சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Aug 2015

ஆட்டம் காண்கிறதா அன்புமணியின் முதல்வர் கனவு?

சாதி, மதம், அரசியல், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என  வேறுபாடு இல்லாமல் சகலமானோரின் மனதிலும் இப்போது ஒருமித்த குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது மதுவிலக்கு. 

இந்த ஒற்றை மந்திரத்தை வைத்துக்கொண்டு முதலைமைச்சர் பதவியை பிடித்துவிடலாம் என்று நினைத்த அன்புமணி, இப்போது என்ன நினைப்பார்...?  

 “50 ஆண்டுகால திராவிடக்கட்சிகளின்  ஆட்சியில்  தமிழகத்துக்கு என்னத்தை செய்து கிழித்தார்கள் ...?  பா.ம.க கூட்டங்களில் யார் பேசினாலும்  இப்படித்தான்  ஆரம்பிப்பார்கள். 
அப்புறம் நம்ம டாக்டரய்யா எதுக்கு  அவுங்க கூட கூட்டணி வச்சாரு..? கூட்டணியில இருக்கும்போது உங்களுக்கு கண்ணு தெரியலையானு..? உங்க மனசுக்குள்ள ஒரு கேள்வி உதிப்பதற்குள்ளாகவே,  “  உங்களைப் போலவே  நாங்களும் கருணாநிதியை நம்பினோம், ஜெயலலிதாவை நம்பினோம். தமிழகத்துக்கு நன்மை நடந்திடாதா...? என்ற நம்பிக்கையில்தான்  மாறி மாறி கூட்டணி வைத்து ஏமாந்து போய்விட்டோம்.  அதற்கு,  உங்கள் முன்பு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.  எந்தக் கட்சியாவது தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டது உண்டா..?" என்று என்னமோ கடைக்கோடி தமிழன்,  அரசியல்வாதியை நம்பி  ஓட்டுப் போட்டு ஏமாந்ததை போல பேசிவிட்டு பா.ம.க தனித்துப் போட்டி என்று விஷயத்துக்கு வருவார்கள்.  

சேலம் மாநாட்டில் அன்புமணியை பா.ம.கவின் முதல்வர் வேட்பாளராக அறிவித்த பொழுதும் இதையேதான்  சொன்னார்கள். இதையெல்லாவற்றையும் விட முக்கியமான விஷயத்தையும் சொன்னார்கள். “தமிழ்நாடு சாராயத்தால் குட்டிச்சுவராகிக்கொண்டிருக்கிறது, இதற்காக பா.ம.க 25 வருடங்களாக போராடிக்கொண்டிருக்கிறது.  தி.மு.க வோ,  அ.தி.மு.கவோ சாராயக் கடைகளை மூடாது. உங்களிடம் சாராயத்தை விற்று அதில் வருமானத்தில்  சிறு  பகுதியை வைத்துதான்  உங்களுக்கு இலவசங்களைக் கொடுக்கிறார்கள்.

சாராயத்தை ஒழிக்க பா.ம.கவால் மட்டுமே முடியும். பெண்கள் எல்லோரும் இதை மனசுல வச்சுக்கணும். எல்லோரும்  மாம்பழத்திற்கு வாக்களியுங்கள். பா.ம.க ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குதான்“ என்று சொன்ன ராமதாஸ், கையெழுத்து போடுவதற்கு தன் மகனிடம் பேனாவையும் கொடுத்தார். 

புன்சிரிப்போடு அந்த பேனாவை பெற்றுக்கொண்ட அன்புமணி, ராமதாஸ் காலில் விழுந்து வணங்கினார். வாட்ஸ் அப்பிலும் , ஃபேஸ்புக்கிலும்  'அன்புமணி முதலமைச்சர் ஆன பிறகு போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு' என்று அந்த பேனாவின் புகைப்படத்தோடு  பதிவிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தியது பா.ம.க. 

முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டார்கள்.. அடுத்து போராட்டங்கள் நடத்தி மக்கள் கவனத்தை ஈர்க்க வேண்டுமே? களத்தில் குதித்தார் அன்புமணி.
சென்னை, தருமபுரி, சேலம் என்று பல ஊர்களில் மதுக்கடைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை படுவேகமாக துவக்கினார். உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் ஆயிரக்கணக்கான பெண்கள். இந்த போராட்டத்திற்கு ஆண்களை ஓரங்கட்டிவிட்டு,  முழுக்க முழுக்க பெண்களையே அழைத்தார்கள். மதுவால் பாதிக்கப்படுபவர்கள் மகளிரே. 

எனவே அவர்கள் வாக்குகளை குவிக்க வேண்டும் என்பது  இந்த ஏற்பாட்டின்  திட்டம். தருமபுரி ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி மனைவியும் கலந்து கொண்டு, அ.தி.மு.க அரசை வறுத்தெடுத்தார். அந்த சமயத்திலிருந்தே மதுவுக்கெதிரான குரல் நாலாபுறமும் துளிர்விட ஆரம்பித்துவிட்டது. 

சொத்துக்குவிப்பு வழக்கு, 2ஜி வழக்கு என எல்லாம் மறக்கடிக்கப்பட்டு வரும் சட்டமன்றத்தேர்தல் மதுவிலக்கை மையப்படுத்தியே அமையப்போகும் நிலை இன்று உருவாகி இருக்கிறது.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று முந்திக்கொண்டு அறிக்கை வெளியிட்டு தன் 'சாதுர்யத்தை' வெளிப்படுத்தினார் கருணாநிதி. அப்போது சற்று ஆட்டம் கண்டது பா.ம.க. தொடர்ந்து பா.ம.க மேடைகளில் குடிகாரர் என்று கடுமையான விமர்சனத்திற்குள்ளாகும் விஜயகாந்தும் மதுவுக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தார்.  

சாராயக்கடை ஒழிப்பு என்றாலே பட்டென்று நினைவுக்கு வருவது பா.ம.க தான். அந்த நினைவு மக்கள் மனதில் லேசாக மங்குவது போல தெரிந்தது.  காந்தியவாதி சசிபெருமாள் இறந்ததை தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று கூடிவிட்டது மதுவிலக்கு என்ற ஒற்றை வட்டத்துக்குள்.
தங்களுக்கான தனித்த அடையாளத்துக்குள் எல்லோரும் வந்துவிட,   மதுவிலக்கை மையப்படுத்தி அரசியல் செய்ய ஆசைப்பட்ட பா.ம.க.,  இப்போது தலையை சொறிந்துகொண்டிருக்கிறது, அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று.

ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, பா.ம.கவின் அரசியல் எதிர்காலம் குறித்த பயத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. மதுக்கடைகளுக்கெதிராக 35 வருடங்களாக போராடியிருப்பதை எடுத்துக்கூறி சுய விளக்க அறிக்கை கொடுப்பது போல் அமைந்துள்ள அந்த அறிக்கையே, பா.ம.கவின் நிலையை உறுதிப்படுத்தும்.
மாற்றம், முன்னேற்றம், அன்புமணி  என பா.ம.க ஒட்டிய போஸ்டரை  கொஞ்சம் திருப்பிப்போட்டு 'மாற்றம், அன்புமணி, ஏமாற்றம்' என்று சமூக வலைத் தளங்களில் கிண்டல் செய்து விமர்சிக்கப்பட்டது. 

மதுவிலக்கு விஷயத்தில் பா.ம.கவுக்கு அந்த ஏமாற்றம் ஏற்பட்டுவிட்டதோ என்றே தோன்றுகிறது. 

எப்படி இருந்தாலும் மதுவிலக்கு என்ற ஒற்றை வார்த்தை மற்ற கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் வரும் தேர்தலுக்கான ஒரு வலிமையான அஸ்திரமாக மாறிப்போனதற்கு காரணம் பா.ம.க தான் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.No comments:

Post a Comment