சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Nov 2015

குட்டீஸ் ஸ்பெஷல் சத்தான சமையல்

''மலையைக்கூட குடைஞ்சு எலியைப் பிடிச்சிடலாம். ஆனா, இந்த வாலுக் குட்டியை சாப்பிடவைக்கிறது இருக்கே... ரொம்பக் கஷ்டம்!'' என்று கையில் உணவோடு பிள்ளைகளின் பின்னாலே ஓடும் தாய்மார்கள் அதிகம்.
''குழந்தைகளைச் சாப்பிடவைப்பதிலும் ஒரு 'டெக்னிக்’ இருக்கு. குழந்தைகளுக்கு, சுவையோடு சத்துக்களும் நிறைந்த உணவை, பார்த்ததும் சாப்பிடத் தூண்டும் வகையில் கலர்ஃபுல்லாகச்  செய்துகொடுக்க வேண்டும்'' என்கிற டயட்டீஷியன் சந்தியா மணியன், குழந்தைகளுக்கான சத்தான ரெசிப்பிகளைப் பட்டியலிடுகிறார். அவற்றை ஆர்வத்துடன் செய்துகாட்டினார் சமையல்கலை நிபுணர் ரேவதி சண்முகம்.
ஃப்ரூட் பன்ச்  
ஓர் ஆரஞ்சு மற்றும் பாதியாக நறுக்கிய ஆப்பிள் இவற்றின் தோல், விதை நீக்கித் துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் அரை கப் மாதுளை, சிறிது தேன், அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, கால் டீஸ்பூன் சீரகத் தூள் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்து வடிகட்டவும். சிறிதளவு துளசி அல்லது கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கி, மேலாகத் தூவவும்.  
குறிப்பு: இஞ்சி சேர்த்திருப்பதால், பசியைத் தூண்டும்.
சாக்லேட் கம்பு தோசை
ஒரு கப் கம்பில் தண்ணீர் சேர்த்து நன்றாக கல், தூசி அரித்துக்கொள்ள வேண்டும். இதனுடன் கால் கப் உளுத்தம்பருப்பு சேர்த்து ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து வெண்ணெய் போல அரைத்தெடுக்கவும். இதை நான்கு மணி நேரம் புளிக்கவிடவும்.
சாக்லேட் சாஸ் செய்யும் முறை: ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெயைப் போட்டு உருக்கி, அடுப்பில் இருந்து இறக்கியதும் ஒரு மரக்கரண்டியால் நன்கு அடித்துக்கொள்ளவும். 2 டேபிள்ஸ்பூன் பழுப்புச் சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் பொடித்த சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் கொக்கோ பவுடர் சேர்த்து நன்கு மிருதுவாகும் வரை அடித்துக் கலந்துகொள்ளவும்.
இப்போது மாவும், சாக்லேட் சாஸும் தயார். தோசைக்கல்லைக் காயவைத்து, ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, வெந்ததும், அதன் மேல் சாக்லேட் சாஸ் ஊற்றிச் சுருட்டிக் கொடுக்கவும்.  
குறிப்பு: இந்தத் தோசையை, சூடாகச் சாப்பிட்டால்தான் ருசி.
ராகி டிலைட்
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, ஒரு கப் ராகிமாவைச் சேர்த்து, வாசனை வரும் வரை வறுக்கவும். அதனுடன் கால் கப் பொடியாக நறுக்கி வறுத்த பருப்பு வகைகளை (பாதாம், முந்திரி, வேர்க்கடலை, உடைத்த கடலை) சேர்த்துக் கிளறவும். அரை கப் வெல்லத்தில் ஒரு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கரைந்ததும் இறக்கி வடிகட்டவும். பாகு ஆறியதும், வறுத்த ராகி மாவுடன் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை உருக்கி, மாவில் கலந்து கட்டியில்லாமல் நன்கு பிசைந்து, சிறிய லட்டு போலப் பிடிக்கவும். அதன் மேலே சாக்லேட் சாஸ் ஊற்றி அலங்கரிக்கவும்.
குழந்தைகளின் கண்ணில் பட்டவுடன் தட்டும் காலியாகி விடும்.
ஃப்ரூட் அண்ட் நட் சாட்
2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கப்பட்ட பழக்கலவை (ஆப்பிள், வாழை, பேரிக்காய், கொய்யா, மாதுளை, பப்பாளி போன்றவை) மற்றும் 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய உலர்ந்த பழங்கள், கொட்டைப் பருப்புகள் (பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சம்பழம், அத்திப்பழக் கலவை), 2 டேபிள்ஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்றாகக் கலந்துகொள்ளவும். 10 பானிபூரிகள் எடுத்து, மேல் பகுதியை லேசாக உடைத்துவிட்டு, அதனுள் இந்தக் கலவையை நிரப்பவும். அதன்மேல் லேசாக க்ரீன் சட்னி அல்லது சாஸ் ஊற்றி, மேலே கொத்துமல்லி தூவி, சிறிது காராபூந்தி தூவிக் கொடுக்கவும்.
பள்ளி விட்டு, பசியுடன் வரும் குழந்தைகளுக்கு வயிறை நிரப்பும் ஆரோக்கிய ஸ்நாக்ஸ் இது.
சன்னா புலாவ் - ஃப்ரூட்ஸ் ரெய்தா
