சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Sept 2015

இட வசதி இல்லாமல் செயல்படும் 740 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம்!

போதிய இடவசதி இல்லாமல் செயல்படும் 740 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக,  சிட்டிபாபு கமிஷன் மற்றும் நீதிபதி சம்பத் கமிட்டி,  விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

அதன்படி ஒரே இடத்தில் இரு பள்ளிகள் நடத்தக்கூடாது. பள்ளி கட்டடத்திற்கு உறுதி சான்றிதழ் பெற வேண்டும். விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும் என்று 14 வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், புதிதாக மெட்ரிக் பள்ளிகள் துவங்குவதற்கு சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி பகுதிகளில் 6 கிரவுண்ட் நிலமும், மாவட்ட தலைநகரங்களில் 8 கிரவுண்ட் நிலமும், நகராட்சி பகுதிகளில் 10 கிரவுண்ட், கிராமப்புறங்களில் 3 ஏக்கர் நிலங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுமதியும், தொடர் அங்கீகாரமும் வழங்கப்படும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு முதல், இந்த விதிமுறைகளின் அடிப்படையில்தான் மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுமதியும், அங்கீகாரமும் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், புதிதாக தொடங்கப்பட்ட 740 மெட்ரிக் பள்ளிகள்,  "ரியல் எஸ்டேட் பிசினஸ் காரணமாக நிலங்களின் விலை பல லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே அரசு நிர்ணயித்தபடி இடங்களை வாங்கி பள்ளிகளை இயக்கினால் நஷ்டம் ஏற்படும். எனவே,  இடப்பிரச்னையில் விதி விலக்கு அளிக்க வேண்டும்" என்று அரசை வலியுறுத்தி வந்தன.

இதுதொடர்பாக கடந்த 2013ஆம் ஆண்டு, அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில் மதுரை, சென்னை, கோவை உள்பட பல இடங்களில் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இது தொடர்பாக அரசுக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த 740 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் பிச்சையை தொடர்பு கொண்டு கேட்டபோது, ''மாணவர்கள் நலன் கருதி புதிதாக தொடங்கப்பட்டு இயங்கி வரும் 740 பள்ளிகளுக்கு இடப்பிரச்னையில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர அரசு அறிவித்துள்ள பிற விதிமுறைகளை, இந்த பள்ளிகள் முழுமையாக பூர்த்தி செய்து ஆவணங்களை சமர்ப்பித்தால், அந்த பள்ளிகளுக்கு அனுமதியும், தொடர் அங்கீகாரமும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பள்ளிகளுக்கு 2016ம் ஆண்டு வரை தொடர் அங்கீகாரம் வழங்க, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது'' என்றார்.



No comments:

Post a Comment