சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Dec 2015

'தூக்கிட்டுப் போயிருங்க... இங்கே இருந்தா செத்துருவேன்!' - என்னதான் நடந்தது மியாட் மருத்துவமனையில்?

லகதரச்சான்று பெற்ற மருத்துவமனை என்று பெயர் பெற்று இருந்த மியாட் மருத்துவமனையின் அவல முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது கொட்டித் தீர்த்த கனமழை. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சுமார் 18 பேர் (20 முதல் 25 வரை இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது) முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மரணமடைந்திருக்கிறார்கள். மருத்துவமனை நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்தான் இத்தனை உயிர்கள் பலியாகக் காரணம் என்கின்றனர் இறந்தவர்களின் உறவினர்கள். 
சென்னையில் கனமழை, வரலாறு காணாத வெள்ளம்... மக்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் அலைந்து தவித்த வேளையில் வியாழக்கிழமை இரவிலிருந்து மியாட் மருத்துவமனையில் பலர் ஆக்ஸிஜன் இன்றி இறந்ததாக வாட்ஸ்-அப்பில் தகவல்கள் வெளியாக துவங்கின. வெள்ளிக்கிழமை செய்திகளில் அதிகாரப்பூர்வமாக  15 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியாகின. அவர்கள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிணவறைக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் எப்படி இறந்தனர்? இதற்கு யார் காரணம்? விவாதங்கள் இன்னும் தந்தியடிக்கின்றன!

சம்பவம் நடைபெற்ற மியாட் மருத்துவமனை கட்டப்பட்டுள்ள இடம் மணப்பாக்கம் ஏரி. 500 படுக்கைகளை கொண்டுள்ள இந்த மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கான சிறப்பு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டவர் பலரும் அங்கு தங்கி மருத்துவம் பெற்று வருகின்றனர். அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு புதன்கிழமை மருத்துவமனைக்குள் புகுந்தது. 

மருத்துவமனையின் கீழ் தளத்தில்தான் ஜெனரேட்டர் வசதிகள் உள்ளன. அதற்குள் நீர் புகுந்தது. ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் அங்குதான் வைக்கப்பட்டிருந்தன. புதன்கிழமை இரவே பலர் இறக்கத் துவங்கியதாகவும், ஆனால் அதனை மருத்துவமனை மறுத்ததாகவும் கூறப்படுகிறது. பணியில் இருந்த மருத்துவர்கள் கடைநிலை உதவியாளர்களே தவிர முறையான மருத்துவர்கள் இல்லை. அவர்கள் மழைக்குப் பயந்து வீடுகளுக்கு சென்று விட்டனர்.

வியாழக்கிழமையன்று மருத்துவமனை நிர்வாகம், 15 பேர் இறந்ததை இறந்தவர்களின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளது. கீழ் தளத்தில் புகுந்த தண்ணீரால் ஜெனரேட்டர்கள் இயங்காமல் போனது. அதோடு போதிய ஆக்ஸிஜன் சிலிண்டரும் இல்லை என்பதால்,  தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்கள் மூச்சுத் திணறி ஆக்ஸிஜன் இன்றி இறந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் மருத்துவமனை டீன் பிரித்வி மோகன் தாஸ், " இவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்து பிணவறையில் இருந்தவர்கள். மற்றவர்களை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டோம்" எனக் கூறியுள்ளார். 

ஆனால் உறவினர்களோ, ’இவர்கள் புதன்கிழமை வரை எங்களோடு உயிரோடு பேசிக்கொண்டிருந்தவர்கள். நிர்வாகத்தின் பொறுப்பற்ற கவனிப்பால்தான் இறந்துபோக நேரிட்டது’ எனக் கூறுகின்றனர்.
வியாழக்கிழமை அரசுக்கு தகவல் தெரிந்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணி மருத்துவமனையைப் பார்வையிட்டிருக்கிறது. அதன் பிறகுதான் பிணவறையில் இருந்தவர்கள்/இறந்தவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டும், சற்று உடல்நிலை தேறியவர்கள் டிஸ்சார்ஜும் செய்யப்பட்டனர் என்கின்றனர். ஆனால், தமிழக அரசுக்கு ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,  மருத்துவமனை கூறிய காரணத்தையே சுட்டிக் காட்டியுள்ளார். இடையில் யார் மூலம் என்ன அழுத்தம் வந்தது என்பது விடையில்லா கேள்வி. 

ராயபேட்டை மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது. தனது தாய் பரஞ்ஜோதியை பறிகொடுத்துவிட்டு கண்ணீருடன் நின்று கொண்டிருந்த  துர்க்கா பிரசன்னா நம்மிடம் கலங்கிய குரலில் பேசினார். 

“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு ரயில் பயண விபத்துல எங்க அம்மாவுக்கு தோள்பட்டை எலும்பு உடைஞ்சு போச்சு. அதுக்கு ஆபரேசன் பண்ணத்தான் நான் மியாட் ஹாஸ்பிட்டல்ல அம்மாவை சேர்த்தேன். ஆபரேசன் பண்ணப்ப அம்மாவுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டது.
அதுக்கு வெண்ட்டிலேட்டர் வைச்சாங்க. ஆனா, அது சரிவராதுனு சொல்லி தொண்டைல ஒரு ஆபரேசன் பண்ணாங்க. அப்புறம் ஐ.சி.யு-ல வைச்சிருந்தாங்க. செவ்வாய்கிழமை அன்னைக்குதான் மழை பெருசா பெய்தது. நான் ஹாஸ்பிட்டலுக்குப் போக முடியலை. போன் பண்ணி அம்மா எப்படி இருக்காங்கனு கேட்டேன். ’வென்ட்டிலேட்டர் வைச்சிருக்கோம். கவலைப்படாதீங்க’ன்னாங்க. 

மறுநாள் புதன்கிழமை ஹாஸ்பிட்டலுக்குள்ள தண்ணீர் வந்துருச்சுனு செய்தி வந்துச்சு. நான் ஹாஸ்பிட்டலுக்கு போன் பண்ணிக் கேட்டேன். எல்லாரையும் ராமச்சந்திரா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போயிட்டோம்னு சொன்னாங்க. ஆனா, மறுநாள் 18 பேர் இறந்துட்டதா தகவல் வந்தது. என் அம்மாவுக்குத்தான் ஆபரேஷன்லாம் முடிஞ்சிருச்சே. அவங்களுக்கு எதுவும் நடந்திருக்காதுனு நினைச்சேன். ஆனா, திடுக்னு அவங்க இறந்துட்டாங்கனு சொன்னாங்க...பதறிட்டு ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல் வந்து பார்த்தா எங்க அம்மா உயிர் இல்லாம கிடக்காங்க.

நான் மியாட் ஹாஸ்பிட்டல் போய் என்ன நடந்துச்சுனு கேட்டா, கேஸ் சீட்டை கைல கொடுத்து போங்கனு சொல்லிட்டாங்க. அங்கே வேலை பார்த்தவங்கதான்,  'வென்ட்டிலேட்டர் வேலை செய்யமா இறந்துட்டாங்க'னு சொன்னாங்க. ஆனா, அதே ஹாஸ்பிட்டல்ல வெளிநாட்டு நோயாளிகள் பிரிவில் இருந்த யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இப்போ வரை அவங்களை நல்ல முறைல கவனிச்சுட்டு இருக்காங்க. இறந்தவங்கள்ல ஒருத்தரைத் தவிர மத்தவங்கள்லாம் அரசுக் காப்பீடுத் திட்டம் மூலம் சிகிச்சைக்கு வந்தவங்களாம். அதனால அவங்க உயிரைப் பத்தி யாருக்கும் அக்கறை இல்லைபோல. 

இதுல கொடுமை என்னன்னா மருத்துவமனைல அனுமதிக்கப்பட்டிருந்த சொந்தக்காரங்களைப் பத்தி விசாரிக்கப் போனா, அங்கே வேலை பார்த்தவங்களுக்கு உயிரோட இருந்தவங்க யார்... இறந்தவங்க யார்னு கூடத் தெரியலை. இறந்து போன என் அம்மா அவங்க கவனிக்கிற பல நூறு நோயாளிகள்ல ஒருத்தவங்க. ஆனா, அவங்க எனக்கு ஒரே ஒரு அம்மாவாச்சே!’’ அதற்கு மேல் வார்த்தை வரவில்லை துர்க்கா பிரசன்னாவுக்கு. 

இறந்துபோன தனது உறவினரின் சடலத்தைப் பெற காத்திருந்த குணா சொல்லும் தகவல்கள் பகீர் ரகம். 
’’என் ஃப்ரெண்டோட அப்பாவை 10 நாட்களுக்கு முன்னாடி வயித்துவலினு மியாட்ல சேர்த்திருந்தோம். ஐ.சி.யுல வைச்சிருந்தாங்க. 30-ம் தேதி வரை நல்லா இருக்காங்கனு சொன்னாங்க. ஆனா, 1-ம் தேதி ராத்திரி திடீர்னு போன் பண்ணி அப்பா இறந்துட்டாங்கனு சொன்னாங்க. நாங்க ஹாஸ்பிடல் போனா அங்க யாருமே இல்ல. எட்டாவது மாடிக்கு படியேறும்போது, பல நோயாளிகள் தரைல கிடந்தாங்க. படி இறங்க முடியாம தவிச்சாங்க. நாங்களே பத்துக்கும் அதிகமானவங்கள கீழே இறக்கி ஆம்புலன்ஸ்ல அனுப்பி வைச்சோம்.

எங்க காலடிச் சத்தம் கேட்டதும் ஐ.சியுல இருந்தவங்க, ’எப்படியாவது எங்களை வெளியே கொண்டு போங்கனு கதறுனாங்க. ஒரு அம்மா, ’என்னை ஐ.சி.யூல இருந்து தூக்கிட்டுப் போயிருங்க. இங்கே இருந்தா நான் செத்துருவேன். நான் கீழே போய் கூட சாகுறேன். இங்க தனியா கிடந்து சாகமுடியாது’னு கதறி அழுதாங்க. 


எங்களுக்கே அழுகை வந்துருச்சு. அப்பா இறந்த சோகத்தை மறைச்சுட்டு  அவங்களை எல்லாம் கீழே கொண்டு வந்து விட்டோம். அப்புறம்தான் எங்க அப்பா உடம்பைக் கீழே இறக்குனோம். ஐ.சி.யூ-ல நாலு நாளா கரண்ட், சரியான சாப்பாடு இல்லாம பலரும் தவிச்சிருக்காங்க. சிலர் இறந்து நாள்கணக்கு ஆகியிருக்கும் போல. வார்டு முழுக்க துர்நாற்றம். வயித்து வலினு போனவர் எப்படி இறந்தார்னு இப்போ வரை எங்களுக்குப் புரியலை!’’ என்றார் வேதனையுடன்.

’’மருத்துவமனையில் மாற்று ஜெனரேட்டர் இல்லை!’’

மியாட் அசம்பாவிதத்தை மூடி மறைக்க தமிழக அரசே முயற்சிக்கிறது, சுகாதாரத்துறை செயலாளரே மருத்துவமனை நிர்வாகத்தைக் காப்பாற்ற முயற்சிக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் கிளம்பும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் என்ன சொல்கிறார். அவரிடமே கேட்டோம்... 
’’டிசம்பர் 3-ம் தேதி 4.30 மணிக்கே தகவல் கிடைச்சு  நானும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மியாட் மருத்துவமனைக்குப் போனோம். ஏன்னா, 3-ம் தேதி காலையில் அந்த ஆஸ்பத்திரி தரப்பில், 'தனியார்களிடம் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்கவில்லை' என்று கூறி அரசாங்கத்தை அணுகினார்கள். 

உடனே, நாங்கள் அரசுப் பொது மருத்துவமனையிலிருந்து அனுப்பிவிட்டோம். அதனால் அங்கே ஆக்ஸிஜன் பிரச்னையே இல்லை. ஆக்ஸிஜன் இல்லாததால் நோயாளிகள் அங்கே இறந்ததாகச் சொல்லப்படுவது சரியல்லை. 

ஒவ்வொரு மருத்துவமனையிலும் மின்சாரம், மொபைல் ஜெனேரேட்டர், பேக்கப் மொபைல் ஜெனேரேட்டர் வசதி ஐ.சி.யூ பிரிவுக்காக வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாய விதி. ஆனால், மியாட்  மருத்துவனையை நாங்கள் ஆய்வு செய்தபோது, மருத்துவமனையில் ஜெனேரேட்டர்கள் வெள்ளப் பெருக்கின் காரணமாக பழுதடைந்து செயலற்ற நிலையில் இருந்தன. 

மாற்று ஜெனேரேட்டர்கள் வேறு ஏதும் இல்லை.  உள் நோயாளிகள் 70 பேர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, 250 கிலோ வாட் ஜெனேரேட்டரை அந்த மருத்துவமனைக்கு நாங்கள் அளித்தோம்.  இந்நிலையில், ஏழு ஆம்புலன்சுகளை வரவழைத்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 56 நோயாளிகளை,  வேறு மருத்துவ மனைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தோம். மேலும், மியாட் மருத்துவமனையின் பிணவறையில் கடந்த சில நாட்களாக பல்வேறு நோய்களால் இறந்த 14 சடலங்கள்  இருந்தன. அவற்றின் உறவினர்கள் கடும் மழை காரணமாக எடுத்துச் செல்லவில்லை.
அவற்றை நாங்கள் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தோம். தற்போது இறந்ததாகச் சொல்லப்படும் நோயாளிகள் ஒரே நேரத்தில் இறக்கலை. வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு காரணங்களால் இறந்திருக்கலாம். அதுபற்றி, மருத்துவமனை நிர்வாகமே விளக்கம் கொடுத்திருக்கிறார் கள். 

அவர்களே வென்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்ற பல நோயாளிகளை வெளியேற்றியிருக் கிறார்கள். அதையும் தாண்டி சிலர் இறந்திருக்கிறார்கள். இது தொடர்பான உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது!” என்றார்.


No comments:

Post a Comment