சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Aug 2015

கவிதையின் விஸ்வரூபமா? காட்சிகளின் திருவிழாவா? ராஜமெளலியை பாராட்டி வைரமுத்து கடிதம்!

மாபெரும் சாதனைப் படைத்த பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலிக்கு பாராட்டு மடல் ஒன்றை வைரமுத்து அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து கடிதத்தில் கூறியதாவது, 

அன்புள்ள இயக்குநர் ராஜமெளலிக்கு, 

பாகுபலி' பார்த்தேன். அந்தத் திகைப்பிலிருந்து இன்னும் நான் விடுபடவில்லை. படத்தின் காட்சிப் படிமங்கள் என் நெற்றிக்குச் சில செண்டிமீட்டர் தூரத்தில் பட்டாம் பூச்சிகளாய்ப் படபடத்துக் கொண்டேயிருக்கின்றன.

இது செல்லுலாய்டில் எழுதப்பட்ட இன்னொரு இதிகாசமா? கவிதையின் விஸ்வரூபமா? காட்சிகளின் திருவிழாவா? என்றே வியக்கத் தோன்றுகிறது.

'பாகுபலி'யின் முதல் பார்வையாளர் நீங்கள் தான். உலகத்தின் கண்கள் பார்ப்பதற்கு முன்பு உங்கள் உள்ளத்தின் கண்களால் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டீர்கள்.ஆனால் அப்படிப் பார்க்கப்பட்டதில் ஒரு மில்லிகிராமும் குறையாமல் அதைக் கலைப்படுத்திய உங்கள் உழைப்பு - தொழில் நுட்பத்திறன் - கலை ஆளுமை - உங்கள் வலி - துடிப்பு - தவம் - எல்லாவற்றையும் என்னால் புரிந்துகொள்ள முடிவதால் வியந்து நிற்கிறேன்.

சினிமா என்பதே நம்பவைக்கப்படும் ஒரு தொழில்நுட்ப பொய்தான். அந்த நம்பகத்தனமையை ஒரு இயக்குநர் தான் உருவாக்குகிறார். அருவியும், பனியும் முகத்தில் வந்து முட்டுகின்றன. உடலும் உயிரும் நனைகின்றன.

பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கனவுப்பெண் பட்டாம்பூச்சிகள் பறந்து போவது போல் கலைந்து போனாள் என்று முடித்திருப்பதில் ராஜமெளலிக்குள் இருக்கும் ஒரு கவிஞனைப் பார்த்தேன். வழிந்தோடும் தாமரைப்பூ சிற்பத்தின் கைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் காட்சிப்படிமத்தில் ஒரு ஓவியனின் உத்தியைப் பார்த்தேன்.

'பாகுபலி'யின் வருகை தந்த மகிழ்ச்சியை மக்கள், இசைக்கலைஞர்கள், நடனமணிகள் மூலம் காட்டியதோடு ஒரு யானையின் கண்ணிலும் பிரதிபலிக்கச் செய்ததில் ஒரு படைப்பாளியின் முழுமை பார்த்தேன். கட்டப்பா உறையைத் தொட பாகுபலி வாளை உருவ வெட்டப்பட்ட முண்டம் தொடர்ந்து ஓடும் காட்சியில் கம்பனின் கற்பனை கண்டேன்.

யுத்தகளக் காட்சிகளை இத்தனை போர்த்தந்திரங்களோடும், பிரம்மாண்டத்தோடும் இதற்குமுன் யாரும் படைத்ததில்லை. நவீன தொழில் நுட்பத்தின் அனைத்துக் கூறுகளையும் ஒரு சொட்டு ஒழுகவிடாமல் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.

இந்திய சினிமாவின் உலக விலாசமாய் உங்கள் பெயர் நாளை பொறிக்கப்படும். உங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். உலகத்தோடு போட்டிபோட இதோ எங்களில் ஒருவன் வந்துவிட்டான் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன.

வாழ்த்துக்கள் ராஜமெளலி" என்று குறிப்பிட்டிருந்தார் வைரமுத்து.

தொடர்ந்து, “வைரமுத்துவிடமிருந்து கிடைக்கும் வாழ்த்தை ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன். மிகச்சிறந்த ஆசானிடமிருந்து இந்த மாணவனுக்கு கிடைத்த ஆசீர்வாதம் இது” என்று வைரமுத்துவின் பாராட்டு என்னை உலுக்கிவிட்டது என்று ட்விட்டரில் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment