சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Dec 2015

போயஸ் தோட்டத்தின் புதிய இளவரசன்

போயஸ் தோட்டத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஒருவர் கோலோச்சுவார். இப்போது கார்டனின் இளவரசன், விவேக் ஜெயராமன். சசிகலாவின் அண்ணியான இளவரசியின் மகன். 25 வயதாகும் விவேக் ஜெயராமன், போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார். அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகார மட்டத்தில் `விவேக் ஜெயராமன்' என்ற பெயர் பயபக்தியுடன் உச்சரிக்கப்படுகிறது. `லக்ஸ்' திரையரங்கை நடத்திவரும் `ஜாஸ் சினிமாஸ்' நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி விவேக். `அங்கே மட்டும் அல்ல, கார்டனிலும் இவர்தான் முதன்மை செயல் அதிகாரி’ என்கிறார்கள்.
காதில் சிறிய கம்மல், ஃபேஸ்புக்கில் அரட்டை, விலை உயர்ந்த டுகாட்டி பைக், ஏராளமான நண்பர்கள்... என விவேக்கின் உலகம் இந்தத் தலைமுறைக்கானது. இவை எல்லாம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரைதான்.
ஜெயலலிதாவின் பார்வைபட்ட தினத்தோடு விவேக்கின் ஜாலி உலகம் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது முழுக்க முழுக்க ஜாஸ் சினிமாஸில் விவேக் செம பிஸி. ஜாஸ் சினிமாஸ்  திரையரங் குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது இவரது வேலை. ஜாஸ் சினிமாஸ் விவேக்கின் கைக்கு வந்ததும் நீண்ட நாள் மூடிக்கிடந்த `ஐமேக்ஸ்’ திரையரங்கும் திறக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் அதிகபட்சக் கட்டணமாக 120 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், ஜாஸ் சினிமாஸின் அங்கமான ஐமேக்ஸில் டிக்கெட் விலை 360 ரூபாய்.
கார்டனுக்குள் எப்படி வந்தார் விவேக்?
ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக்கொண்டிருந்த சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஒருநாள் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டார். ஜெயராமனின் மனைவி இளவரசி... கிருஷ்ணபிரியா, ஷகிலா, விவேக் என மூன்று குழந்தைகளோடு தனித்து விடப்பட்டார். இதில் ஜெயலலிதா செம அப்செட். `கணவர் இல்லாம ஏன் கஷ்டப்படறே? கார்டனுக்கு வந்துடு' என இளவரசிக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார் ஜெயலலிதா. கைக்குழந்தையாக இருந்தபோதே அப்பாவை இழந்ததால், விவேக் மீது மிகுந்த பிரியத்தோடு இருந்தார் ஜெயலலிதா.   அவர் என்ன கேட்டாலும் வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு செல்லப்பிள்ளையாகவே வளர்த்தார். ஆனால், தான் அதிகார மையத்தில் இருக்கிறோம் என எந்த இடத்திலும் விவேக் காட்டிக்கொண்டது இல்லை. பள்ளிக்காலத்திலும் சரி... கல்லூரிப் படிப்பிலும் சரி... `நன்றாகப் படிக்க வேண்டும்' என்பதுதான் அவரது கனவாக இருந்திருக்கிறது.
கோவையில் உள்ள சின்மயா மிஷன் சர்வதேசப் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தார். கல்லூரிப் படிப்புக்கு விவேக் தேர்ந்தெடுத்தது ஆஸ்திரேலியா. 2011-ம் ஆண்டு Macquarie Graduate School of Management என்னும் கல்லூரியில் இளங்கலை பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்து முடித்தார். பிறகு புனேவில் உள்ள சிம்பயாஸிஸ் கல்லூரியில் 2013-ம் ஆண்டு எம்.பி.ஏ மார்க் கெட்டிங் முடித்தார். அப்போதே ஐ.டி.சி நிறுவனத்தில் இன்டன்ஷிப் செய்தவர், படிப்பை முடித்ததும் பெங்களூருவில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் ரீஜினல் மார்க்கெட்டிங் கோ-ஆர்டினேட்டராக வேலைக்குச் சேர்ந்தார்.  இவரது பள்ளி, கல்லூரி காலம் முழுவதும் 'வளர்ப்பு மகன்' போல வளர்த்தது மன்னார்குடி திவாகரன். இவர், சசிகலாவின் தம்பி.
ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை
இந்த நேரத்தில்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. பெங்களூருவில் சிறைக்குள் இருந்த ஜெயலலிதாவுக்குத் தேவையான உணவு, மருந்து, ஆடைகள் போன்றவற்றைக் கொடுக்க, நம்பிக்கையான ஆள் ஒருவர் வேண்டும். `வெளியில் இருந்து ஒருவரை நம்பி இந்தப் பொறுப்புகளை ஒப்படைக்க முடியாது’ என யோசனையில் ஆழ்ந்த ஜெயலலிதாவுக்கு, விவேக் ஞாபகம் வந்தது. ஜெயலலிதா சிறைக்குள் இருந்த 21 நாட்களும் மருந்துப் பொருட்கள், உணவு... என எல்லா தேவைகளையும் நிறைவேற்றியவர் விவேக்.
அதுவரை தான் உண்டு, தன் வேலை உண்டு என இருந்தவருக்குத் தேடிவந்தது கார்டன் வேலை. ஜெயலலிதாவிடம் அவருக்குச் சமமாக ஆங்கிலத்தில் பேசும் மன்னார்குடி வாரிசு இவர் மட்டும்தான் என்பதால், அம்மாவின் செல்லப் பிள்ளையாக மாறினார் விவேக்.
ஜாமீன் பெற்று ஜெயலலிதா மீண்டும் கார்டன் வந்ததும், விவேக்கிடம் பல பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டன. அதில் முக்கியப் பதவி, ஜாஸ் சினிமாஸ்  சி.இ.ஓ. கிண்டி தொழிற்பேட்டையில் இருக்கும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகம் இப்போது படு பிஸி. தினம் தினம் சினிமா பிரமுகர்களைச் சந்திப்பது, புதிய படங்களை விலைக்கு வாங்குவது, ஜெயா டி.வி-க்கு சேட்டிலைட் உரிமம் வாங்கிக் கொடுப்பது... என ஆல் இன் ஆல் விவேக்தான். சுமார் 400 பேர் வரை வேலைபார்க்கும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்,  தமிழ்நாட்டில் உள்ள பிரதான தியேட்டர்களை தங்கள் வசம் கொண்டு வரும் அளவு வியாபாரத்தில் மும்முரமாகிறது.  
தியேட்டர்கள் எதையும் மொத்தமாக விலைக்கு வாங்காமல், குத்தகைக்கு எடுக்கலாம் என்பது 'ஐடியா'. எந்த தியேட்டராக இருந்தாலும் 5 ஆண்டுகள், 12 ஆண்டுகள் என குத்தகை அடிப் படையிலேயே பேசப்படுகின்றன. `நேரிடையாக  சொத்து வாங்கினால்தானே  வில்லங்கம் தேடி வரும். ஒப்பந்தம் போட்டுவிட்டு, தியேட்டர் ஃபர்னிச்சர்களைக் கணக்குக் காட்டி பேங்க் லோன் வாங்கலாம். லோனுக்கு மாதா மாதம் வட்டி கட்டினால் போதும். எந்த சட்டச் சிக்கலும் இல்லை' என பலரும் ஆலோசனை சொல்ல, விவேக் தரப்பு ஆர்வம் ஆகியிருக்கிறது. இதுவரையில் வங்கிக் கடனுக்கு சுமார் 1.25 கோடி ரூபாய் வரை வட்டி கட்டியிருக்கிறார்கள்.
``தமிழ்நாட்டில் 670 தியேட்டர்களில் 250 தியேட்டர்கள் தரம் வாய்ந்தவை. சினிமாவின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது இந்த தியேட்டர்கள்தான். இவற்றை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால்  தமிழ் சினிமாவின் எதிர்காலத்தைத் தீர்மானிப் பவையாக அவை மாறிவிடும். இந்தச் செயல் திட்டத்துக்கு வடிவம் கொடுப்பவர் விவேக்்'' என பின்னணியை விவரிக்கிறார் மன்னார்குடி வட்டாரங்களுக்கு நெருக்கமான ஒருவர். 

