சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Aug 2015

மதுவிலக்கு கொண்டுவாருங்கள் அம்மா...

" 'அம்மா...!' என்று நான் உங்களை அழைப்பது உங்கள் வயது மற்றும் பதவி கருதி என்று மட்டும் கருத வேண்டாம். தாங்கள், லட்சோப லட்சம் தொண்டர்களை கொண்ட கட்சியையும், கோடிக்கணக்கான மக்களையும் ஆண்டு வருகிறீர்கள். அதனால் உங்களை அவர்களின் தாயாக கருதிதான் அழைக்கிறேன். 

உங்கள் கடைக்கண் பார்வை படாதா என்று காத்திருப்போர் ஏராளம். அப்படிப்பட்ட உங்களுக்கு என் விண்ணப்பம் எட்டுமா என்று ஐயம் இருந்தாலும் கூட, நீங்கள் செயல்படும் விதத்தை கண்டு வியந்த நான், இது உங்களை அடைந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்ற சின்ன நம்பிக்கையோடு அனுப்புகிறேன்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள், மனதை உலுக்குவதாகவும் சொல்லொணா துயரத்தை தருவதாகவும் உள்ளது


நீங்கள் நினைப்பதுபோல் அல்லது உங்கள் அரசை ஆதரிப்பவர்கள் கூறுவது போல் இது எதிர்கட்சிகளின் தூண்டுதல் என்று கருதக் கூடும். ஆனால் உண்மை என்னவெனில், 3 வயது பாலகனுக்கு மதுவை அளித்து வேடிக்கை பார்க்கும் அளவிற்கும், பனிரெண்டாம் வகுப்பு மாணவி பகல் நேரத்தில் குடித்துவிட்டு சாலையில் ரகளையில் ஈடுபடும் அளவிற்கும் நடந்த சம்பவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்கள் மனதிலும், பொறுப்புள்ள தகப்பன்கள் மனதிலும் ஒருவித பயமும் கவலையும் சூழ்ந்து கொள்ள செய்திருக்கின்றன.

நாளை இதுபோல நம் பிள்ளைகளும் நடக்குமோ என்ற ஏற்பட்ட அடிப்படையான பயமே இதற்கு மூலம். அங்கு தொட்டு இங்கு தொட்டு இது நம் வீட்டிற்குள் வந்துவிடுமோ என்கிற கவலையால் கதிகலங்கிப்போய் உள்ளனர் அவர்கள். 

இந்த சம்பவங்கள் நிச்சயம் பெரிதாகும் (நல்லதாகவோ தீயதாகவோ )என்று என் போன்றவர்கள் மனதில் பட்டது. எனவே அந்த சூழலில் தோழர் சசி பெருமாளின் போராட்டம் மற்றும் மரணம் மக்களை வீறு கொண்டு எழ செய்துவிட்டது. இதுதான் உண்மை.
அதன் பிறகு அரசியல் தலைவர்கள்,  தங்களின் சுயலாபத்திற்கு பயன்படுத்திகொண்டார்கள் என்று கூறும் கூற்றை நான் முற்றிலும் புறம் தள்ளவில்லை. ஆனால் அதே சமயம் அதை அந்த கண்ணோட்டத்தில் மட்டும் ஆராய்ந்து, நாட்டில் ஏற்படும் கொந்தளிப்பை மட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் யாவும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்று நினைப்பவர்களின் சதி என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். 

மேலும் இறந்தவர் தன் இளவயது முதல் இதில் தீவிரம் காட்டி வருகிறார். இன்னும் சொல்லப்போனால் திமுக ஆட்சியில்தான் தன் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். எனவே அவர் போராட்டம் நேர்மையானது, பிரதிபலன் எதிர்பாராதது

எனவே, 'அவர் போராட்டத்தை கொச்சைப்படுத்தினால் போதும்.. பிரச்னை தீர்ந்து விடும்' என்று பத்தாம் பசலிகள் கணக்கிடலாம். ஆனால் தாங்கள் இதை புரிந்து கொள்ள முடியாதவரா என்ன ?

அவர் இரு மனைவிகள் உள்ளவர், காந்தியவாதி இல்லை என்றெல்லாம் கேலி பேசும் உங்கள் கட்சியினர், அவர் குடும்பத்தின் வலியை அறியாதவர்கள். அவர்கள் தரத்திற்கு அவர்கள் செய்யலாம்.. அதை நீங்கள் அனுமதிக்கலாமா ?
உங்கள் செயல்படும் திறனில் நான் வியந்ததே உங்கள் உரம் மிக்க முடிவு எடுக்கும் திறனைத்தான். அப்படி பட்ட தங்களின் அரசு, ஒரு சிக்கலில் மாட்டி கொண்டிருக்கையில் ஏன் அந்த திறன் வெளிப்படாமல் இருக்கிறது

ஒருவேளை அப்படி நீங்கள் அவர்கள் கோரிக்கையை ஏற்றால், அது எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு பயந்தது என்று ஆகிவிடுமோ என்று நீங்கள் எண்ணுவது நியாயம்தான். ஆனால் அந்த சிந்தனை, மூன்றாந்தர கட்சிக்கு வரலாம், உங்களுக்கு தேவையில்லை. 

காரணம் தமிழக பெண்களின் அபிமானத்திற்குரிய தலைவி நீங்கள், அபிமான கட்சி உங்களுடையது.  அதனால் இப்படி ஒரு போராட்டங்களின் நீட்சியாக  உங்கள் மதுவிலக்கு அறிவிப்பு இருக்குமானால், இந்த அறிவிப்பின் அறுவடை உங்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்கும். நம் தமிழக பெண்களுக்கு அரசியல் தெரியாது. அன்பு தெரியும். அத்தனை போராட்டங்கள் நடந்தாலும் அவற்றை அங்கீகரித்து ஆவணத்தில் கையெழுத்திட்ட கை அம்மாவின் கைதான் என அவர்கள் புரிந்துகொள்வார்கள். நீங்கள் மதுவிலக்கை கொண்டு வருவதால், குடியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த தாய்மார்கள், உங்களை கண்கண்ட தெய்வமாய் கொண்டாடுவார்கள். உங்களுக்கு அமோக ஆதரவு அளிப்பார்கள்.
இதுவரை எந்த இயக்கத்தையும் சாராத என்னைப் போன்றவர்கள் கூட, நீங்கள் அனுமதித்தால் உங்கள் வெற்றிக்காக பாடுபட முன் வருவோம்.

அதனால் இதை ஒரு கௌரவப் பிரச்சனையாக கருதாமல், எண்ணற்ற தாய்மார்களின் கண்ணீரை துடைக்கும் அருமருந்தாய் நினைத்து செய்யுங்கள் என்று உங்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்

இறந்த அந்த தோழருக்கு உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய உதவுங்கள். கோடான கோடி பேர்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிட்டும்


ஒரு தாய் நிலையில் இருக்கும் உங்களுக்கு நிச்சயம் அவர்கள் அழுகுரல் கேட்டிருக்கும். அவர்கள் இதயங்களில் இடம்பெரும் அறிய வாய்ப்பை நழுவ விடாதிர்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த எளியவன் விடைபெறுகிறேன்

நன்றி...வணக்கம்!


No comments:

Post a Comment