சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Sept 2015

விரட்டியது சொந்த ஊர்... அசத்தி வரும் திருநங்கை!


திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஒருவரை ஊருக்குள் வரக்கூடாது என்று சொல்ல, பிரச்னை காவல்நிலையம் படியேறி இருக்கிறது. என்ன நடந்தது என்று விசாரித்த போது கிடைத்த தகவல்கள் இது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஸ்வினி போஸ். 24 வயதான இவர் ஒரு திருநங்கை. 10ஆம் வகுப்புவரை படித்து விட்டு சென்னையில் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த அஸ்வினி, பிறகு சென்னையில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். இப்போது மலேசியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி அசத்தி வருகிறார். இவரை சொந்த ஊருக்கு வரக்கூடாது என்று பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறார்கள் ஊரில் உள்ள சிலர்.


இதுகுறித்து அஸ்வினி கூறுகையில், "எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. ஊரின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. நான், 6ஆம் வகுப்பு படிக்கும் போது எனக்குள் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தேன். அதை அன்று வெளிப்படுத்தி இருந்தால் எனது படிப்பு கேள்விக்குறியாகி விடும் என்பதால் அதை எனக்குள் புதைத்துக் கொண்டேன். பத்தாம் வகுப்பு முடித்து விட்டு ஆண் பாலினமாகவே பாலிடெக்னிக் படித்தேன். சம்பாதிக்க தொடங்கியப்பிறகு என்னை திருநங்கை என்று வெளிப்படுத்தினேன். சென்னையில் வேலைப்பார்த்த போது சிங்கப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றேன். அங்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் திருநங்கையான செல்வி என்பவரை சந்தித்தேன். அவர்கள் மூலம் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றேன். என்னுடைய அம்மா எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதைப்போல என்னுடைய அப்பாவும் என்னை முழுமனதாக ஏற்றுக் கொண்டார்.  அதே நேரத்தில் அப்பாவின் உறவினர்களில் சிலர் என்னை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். அவர்கள் தான் இப்போதும் எனக்கு தொல்லை கொடுக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு சென்ற நான் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறேன். கைநிறைய சம்பாதிக்கிறேன். அங்குள்ளவர்கள் என்னை மரியாதையாக நடத்துகிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சிங்கப்பூரில் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான திருநங்கை மோனிக்கா என்பவர் தான் என்னுடைய அம்மா. அவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்க ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுபோல எனக்கு பலர் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

மலேசியாவிலிருந்து நான் சென்னை வந்த நோக்கமே வேறு. எனக்கு சிறு வயதிலிருந்தே ஆசிரியையாக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இதற்காக சென்னையில் டிகிரி படித்து விட்டு பிஎட் படிக்க உள்ளேன். அப்போது பெண்களைப் போல விதவிதமான உடைகளை அணிந்து கல்லூரிக்கு செல்வேன். படிக்கிற காலத்தில் வருகிற பருவமாற்றத்தால் பெரும்பாலான திருநங்கைகள் தங்களுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடுகிறார்கள். அது தவறு. படித்து விட்டு சம்பாதித்தப் பிறகு தங்களின் எண்ணங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இதுவே என்னுடைய அட்வைஸ்.

என்னை சொந்த ஊருக்குள் அனுமதிக்காமல் தள்ளி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து என்னுடைய அப்பாவிடம் ஊர்காரர்கள் கூறியதும் அவரே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். எனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை மற்ற திருநங்கைகளுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக இதை நான் கூறுகிறேன்" என்றார்.

திருநங்கைகள் சமுதாயத்தில் அஸ்வினி போஸ் ஓர்  ரோல்மாடல்.


No comments:

Post a Comment