 
 
அரசியல் பஞ்சாயத்துகள் எதிலும் சிக்காமல் ஜாஸ் சினிமாஸை வளர்த்து எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் விவேக். ஆனால், `இன்னும் ஐந்து மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வெள்ளோட்டத்தில் அதிகம் அடிபடப்போவது விவேக் பெயராகத்தான் இருக்கும்’ என்கிறார்கள். இதுவரையிலான `ஸோ கால்டு' மன்னார்குடி குழுவினர்போல் அல்ல விவேக். இவர் தெளிவான பிசினஸ் மேன். இவர் மன்னார்குடி வெர்ஷன் 2.0.
இப்படியும் ஒரு வாரிசு...
இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா `கிருஷ்ணபிரியா ஃபவுண்டேஷன்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். சமீபத்திய மழை வெள்ளத்துக்குக்கூட இதன் சார்பாக உதவிகள் செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை கிரீம்ஸ் சாலையில் இயங்கிவரும் தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்புப் பள்ளியில் பங்காற்றிவருகிறார் கிருஷ்ணப்பிரியா. கார்டனுக்குள் இப்படி ஒரு வாரிசு!
மல்லுக்கட்டும் மன்னார்குடி வாரிசுகள்...
விவேக்கின் வருகை மன்னார்குடி குடும்பத்தினர் சிலரைப் பெரிதும் எரிச்சல்படுத்தி இருப்பதாகவும் சொல்கிறார்கள். இப்போது வரை சசிகலாவின் தம்பி திவாகரனால் கார்டனுக்குள் நுழையவே முடியவில்லை. அவரது மகன் ஜெயானந்த் `அத்தை (சசிகலா) எப்படியும் என்னைக் கூப்பிடுவாங்க' என நம்பிக்கையோடு காத்திருக்கிறார். லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஜெயானந்தும் விவேக்கும் நெருக்கமான நண்பர்கள். இப்போது அதிகாரப் போட்டியில் இருவருக்கும் இடையில் கசப்பு உருவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள்! 

No comments:

Post a Comment