபால் சர்மா. அவற்றில் எதிலுமே அண்ணா சிரிக்கவில்லை. சிரிக்கச் சொன்னபோது அண்ணா மறுத்துவிட்டாராம். 'சிரிப்பதுபோல மனதில் நினைச்சுக்கோங்க. ஆனா, நீங்க சிரிக்க வேணாம்’ என சர்மா சொல்ல, மனதில் கள்ளம் கபடம் இல்லாத குழந்தைபோல சிரித்ததை சர்மா தீட்டிய ஓவியம் இது!
No comments:
Post a Comment