சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Sept 2015

தீவு பகுதிகளின் சுற்றுச்சூழல்களை பாதுகாத்ததாக பாம்பன் பெண்ணுக்கு அமெரிக்கா விருது!

தீவு பகுதிகளின் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டதாக பாம்பனைச் சேர்ந்த லெட்சுமி என்பவர் அமெரிக்க நிறுவன விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வங்க கடலில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதியில் உள்ள 28 கிராமங்களை சேர்ந்த பெண்கள் கடல் பாசிகளை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலில் சுமார் 2200 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும்  மன்னார் வளைகுடா இயற்கை பாசி எடுக்கும் பெண்கள் கூட்டமைப்பின் கீழ் இயங்கி வருகின்றனர். இந்த கூட்டமைப்பின் தலைவராக பாம்பன் சின்னப்பாலம் கிராமத்தை சேர்ந்த லெட்சுமி (46) இருந்து வருகிறார். 

கடலில் உயிரற்ற பாறைகளில் வளரும் பாசிகளை சுற்று சூழலுக்கும், கடல் வளத்திற்கும் பாதிப்பு ஏற்படாதவாறு இயற்கையான முறையில் சேகரிப்பது, பாசி சேகரிக்கும் தொழிலில் கட்டுப்பாடுகளுடன் ஈடுபடுவது, கடல் பாசி சேகரிக்க செல்லும் பெண்களுக்கு ஏற்படும் இடையூறுகளை போக்குவது போன்ற நடவடிக்கைகளில் ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் யூனியனின் உதவியுடன் ஈடுபட்டு வரும் லட்சுமி, பாம்பன் ஊராட்சியின் வார்டு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

இவர் தற்போது அமெரிகாவிலுள்ள 'சீகாலஜி' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ‘சீகாலஜி’ எனும் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. உலகில் உள்ள சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான தீவு பகுதிகளின் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பாக செயல்படும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு இந்நிறுவனம் ஆண்டு தோறும் விருது வழங்கி வருகிறது.
இந்நிலையில், 2015ஆம் ஆண்டு விருதுக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 12 சேவை அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் ‘பேடு’ எனும் தொண்டு நிறுவனம் மன்னார் வளைகுடா இயற்கை பாசி எடுக்கும் பெண்கள் கூட்டமைப்பின் தலைவியான லெட்சுமியை பரிந்துரை செய்திருந்தது. தீவு பகுதிகளின் கலாச்சாரம் மற்றும் கடல் வளத்தை காப்பதிலும், மீனவ பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதிலும் லெட்சுமி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தேர்வு குழுவினரின் முன் சமர்பிக்கப்பட்டது. இந்த செயல்களை ஆய்வு செய்த தேர்வு குழுவினர் ‘சீகாலஜி’விருதுக்காக லெட்சுமியை தேர்வு செய்தனர். 

பாராட்டு சான்றிதலுடன், சுமார் 10ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 6.60 லட்சம்) பரிசு தொகையாக கொண்ட இந்த விருதை பெரும் இரண்டாவது இந்தியர் லெட்சுமி ஆவார். பெண்களில் முதல் முறையாக விருதை பெருபவர் என்ற பெருமையும் லெட்சுமிக்கு உண்டு.

சீகாலஜி விருதுக்கு லெட்சுமி தேர்வு செய்யப்பட்ட தகவலை சீகாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ட்யூன் சில்வர்ஸ்டைன் அனுப்பியுள்ளார். வரும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி அமெரிக்காவின் பெர்க்லி நகரில் நடக்கும் விழாவில் லெட்சுமிக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. 

 அமெரிக்க தொண்டு நிறுவனத்தின் விருதுக்கு தேர்வான மீனவ பெண் லெட்சுமிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. பாம்பன் ஊராட்சி மன்றத்தின் சார்பில் லெட்சுமிக்கு பாராட்டு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் எம்.பேட்ரிக், ஊராட்சி செயலாளர் விஸ்வநாதன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், உள்ளூர் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment