சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Aug 2015

'குடிக்க வைத்த நடிகர்கள், குடிக்கு எதிராகப் பேசுவார்களா?'

க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களை அழிக்க சாராயம் விற்பதும், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய போலீசார் 'பொறுப்பாக' டாஸ்மாக் கடையைப் பாதுக்கப்பதும், மதுவுக்கு எதிராகப்   போராடுபவர்களைக் கொடூரமாக போலீசார் தாக்குவதைக்  கண்டுகொள்ளாமல் போராட்டம் செய்தவர்களை சிறையில் அடைக்க உத்தரவிடும் மேலிடத்தையும் பார்க்கும்போது ஆங்கிலேய அரசின் ஆட்சிதான் நினைவுக்கு வருகிறது.
 
சுதந்திரம் அடைந்துவிட்டதாக நாம் சொல்லிக்கொண்டாலும், தமிழக அரசு 20 மது ஆலைகள் மூலம் நம்மை அடிமையாக்கி வைத்திருப்பதுதான்  நிஜம். பிரிட்டிஷ் அரசு நம்மை சுரண்டி கொள்ளை அடித்தாலும் நம்மை மலடாக்கவில்லை; குடும்பங்களை அழிக்கவில்லை. ஆனால், நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு நமது பணத்தை மட்டுமல்ல, கூடவே கொசுறாக உயிரையும் அழித்து வருகிறது.
 
மதுவால் விபத்துக்கள் அதிகம் (ஹெல்மெட் போட  வேண்டும் - நீதி மன்றம்). மதுவால் கொலை, கொள்ளைகள் அதிகம் (மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - போலீசார்). அரசு மது விற்கத் தடை  வேண்டும் (அது அரசின் மதுக்கொள்கை. தலையிட முடியாது - நீதிமன்றம்). இப்படி மக்களைப் பாடாய்படுத்தும் மதுவால், இந்தியாவிலேயே மலட்டுத்தன்மை அதிகமுள்ள மாநிலமாக விரைவில் தமிழகம் மாறும் என்ற  சூழலில், மலட்டுத் தன்மை தருவதே  ஓட்டுபோட்ட மக்களுக்கு அரசு செய்யும் நன்றிக் கடனாக நினைக்கத் தோன்றுகிறது.
 
அடுத்த ஒரு வருடத்தில் மதுவிலக்கு என அரசு சொன்னால், 'தமிழன் பிழைத்துவிடுவான். மக்கள்  போராட்டம் ஓயும்' என்று நினைத்தால் நிலைமை மோசமாகத் தெரிகிறது. தெருவெங்கும் மக்களுக்குப் பாதுகாப்பாக நிற்க வேண்டிய போலீசார், டாஸ்மாக் கடை முன் 'குடி மகனுக்கு' பாதுகாப்பு கொடுக்கும் பெருமைமிகு மாநிலமாக தமிழகம் சாதனை செய்துள்ளது. 

மதுவை எதிர்த்து  தமிழகமே போராடிவரும் நிலையில், பல்வேறு தலைவர்கள் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக களம் இறங்கிவரும் நிலையில், மக்களின் அபிமான திரை உலக நடிகர்கள் வழக்கம்போல் இந்த மக்கள் பிரச்னையிலும் இதுவரை எதுவும் பேசவில்லை.

இன்றைய குடி கலாசாரத்துக்கு முக்கியமான பங்கு தமிழ்த் திரைப்படங்களுக்கு உண்டு. அரைமணி நேரத்துக்கு குடியுடன் ஒரு குத்துப்பாட்டும், டாஸ்மாக் விளம்பரம்போல குடிபோதை காட்சிகளும், நடிகைகளும் குடித்து சம உரிமை கேட்பதுபோலவும் உள்ள காட்சிகள் தமிழ்ப் படங்களில் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும். தந்தைக்கு மது கொடுத்து பாசமூட்டும் மகளும், காதலனுக்கு மது கொடுத்து காதலை வளர்க்கும் காதலியும் உள்ள போதைத் திரைப்படங்கள் நிறைந்த நாடு இது.

நட்பு என்றாலே மொட்டை மாடியில் போதையுடன் பேசுவது போலவும், மன அமைதிக்கு, நண்பர்கள் சந்திக்கும் முக்கியமான இடமாக டாஸ்மாக் பார் செல்லும் காட்சிகளும் இல்லாத படங்கள் மிகக் குறைவு. 

கதாநாயகர்கள் மது அருந்தாவிட்டால் இவரெல்லாம் ஒரு கதாநாயகனா எனக் கேட்கும் அளவுக்கு மதுக்காட்சிகள் மக்களைச் சென்றடைய வைத்த 'பெருமை' நம் நடிகர்களைச் சேரும். காமெடி நடிகரா இல்லை குடும்பம் அழிக்க வந்த டாஸ்மாக் விற்பனை பிரதிநிதியா எனக் கேட்கும் அளவுக்கு காமெடியர்கள் சிரிக்க வைப்பதற்குப் பதில் அழ வைக்கின்றனர்.

சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிக்கு தடைசொல்லும் நீதிமன்றமும், தணிக்கைத் துறையும் குடும்ப வன்முறை நிகழக் காரணமாகும் மது போதைக் காட்சிக்கு தடை சொல்லவில்லை. வன்முறைக் காட்சிகளைவிட பல லட்சம் மடங்கு மோசமானது, மது அருந்தும் காட்சியே. (தொலைக்காட்சித் தொடர்களோ சொல்ல முடியாத அவலத்தில் மக்கள் வீட்டுக்குள் வந்து  நிற்கிறது.)
அதிலும் த்ரிஷா குடிக்கும் காட்சி எடுத்தால் படம் ஹிட் என்ற சென்டிமென்ட் வேறு உண்டாம். படம் ஹிட் கொடுக்க எத்தனை கல்லூரி மாணவிகளைக்  குடிக்க வைத்தார்களோ?  பல படங்களில் நடித்த ஹீரோக்களுக்கு கட்டாயம் பல கோடிகளில் சொத்து இருக்கும். இருமல் நிற்க இங்கிலாந்துக்கும், அசதி அதிகமாக இருந்தால் அமெரிக்காவுக்கும் சென்று மருத்துவ வசதி பெற முடியும். அவர்களது சினிமா வாழ்வைப்போல நாமும் புகை, மதுவை நேசித்தால், அரசாங்க மருத்துவமனையில் இடம் கிடைக்கவே போராட வேண்டி இருக்கும் என்ற  யதார்த்தம் உண்மை அறியாத தமிழக சமூகம் இருக்கத்தான் செய்கிறது.
 
சினிமாக்களில் மட்டுமே பார்த்துவந்த பெண்களின்  குடிபோதைக் காட்சிகள்  தெருவெங்கும் காணும் காட்சியாக சமீப காலமாக மாறிவரும் நிலையில், நமது மக்களுக்காக குரல் கொடுக்கும் திரை உலக நடிகர்கள் இதுவரை  மதுவுக்கு எதிராக ஏதும் பேசாமல் இருப்பது, அரசுக்கு பயந்தா... இல்லை, மக்கள் எக்கேடு கெட்டால் என்ன, எங்களுக்கு படம் ஓடினால் போதும் என்ற சுயநலமா என்பது புரியவில்லை. 
 
'என் ரசிகர்கள் கட்டாயம் மது, புகைக்கு அடிமையாகக் கூடாது' என்று சமூக நல்லெண்ணத்தில் வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் எந்த நடிகருக்காவது உள்ளதா?
வெள்ளை சட்டை போடவும், வேட்டி  கட்டவும் தமிழரின் அடையாளம் எனச் சொல்லும் விளம்பர நடிகர்கள், பணம் கொடுத்தால்தான் குடிபோதைக்கு எதிராக பேசுவார்களா? இதுவரை டாஸ்மாக் விளம்பரமாக வந்த நடிகர்- நடிகைகள், மக்கள் மீது கரிசனம் காட்டி மதுவுக்கு எதிராகப் பேசினால் நடிகர்கள் சொல்லி குடித்த கூட்டம் திருந்துமே?
 
மலேசியாவில் கலைநிகழ்ச்சி என்றால் திரண்டு வருகிறது திரையுலகம். அரசியல்வாதி உண்ணாவிரதம் இருந்தால் நடிகர்கள் சென்று உண்ணாவிரதத்தை முடித்து அரசியலுக்கும் சினிமாவுக்கும் உள்ள உறவைப் பலப்படுத்துகிறார்கள். நடிகர் சங்கத் தேர்தல் என்றால், கூடிவிடுகிறார்கள். ஆனால், மக்கள் மதுவுக்கு எதிராக இவ்வளவு போராட்டம் நடத்தியும், மக்களுக்காக ஏதாவது நல்லது செய்வேன் என்று சொன்ன ரஜினிகாந்த் அவர்களும்,  வாகன ஓட்டிகளை ஹெல்மெட் போடச் சொன்ன கமலஹாசனும், எதற்கும் பயப்பட மாட்டேன் எனச் சொன்ன அஜித்தும் அரசியலுக்கு வர நேரம் பார்த்துக் காத்திருக்கும் விஜய்யும் இதுவரை மதுவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. 

உண்மையிலேயே  மக்களுக்காக நல்லது செய்ய வேண்டுமானால், நடிகர்கள் திரண்டு   சென்னை மெரினாவில் டாஸ்மாக் எதிர்ப்பு பிரசாரம் தொடங்கினால், அதுவே தமிழக மக்களின் நல்வாழ்வுக்குத் தொடக்கமாக இருக்கும். செய்வார்களா?
மற்ற மாநிலத்து சினிமா ரசிகர்களுக்கும் தமிழக சினிமா ரசிகர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அங்கு சினிமா திரை அரங்கோடு முடிந்துவிடும். இங்கு சினிமா வாழ்க்கையோடு தொடர்ந்து வரும் உறவாக நினைப்பார்கள். நடிகர்களுக்காக தமிழன் இருக்கிறான். தமிழனுக்காக நடிகர்கள் மதுவுக்கு எதிராக குரலாவது கொடுப்பார்களா? சினிமாவில் வீரவசனம் பேசும் இவர்கள் நிஜவாழ்வில் மக்களுக்காக ஒரு அறிக்கை கொடுத்தால் அதுவே தமிழனுக்குச் செய்யும் பேருதவி. 

எத்தனையோ திரைப்படங்களில் மக்களை குடிக்க வைத்து மக்களை அழித்த  சினிமா உலகம், இனிமேலாவது  குடிபோதைக் காட்சிகளை நிறுத்துமா... இல்லை, இப்போது டாஸ்மாக் கடைகளை நோக்கி ஆவேசத்துடன் படையெடுத்துக்கொண்டிருக்கும் மக்கள், போதைக்காட்சி வரும் படம் வெளியாகும் திரை அரங்குகளை நோக்கி திரும்ப வேண்டுமா என்பதை நடிகர்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.



No comments:

Post a Comment