சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Sept 2015

பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த அன்புமணி!

‘அன்புமணி பார் சேஞ்ச்’ என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மொபைல் அப்ளிகேஷன் துவங்கப்பட்டுள்ளது. இதனை பாமகவின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.  இந்த ஆப்ஸை அறிமுகப்படுத்தும் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்கள் மீது தனது கடுமையான கோபத்தை அன்புமணி வெளிப்படுத்தினார்.
சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?
நிச்சயமாக…!  அமெரிக்காவில் ஒபாமா வெற்றி பெற சமூக வலைதள பிரச்சாரம் முக்கியமான காரணமாக இருந்தது.  அதேபோல கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெறுவதற்கும், மகராஷ்டிரா சட்டமன்றத்தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி வெல்வதற்கும், டில்லியில் ஆம்ஆத்மி வெல்வதற்கும் இந்த  முக்கிய காரணமாக இருந்தது. நாங்களும் இதில் ஈடுபட்டுவருகிறோம். எங்களுக்கு ஆதரவு பெருகியுள்ளது. நாங்கள் சமூக வலைதளங்களை முழுதுமாக நம்புகிறோம்.

உங்களை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வந்து கூட்டணியில் இணையலாம் என்றீர்கள்.  தேர்தல் நெருங்கி வருகிறது. எந்த கட்சியும் அப்படி உங்களுடன் கூட்டணி வைக்க வந்ததாக தெரியவில்லையே..
 நாங்கள் யாரையும் இன்னும் அணுகவில்லை. தவிர  தேர்தலுக்கு  இன்னும் நாள் இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்.
கடந்த தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் பெரிய அளவில் வெற்றி முடியவில்லை. இந்த நிலையில் உங்கள் கட்சியின் தலைமையில்  தேர்தலை சந்திப்பது பலன் தருமா?
கடந்த தேர்தலுக்கு இருபது நாட்களுக்கு முன்தான் கூட்டணியே  உருவானது. அப்படியும் 19 சதவிகித ஓட்டுக்கள் வாங்கினோம். திமுக அதிகமுக துணியின்றி வெற்றி பெற முடியாது என்ற நிலையை மாற்றி இரண்டு தொகுதிகளில் வென்றோம். இது சாதனை. அந்த சாதனை சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்.
ஆனால் அப்போது கூட்டணியில் இருந்த கட்சிகள் இப்போது உங்களுடன் இல்லை..
 ஆனால், மக்கள் மனதில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயம் வெற்றி பெருவோம்.
மதுவிலக்கு குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதாமல், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகிறீர்களே..
மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று மு.க.ஸ்டாலினும்,  கருணாநிதியும்தான் சொல்கிறார்கள்.  தேர்தலுக்குத் தேர்தல் மதுவிலக்கு கொண்டுவருவேன் என்று சொல்வதும், பிறகு அதை செயல்படுத்தாமல் இருப்பதுமாக நாடகமாடுகிறது திமுக.  இப்போது ஆறாவது முறையாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்கிறார்கள். ஆகவேதான் அந்த கட்சியின் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகிறேன். ஆனால் மதுவிலக்கு குறித்து ஜெயலலிதா பேசுவதே இல்லையே.. பிறகு ஏன் அவருக்கு கடிதம் எழுத வேண்டும்?
ஆனால், அதிகாரம் உள்ளவரிடம்தானே  கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்?
(கோபமாக) நீங்கள் என் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்களா…  எத்தனை கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள்?  அப்படி வந்திருந்தால் இந்த கேள்வியே கேட்டிருக்க மாட்டீர்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசுகிறேன். மதுவிலக்கு கொண்டுவரவேண்டும் என்று ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசை எதிர்த்து  போராட்டங்கள் நடத்துகிறேன்.
திமுக அதிமுகவை மீறி உங்கள் கட்சியால் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறீர்களா?
101 சதவிகிதம் நம்புகிறோம். திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.  அதற்கு எந்தவித செல்வாக்கும் கிடையாது. கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளு மன்றத் தேர்தலிலேயே அது வெளிப்பட்டுவிட்டது.
அதிமுக மீதும் மக்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். நிர்வாகமே  நடக்கவில்லை.. ஊழல் மட்டும்தான் நடக்கிறது. 110ம் விதிதான் தமிழகத்தின் தலைவிதி என்று ஆகிவிட்டது. இந்த விதியின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளாக ஐநூறு திட்டங்களை அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் இதில் ஒன்றிரண்டு சதவிகதம்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் ஜெயலலிதா மீதும், அவர்களது அரசு மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஏனோ ஊடகங்கள்தான் இதை வெளிப்படுத்தத தயங்குகின்றன.
ஆனால் பத்திரிகையாளர்கள்தான்  தமிழக அரசை விமர்சிக்க தயங்குகிறார்கள். (கொஞ்சம் இடைவெளிவிட்டு) அல்லது பத்திரிகை முதலாளிகள் தயங்குகிறார்களா என்று தெரியவில்லை.
சமீபத்திய கருத்து கணிப்பில்  உங்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதாக முடிவு வந்திருக்கிறதே..
கருத்து கணிப்பா அது..?  மு.க. அழகிரி சொன்னது போல  ஸ்டாலினுக்காக எடுத்த பொய்யான கருத்து கணிப்பு இது.  கருத்து கணிப்பு என்றால் ஒரு சதவிகித மக்களையாவது சந்திக்க வேண்டும்.  ஒரு சட்டசபை தொகுதியில் இரண்டரை லட்சம் வாக்காளர்கள் இருந்தால், இரண்டாயிரத்தி ஐநூறு பேரையாவது சந்தித்து கருத்து கேட்க வேண்டும். இவர்கள் ஒட்டுமொத்த தமிழகத்திலும் 3,300 பேரை மட்டும் சந்தித்து கருத்து கேட்டதாக சொல்கிறார்கள். இது குமாரசாமி கணக்கு போல் இருக்கிறது.
முன்பு ஸ்டாலினுக்கு அவரது அண்ணனுடன் பிரச்சனை. அப்போது ஒரு கருத்து கணிப்பு எடுத்தார்கள். அது பிரச்சினை ஆனது. இப்போது அப்பாவுடன் போட்டி போடுகிறார். இதையடுத்து தன் சார்பில் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். அவ்வளவுதான்.
anbumani1

வரும் தேர்தலை மனிதில் வைத்துதான்  சேஷசமுத்திரம் விவகாரம் உட்பட சாதி பிரச்சினைகளை பாமக ஏற்படுத்துகிறது என்கிற விமர்சனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
(ஆத்திரமாக) முதலில் என்ன பேசுகிறோம், என்ன கேட்கிறோம் என்பதை உணர்ந்து கேளுங்கள். அதன் பிறகு பதில் சொல்கிறேன்.
தொடர்ந்து  வேறு சில கேள்விகளுக்கும் அன்புமணி பதிலளித்தார் என்றாலும், பத்திரிகையாளர்கள் மீது அவர் கடும் கோபம் காட்டியது அதிர்ச்சி அளிக்கும்படியாக இருந்தது.



No comments:

Post a Comment