சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Sept 2015

நண்பரின் மனைவியை அடைய விமான நிலையங்களுக்கு மிரட்டல்: கைதானவர் திடுக்கிடும் தகவல்கள்!

பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான கம்ப்யூட்டர் என்ஜினீயர், நண்பரின் மனைவியை அடைவதற்காக தனது மனைவியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

டெல்லி மற்றும் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையங்களில் 6 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்று கடந்த சனிக்கிழமை அதிகாலையில் விமான நிலைய மேலாளருக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மிரட்டல் வந்தது.
இதையடுத்து இந்த 2 விமான நிலையங்களில், விமானங்களில் வெடிகுண்டு உள்ளதா? என்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும், புறப்பட்டு சென்ற சில விமானங்களும் மீண்டும் அழைக்கப்பட்டு தரை இறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அவை வெறும் புரளி என்பது சோதனைக்கு பின் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான கோகுலை கைது செய்தனர்.


போலீசாரின் தீவிர விசாரணையில் கோகுல் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''கேரளா மாநிலம் திரிச்சூரில் நானும், எனது நண்பர் மனைவியும் (தீபா பெயர் மாற்றப்பட்டு உள்ளது) 12 ஆம் வகுப்பில் ஒன்றாக படித்தோம். அப்போது நாங்கள் நண்பர்களாக பழகினோம். பின்னர் என்ஜினீயரிங் கல்லூரியிலும் ஒன்றாக படித்தபோது எங்கள் இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்தது. பின்னர் மேற்படிப்புக்காக நான் டெல்லிக்கு சென்றேன். அவர் திருச்சிக்கு சென்றுவிட்டார். அதன்பின் எங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

டெல்லியில் எனக்கு கம்ப்யூட்டர் என்ஜினீயரான அனுராதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறி, நாங்கள் இருவரும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். அதே ஆண்டில் தீபாவுக்கும் அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் தீபா தனது கணவருடன் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே எனக்கும், அனுராதாவுக்கும் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மீது நான் அளவுகடந்த பாசம் வைத்திருந்தேன்.

இந்நிலையில், என் மனைவி அனுராதாவிற்கும், அவர் பணிபுரிந்த கல்வி நிலையத்தில் இருந்த ஒரு மாணவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பது எனக்கு தெரியவந்தது. இதில் நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவத்தில் இருந்து தான் எனது வாழ்க்கையில் மோசமான திருப்பங்கள் ஏற்பட்டது. அனுராதாவை விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால், எனது மகள் மீதான பாசம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

இதனிடையே கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவுடன் மீண்டும் ‘பேஸ்புக்’ மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன். அவருடன் நான் நெருங்கி பழக முயன்றேன். ஆனால் அதற்கு தீபா இடம் கொடுக்கவில்லை. தீபாவை அடைவதற்கு எனது மனைவியும், தீபாவின் கணவரும் தடையாக இருப்பதாக உணர்ந்த நான் இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி முதலில், என்னை நல்லவனாகவும், எனது மனைவி தவறான நடத்தை கொண்டவள் என்பதையும் முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டான தீபாவின் தந்தையிடம் உணர்த்த முடிவு செய்தேன்.

அதற்காக 2011 ஆம் ஆண்டு பாபா என்ற பெயரில் ஒரு போலி இ-மெயில் முகவரியை தொடங்கி, அதிலிருந்து எனது மனைவிக்கு இ-மெயில் அனுப்பி அவளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தேன். அப்போது அவளுக்கும், இன்னொருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதை அனுராதா, நான் அவள் கணவர் என்று தெரியாமல் எனக்கு மெயில் மூலம் தெரியப்படுத்தினாள்.

இதேபோல், ‘ஜோதிடர் ஆஷா’ என்ற இன்னொரு இ-மெயில் முகவரி வழியாக எனது மனைவியுடன் தொடர்புகொண்டேன். அப்போது, உங்களின் குறைகளை என்னிடம் தெரிவித்தால், அதை நான் தீர்த்து வைக்கிறேன் எனக் கூறினேன். அப்போதும் அனுராதா தனது கள்ளக்காதல் விவகாரத்தை மறுபடியும் என்னிடம் தெரிவித்தாள். அதற்கு நான், ‘நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் நிர்வாண புகைப்படத்தை எனக்கு அனுப்புங்கள். அந்த புகைப்படத்தை வைத்து பூஜை செய்தால் உங்களது கணவர் உங்களை நெருங்க மாட்டார்’ என தெரிவித்தேன்.

அதை உண்மை என நம்பிய அனுராதா, தான் கள்ளக்காதலனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை எனக்கு அனுப்பினாள். இதற்காகவே அனுராதா டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து இருவரும் குளிப்பது போன்ற படங்களை எடுத்து அனுப்பியிருந்தாள். இந்த புகைப்படங்களை நான் சேகரித்து அவளுக்கு எதிரான ஆதாரங்களாக திரட்டினேன். கடந்த ஆண்டு (2014) ஜனவரி மாதம் நான் பெங்களூருவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டேன். உடனே நான், தீபா குடியிருக்கும் எச்.எஸ்.ஆர். லே-அவுட் அடுக்குமாடி குடியிருப்பிலேயே வாடகைக்கு வீடு எடுத்து எனது மனைவியுடன் தங்கினேன். தீபாவின் கணவருடன் பழகி நண்பனாக்கிக் கொண்டேன். அதை வைத்து தீபாவின் வீட்டுக்கு நான் அடிக்கடி சென்று வந்தேன். 

கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி நான், எனது மனைவியுடன் மீண்டும் ஆஷா என்ற இ-மெயில் முகவரியில் இருந்து தொடர்பு கொண்டேன். அப்போது, உங்களுக்காக நான் சிறப்பு பூஜை செய்ய உள்ளேன். இதனால் நீங்கள் குடிபோதையில் இருக்க வேண்டும் என்றேன். இதை உண்மை என நம்பிய அனுராதா அரை பாட்டில் அளவுக்கு மதுபானம் அருந்தி மிதமிஞ்சிய போதையில் இருந்தாள். அதோடு மீண்டும் டெல்லிக்கு மாற்றலாகி போக வேண்டும் என்று என்னிடம் தகராறு செய்தாள். இதில் ஆத்திரம் அடைந்த நான், வீட்டில் இருந்த விநாயகர் சிலையை எடுத்து அவளுடைய தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன்.

பின்னர் கொலையை மறைப்பதற்காக குடிபோதையில் தடுமாறி டி.வி. ஸ்டேண்டில் தலை இடித்ததால் அனுராதா இறந்துவிட்டதாக நாடகமாடினேன். இதனை அங்கு இருந்த அக்கம்பக்கத்தினரும் நம்பிவிட்டனர். இதுகுறித்து மடிவாளா போலீசில் மர்மசாவு என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுராதாவின் கள்ளக்காதல் விவகாரங்கள் தொடர்பான ஆதாரங்களை எனது மாமானாரிடம் காட்டியதால் அவரும் அதை உண்மை என நம்பி என் மீது சந்தேகப்படவில்லை. போலீசாரின் சந்தேகம் என் மீது இருந்தாலும், எனது மாமனார் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தவர் என்பதால் அவர் போலீசாரிடம் எனக்கு ஆதரவாக பேசினார்.

அனுராதா இறந்ததால் அடுத்து தீபாவின் கணவரை என்ன செய்யலாம்? என சிந்தித்தேன். முதலில் பெங்களூர் பிஷப் எழுதுவதுபோல தீபாவுக்கு கடிதங்கள் எழுதினேன். முதலில் தீபாவுக்கு சாதகமான கடிதங்களை எழுதி நம்பவைத்து, இறுதியாக உனது கணவரை விவாகரத்து செய்துவிடு என்று எழுதினேன். இதேபோல் தீபாவின் கணவருக்கும் உனது மனைவியை விவாகரத்து செய்துவிடு என்று கடிதம் எழுதினேன். ஆனால் அவர்கள் விவாகரத்து செய்ய மறுத்துவிட்டனர்.

அடுத்ததாக தீபாவின் கணவரின் போட்டோ, பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ் ஆகியவற்றை அவரது வீட்டில் இருந்து திருடினேன். அதை வைத்து அவரது பெயரில் புதிதாக சிம்கார்டு வாங்கினேன். அதேபோல் அவரது பெயரிலேயே ஒரு புதிய செல்போனும் வாங்கினேன். அந்த செல்போன் எண்ணில் இருந்து விமான நிலையத்திற்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், போலீசார் தீபாவின் கணவரை கைது செய்து விடுவார்கள் என்று நினைத்து அந்த செயலை செய்தேன். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் நான் மாட்டிக் கொண்டேன்" என்று கூறி உள்ளார்.


இந்த வழக்கு தற்போது கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. அனுராதா மர்ம சாவு வழக்கும் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கோகுலை 2 வாரம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் கோகுலிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment