சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Aug 2015

மரித்துவிடாத மனிதநேயம்... மரணமில்லாத அப்துல் கலாம்கள்!

கோவையில் கலந்தாய்வு நடக்கும் நிலையில், தவறுதலாக சென்னை வந்து தாயுடன் தவித்த மாணவியை சென்னை பொதுமக்கள் விமானத்தில் ஏற்றி கோவைக்கு அனுப்பி கலந்தாய்வில் பங்கேற்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் கடைக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் மாணவி சுவாதி.  பிளஸ்2 தேர்வில் 1,017 மதிப்பெண் சுவாதி வாங்கியிருந்தார். இதையடுத்து பி.எஸ்சி. உயிரி தொழில்நுட்பவியல் படிக்க விரும்பிய  சுவாதி, கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மேல்படிப்புக்காக விண்ணப்பித்தார். கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவிக்கு அழைப்பு வந்தது. அதில் கோவை வேளாண் பல்கலைக்கழக அண்ணா அரங்கில் கலந்தாய்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


அண்ணா அரங்கம் என்பதை சரியாக கவனத்தில் கொள்ளாத மாணவி, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தான் கலந்தாய்வு நடைபெறுகிறது என்று கருதி நேற்று தனது தாயை அழைத்துக் கொண்டு சென்னை வந்து விட்டார். அதிகாலையில் சென்னை வந்த மாணவி சுவாதி, காலை 6.30 மணிக்கு கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்றார். அங்கு கலந்தாய்வு நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. யாரிடம் தகவல் கேட்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

மாணவியின் தோற்றமே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று காட்ட,  அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ஒருவர், யார் நீங்கள்? எங்கே செல்ல வேண்டும்? என்று கேட்டுள்ளனர். அப்போதுதான் மாணவி சுவாதி கலந்தாய்வுக்கு வந்த விபரத்தை கூறியிருக்கிறார். மாணவி சுவாதி வேளாண் படிப்புக்கான கலந்தாய்வுக்கு வந்ததாகவும், அண்ணா அரங்கம் எங்கே இருக்கிறது? என்று கேட்டுள்ளார். சந்தேகமடைந்த அவர், மாணவி சுவாதியிடம் இருந்து அழைப்பு கடிதத்தை வாங்கி பார்த்திருக்கிறார்.

அழைப்பு கடிதத்தை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். அதில், கலந்தாய்வு நடைபெறும் இடம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கம் என்று கூறப்பட்டிருந்தது. இது பற்றி அவர் மாணவியிடம் விளக்க, இடம் மாறி வந்துவிட்டதை நினைத்து மாணவி கதறி அழுதிருக்கிறார்ர். காலை 8.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். இனி எப்படி நான் கலந்து கொள்ள முடியும்? என்று சுவாதி கதறி அழ அவரது தாயும் கண்ணீர் விட்டுள்ளார். இதையடுத்து அங்கு கூட்டம் கூடி விட்டது. மாணவியின் நிலை சுற்றியிருந்தவர்களை கவலை கொள்ள செய்தது.

கூடிய கூட்டம் சும்மா இருக்கவில்லை. உடனடியாக மாணவியை விமானத்தில் கோவை அனுப்பப முடிவு செய்தது. அதோடு கோவை வேளாண் பல்கலைக்கழக பதிவாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவியின் நிலையையும் ஒருவர் அதற்குள் விளக்கி விட்டார். பதிவாளரும் மாணவியை அனுப்பி வையுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியளித்தார். 

இதையடுத்து ஒருவர் ,சுவாதி மற்றும் அவருடைய தாயை காரில் அழைத்து கொண்டு சென்னை விமான நிலையம் சென்றார். அங்கு இருவருக்கும் கோவை செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்து விமானத்தில் ஏற்றி விட்டார். அதோடு கோவையில் உள்ள தனது நண்பர் ஒருவருக்கும் தகவலை தெரிவித்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். சென்னையில் இருந்து காலை  காலை 10 மணிக்கு புறப்பட்ட விமானம் 11.40 மணிக்கு கோவை சென்றடைந்தது.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த மாணவியை சென்னைவாசியின் கோவை நண்பர் காரில் அழைத்து சென்று 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்திற்கு கூட்டிக் கொண்டு சென்றார். தொடர்ந்து பதிவாளரை சந்தித்து மாணவியை ஒப்படைத்து கலந்தாய்வில் பங்கேற்க வைத்தார்.

கலந்தாய்வில் பங்கேற்ற , மாணவி சுவாதி தான் விரும்பிய பி.எஸ்சி. உயிரி தொழில்நுட்பவியல் படிப்பை தேர்வு செய்தார். தனக்கு உதவி செய்த நல்ல இதயம் படைத்தவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றியும் தெரிவித்தார். இதில் ஒரு சுவாரஸ்யவம் என்னவென்றால், உதவி செய்தவர்களின் பெயர் விபரம் கூட மாணவிக்கு தெரியாது என்பது தான்.

நாடு முழுவதும் நீக்கமற அப்துல் கலாம்கள் நிறைந்துள்ளனர் என்பதை தானே இந்த சம்பவம் காட்டுகிறது.No comments:

Post a Comment