சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Nov 2015

'இந்த மடம் நித்தியானந்தாவுக்கு சொந்தமானது...!' - டெல்டா மாவட்டங்களில் குபீர் கிளப்பும் சீடர்கள்

தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி நித்தியானந்தாவின் சீடர்கள் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினத்தில் உள்ள கோயில் மடங்களை பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை வடக்குவாசல் பகுதியில் உள்ளது பால்சாமி சித்தர் மடம். பால்சாமி சித்தரால் தோற்றுவிக்கப்பட்ட, 150 ஆண்டு பழமை வாயந்த இந்த மடம், 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. சிவன் கோயில் அமைந்துள்ளதால் பூஜைகள், வருடத்திற்கு ஒரு முறை குருபூஜைகளும் நடக்கும். ஏராளமான பக்தர்களும் வந்து செல்வார்கள். துருவானந்தா நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில், இன்று (5-ம் தேதி) காலை 10 மணிக்கு நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் 5 பேரும், ஆண் சீடர்கள் 4 பேரும் காரில் பால்சாமி மடத்துக்கு வந்து இறங்கினர். அங்குள்ள சிவன்கோயில் மடத்துக்கு முன்பு பெண் சீடர்கள் அமர்ந்து, ''இந்த மடம் நித்தியானந்தாவிற்கு சொந்தமானது, அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது'' எனக்கூறி, ஆவணங்களை எடுத்து காண்பித்தனர். மேலும், ''இனிமேல் நாங்கள் இங்குதான் இருப்போம்'' என்று சொல்லி அமர்ந்துகொண்டனர்.

அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பால்சாமி மடத்தை நிர்வகித்து வரும் துருவானந்தா,  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனால் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள்,  அவரது செல்போனை பறித்து வீசி, டெலிபோன் ஒயரை துண்டித்தனர். 

மேலும், நித்தியானந்தாவின் சீடர்கள் கொடிமரத்து மூலையில் உள்ள கிளை மடத்திற்கு சென்று அங்கு உள்ளே நுழைய முயன்றனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், நித்தியானந்தாவின் சீடர்களை வெளியேறுமாறு கூறினர். ஆனால், போலீசாரிடம் "இந்த மடம் நித்தியானந்தாவிற்கு சொந்தமானது!" எனக் கூறினார்கள். பினனர் அவர்கள் மடத்திற்குள்ளேயே அமர்ந்து சாப்பிட்டனர்.
இந்த தகவல் அறிந்து  இந்துமக்கள் கட்சியினர்,  பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து,  "நித்தியானந்தாவின் சீடர்கள் வைத்திருப்பது போலியான ஆவணங்கள்!"  எனச் சொல்லி, சீடர்களை வெளியேறுமாறு கோஷமிட்டனர். ஆனால், நித்தியானந்தா சீடர்கள் மடத்தைவிட்டு வெளியேறமாட்டோம் என்றார்கள். இதனால் பரபரப்பு நிலவியது. நித்தியானந்தா சீடர்கள் ஒருவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று மடத்துக்கு வெளியேவிட்டனர்.

திருவாரூர்
இதேப்போன்று திருவாரூர் சோமநாதர் கோயிலில், கடந்த ஒருவாரத்திற்கு முன்பு உள்ளே புகுந்த நித்தியானந்தா சீடர்கள், "இந்த கோயில் நித்தியானந்தாவிற்கு சொந்தமானது!" என்று சொல்லி, " இனிமேல் நாங்கள் இங்கே இருந்து நித்தியானந்தாவின் கொள்கைகளை பரப்புவோம்" என்றார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி ஆர்.டி.ஓ விசாரணைக்கு அனுப்பி வைத்தார்.
நாகப்பட்டினம்

அதேபோல், வேதாரண்யம் வடக்குவீதியில் உள்ள சாதுக்கள் மடம், பஞ்சநதிகுளத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள்ளும் நித்தியானந்தா சீடர்கள் புகுந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர். இந்த மடமும், கோயிலும் எங்களுக்கு சொந்தமானது எனக்கூறினர். பின்னர் தியான பீடத்தில் அமர்ந்து நித்தியானந்தாவின் கொள்கைகளை பரப்ப செய்தனர். புதிதாக நித்தியானந்தாவின் சீடர்களாக பொதுமக்கள் வரவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
மேலும், சாதுக்கள் மடத்தை நிர்வகித்து வந்த ஞானேஸ்வரந்தா விரட்டி அடிக்கப்பட்டார். அங்குள்ள கிராம நிர்வாகிகளை அழைத்து, இது நித்தியானந்தாவிற்கு சொந்தமானது எனக்கூறி ஆவணங்கள் தயார் செய்து தரும்படி கேட்டு வருகிறார்களாம். இதனால் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியிருக்கிறது.

மடத்தை நிர்வகித்து வந்த ஞானேஸ்வரந்தா இப்போது மடத்தில் இல்லாமல் வெளியில் இருந்து வருகிறார். இதுகுறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு, அந்த புகார் ஆர்.டி.ஓ. பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டெல்டாவில் கோலோச்ச நினைக்கும் நித்தியானந்தாவிற்கு, அவரது சீடர்கள் தூபம் போட்டு வருகிறார்கள் என்று மடத்தை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இவ்வளவு நாட்களும் நித்தியானந்தாவை சுற்றிதான் சர்ச்சைகள் சலங்கை கட்டியது. இப்போது  மடங்களை ஆக்கிரமிக்க கிளம்பி உள்ளதாக அவரது சீடர்களும் சர்ச்சை வளையத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். 


No comments:

Post a Comment