ஒரு கப் பாஸ்மதி அரிசியைக் கழுவி, ஒன்றே முக்கால் கப் தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். 2 பெரிய வெங்காயம், 2 தக்காளி இரண்டையும் மெல்லியதாக நறுக்கவும். குக்கரில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், நெய்யைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு, சிட்டிகை உப்பு சேர்த்து நிறம் மாறும்வரை வதக்கவும். அத்துடன் இஞ்சி-பூண்டு விழுது, ஒன்றரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு புதினா, கொத்துமல்லித்தழை, அரை கப் முளைகட்டிய சென்னா சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு, அரிசியை (ஊறவைத்த தண்ணீருடன்) சேர்த்து, கால் கப் தேங்காய்ப்பால் ஊற்றி, தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் கரம் மசாலாதூள் போட்டு நன்கு கலந்து, குக்கரை மூடி நிதானமான தீயில் வைக்கவும். ஒரு விசில் வந்ததும், தீயைக் குறைத்து 5 நிமிடம் 'சிம்’மில் வைத்து இறக்கவும். குக்கரின் பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறந்தால், பொல பொலவென்ற புலாவ் மணக்கும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள பழத் தயிர்ப் பச்சடி ஏற்றது.
ஃப்ரூட்ஸ் ரெய்தா
அரை கப் புளிக்காத தயிரில் உப்பு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். இதனுடன் அரை கப் (ஆப்பிள், வாழை, பப்பாளி, மாதுளை) பழக் கலவை, ஒரு டேபிள்ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கலந்து புலாவுடன் பரிமாறவும்.
குளிரவைத்துப் பரிமாறினால், மிகவும் சுவையாக இருக்கும். இது சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளவும் நன்றாக இருக்கும்.
சிவப்பரிசி (புட்டரிசி) பாயசம்
கால் கப் சிவப்பு அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் ஊறவைக்கவும். இதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் போட்டு, விப்பர் பட்டனால் ரவை போல அரைத்துக்கொள்ளவும். 2 கப் பாலை அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும், அரிசி அரைத்த கலவையைச் சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்துக்கொண்டே, விடாமல் கிளறவும். அரிசி ரவை வெந்ததும், அரை கப் சர்க்கரை சேர்த்து, தீயைக் கூட்டி, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். இறக்கிய பிறகு தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.
மிகவும் சத்தான, அதே சமயம் சுவையான பாயசம் இது. குழந்தைகளுக்குக் கஞ்சி போல, சிறிது கெட்டியாகச் செய்துகொடுக்கலாம். பச்சரிசி என்பதால், கைவிடாமல் கிளற வேண்டும். இல்லையென்றால் கட்டிதட்டி, அடிபிடித்துவிடும்.
பிரேமா நாராயணன் படங்கள்: ஜெ.வேங்கடராஜ்
குழந்தைகள் உணவு
சில ஸ்பெஷல் டிப்ஸ்:
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் அடங்கிய பிஸ்கட், நூடுல்ஸ், வெள்ளை பிரெட், வெள்ளை அரிசி மற்றும் எல்லா பேக்கரி தயாரிப்புகளையும் சிறிதளவு தான் கொடுக்கவேண்டும்.
அதிக அளவில் புரதம் குழந்தைகளுக்குத் தேவை. பருப்புகள், பயறு வகைகள், பசும் பால் மற்றும் பால் தயாரிப்புப் பொருள்களைக் கொடுக்கலாம்.
குழந்தையின் வயது மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்ப, தினமும் 1 முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கிறதா என்று கவனிக்கவேண்டும்.
அந்தந்த சீஸனில் விளையும் பழங்கள் இரண்டு அல்லது மூன்று, கலர்ஃபுல்லான காய்கறிகள் இரண்டு கப் குழந்தையின் தினசரி உணவில் இருக்கிறதா என்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஏனெனில், அவைதான் குழந்தைக்கு வைட்டமின், தாது உப்புகள் மற்றும் நார்ச் சத்தை அளிக்கின்றன.
பிள்ளைகளின் ஆரோக்கியம் பெற்றோர் கையில்!
தினமும் ஏதேனும் ஒரு வேளை உணவையாவது, குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவேண்டும்.
குழந்தைகளின் எதிரே, உணவு மீதான விருப்பு வெறுப்புகளைக் காட்டாதீர்கள்.
காபி / டீ அல்லது ஆரோக்கியத்துக்காக விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் எதையும் மருத்துவர் / ஊட்டச் சத்து நிபுணர் பரிந்துரை இன்றி குழந்தைக்குப் பழக்கப்படுத்தாதீர்கள்.  
சிறுதானியங்கள் மற்றும் நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். உதாரணத்துக்கு, தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம். இதனால், வயிற்றுக்குத் தேவைப்படும் சரியான அளவு சாப்பிட முடிவதோடு, நன்கு செரிமானமும் ஆகும்.
பிரார்த்தனை செய்துவிட்டுச் சாப்பிடுவது, உணவை நமக்காகப் பயிர் செய்யும் விவசாயி முதல், அனைவரையும் ஒரு நொடி நினைத்துவிட்டுச் சாப்பிடுவது... இவை எல்லாமே குழந்தையிலேயே பழக்கவேண்டியவை.
குழந்தைகள் ஓரளவு வளர்ந்ததும், சமையலில் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபடுத்துவது நல்லது. ஏனெனில் அம்மாக்களும் வேலைக்குப் போகும் இந்தக் காலத்தில், தானே சமைத்துச் சாப்பிடப் பழகிக்கொள்வது, அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. பிறரைச் சார்ந்திருக்கவும் வேண்டியதில்லை.


No comments:

Post a Comment