சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Aug 2015

காட்டுக்குள் காதல் ஜோடி: சப்-இன்ஸ்பெக்டர் மகனின் அட்டகாசங்கள்!

டந்த 30ஆம் தேதி, திருவள்ளூரிலிருந்து 4 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சிவன்வாயல் சாலையில் காட்டுப்பகுதியிலிருந்து ஒரு காதல் ஜோடியை செவ்வாய்பேட்டை ரோந்து காவலர்கள் மீட்டனர். காதல் ஜோடி திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பிறகு நடந்த விசாரணையில் கிடைத்த தகவல் காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த உப்பரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அஜீத். எலெக்ட்ரீசியன். இவரும், உப்பரபாளையம் அருகில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவியும் கடந்த ஒரு வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். கடந்த 30ஆம் தேதி அப்துல்கலாம் மறைவையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அன்றைய தினம் அந்த மாணவிக்கு பிறந்த நாள். காதலியின் பிறந்தநாளையொட்டி பெரியபாளையம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய காதல் ஜோடி திட்டமிட்டது. இதற்காக வீட்டுக்குத் தெரியாமல் காதல் ஜோடி பெரியபாளையம் சென்றனர். இரவு நீண்ட நேரமாகியதால் ஊத்துக்கோட்டைக்கு திரும்பி செல்ல வழியில்லாமல் காதல் ஜோடி தவித்தது. இதனால், அஜீத்தின் உறவினர் வீடு திருவள்ளூரில் உள்ளது. அங்கு செல்ல இருவரும் முடிவு செய்து பெரியபாளையத்திலிருந்து பஸ்சில் திருவள்ளூருக்கு இரவு 9 மணிக்கு வந்தனர். பிறகு அங்கிருந்து உறவினர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். தனியாக நடந்து சென்ற காதல் ஜோடியை வழிமறித்து அந்த நபர், 'நீங்கள் யார்? இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்?' என்று விசாரித்தார். இதையெல்லாம் கேட்க 'நீங்க யார்?' என்று அஜீத் கேட்க...... 'நான் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர்' என்று அந்த நபர் சொல்லி இருக்கிறார். அவர் வந்த பைக்கிலும் போலீஸ் என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும் பார்ப்பதற்கு போலீஸ் கெட்டஅப்பில் அந்த நபர் இருந்தார். இதையெல்லாம் பார்த்து பயந்து போன காதல் ஜோடி முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறினர்.

இதையடுத்து 'உங்களிடம் விசாரிக்க வேண்டும். ஸ்டேனுக்கு வா' என்று காதல் ஜோடியை பைக்கில் ஏற்றி கொண்டு சென்றார் அந்த நபர். சிவன்வாயல் செல்லும் சாலையில் இருட்டுப்பகுதியில் பைக்கை நிறுத்திய அந்த நபர் இருவரையும் இறங்க சொல்லி இருக்கிறார். சுமதியின் பக்கத்தில் வந்த அந்த நபர் அவளின் கையைப்பிடித்து இழுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜீத் அதை தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர், அஜீத்தை சரமாரியாக தாக்கி விட்டு காட்டுப்பகுதிக்குள் சுமதியை இழுத்துக் கொண்டு ஓடி இருக்கிறார். அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார் அஜீத்.

காப்பாற்றுங்கள் என்று சுமதி கதறினார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சுமதியின் அபயக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. இந்த சமயத்தில் அவ்வழியாக பைக்கில் வந்த செவ்வாய்பேட்டை ரோந்து காவலர்களிடம் விவரத்தை அஜீத் சொல்ல.... அவர்களும் இருட்டில் தேடி இருக்கிறார்கள். காவலர்களின் வாக்கிடாக்கி சப்தம் கேட்டு சுமதியை விட்டு விட்டு அந்த நபர் ஓடி விட்டார். இதன்பிறகு காவலர்கள் காதல் ஜோடியை மீட்டனர்.

அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பைக்கை கொண்டு தப்பி ஓடிய நபரை விசாரித்தனர். போலீஸ் என்று பைக்கில் எழுதப்பட்டு இருந்தோடு முன்புறத்தில் ஆண், பெண் சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படமும் இருந்தது. பைக்கில் எழுதப்பட்டுள்ள நம்பரில் ஒரு எண் இல்லாததால் அதைக் கொண்டு விசாரண செய்ய முடியவில்லை. புகைப்படத்தில் இருந்த ஆண், மணவாளன்நகர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பது தெரியவந்தது. அவரிடம் போனில் விசாரித்தனர். இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி மைனர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது சப்-இன்ஸ்பெக்டரின் மகன்  என்று முடிவு செய்துள்ளனர் விசாரணை அதிகாரிகள். தலைமறைவாக இருக்கும் அவனை தேடி வருகிறார்கள். இதற்கிடையில் காதல் ஜோடியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமதியின் பெற்றோர், அஜீத் மீது சரமாரியாக காவல் நிலையத்தில் குற்றம் சுமத்தி புகாரும் கொடுத்தனர். தொடர்ந்து சுமதி, மைனர் என்பதால் அவளை கடத்திய குற்றத்திற்காக அஜீத் கைது செய்யப்பட்டார்.

மைனர் பெண்ணை கடத்தி தவறாக நடக்க முயன்றது சப்-இன்ஸ்பெக்டர் மகன் என்று தெரிந்தும், அவனது பெயரில் இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. எப்.ஐ.ஆரில் அடையாளம் தெரியாத நபர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதை பார்க்கும்போது காக்கி சட்டையின் பாசம் தெளிவாகத் தெரிகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மேலும், சம்பவம் நடந்து 5 நாட்களாகியும் சப்-இன்ஸ்பெக்டரின் மகனை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுவே வேறு யாராவது இருந்தால் அவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, அவர்கள் மூலமாகவே குற்றவாளிகளை கைது செய்வது காவல்துறையின் ஸ்டைல். ஆனால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது காவல்துறையின் சப்-இன்ஸ்பெக்டர். இதனால் விசாரணையும், கைது நடவடிக்கையும் ஆமை வேகத்தில் நடக்கிறது.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் கூறுகையில், "சப்-இன்ஸ்பெக்டர் மகன் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளன. இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் அவனை கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன். பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரின் மகன் குறித்து வலம் வரும் தகவல்கள்:

சம்பவம்-1

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் பணியில் இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சப்-இன்ஸ்பெக்டரின் மகன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். அதை போக்குவரத்து காவலர் தட்டிக் கேட்க, " நீ யாருடா... என்னை தட்டிக்கேட்க?  நான் ஐஜி மகன்...!" என்று சொல்லிக் கொண்டு, அந்த காவலரின் சட்டையை பிடித்து இழுத்துள்ளார்.
இதை பொதுமக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த தகவல் உயரதிகாரிகளுக்கு தெரிந்து, சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். இதற்குள் சப்-இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்து, அவரது செல்வாக்கால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சம்பவம்-2

திருவள்ளூர் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சப்-இன்ஸ்பெக்டர் மகன் நண்பர்களுடன் சாப்பிடச் சென்றால் பணம் கொடுப்பதில்லையாம். அங்கேயும் ஐ.ஜி. மகன் வசனத்தை பேசுவாராம். இதனால் பயந்து போகும் ஓட்டல் நிர்வாகத்தினர், அவரை ராஜமரியாதையுடன் உபசரித்து அனுப்பி இருக்கிறார்கள்.

சம்பவம்-3

திருவள்ளூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரின் மகனின் நண்பர்கள் மூன்று பேர், ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதை காவலர் ஒருவர் பிடித்து விசாரித்துள்ளார். இந்த தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்கு சென்ற அவர், நான் யார் தெரியுமா என்று வீரவசனம் பேச அந்த காவலர் அமைதியாகி விட்டாராம்.

சம்பவம்-4

திருவள்ளூர் பகுதியில் நடக்கும் பல பிரச்னைகளுக்கு நாட்டாண்மையாக இருந்து பஞ்சாயத்து பேசி வந்துள்ளார். ஊரை சுற்றி வம்பு இழுப்பதே அவனுடைய வேலை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

சப்-இன்ஸ்பெக்டரின் மகனை பாரபட்சமின்றி முறையாக விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வெளியே வரும்.

டென்ஷனான உயரதிகாரி

சப்-இன்ஸ்பெக்டரின் மகனுக்கு திருவள்ளூரில் சொந்தமாக டென்னிஸ் கோர்ட் உள்ளது. அந்த கட்டடமும் அவர்களுக்கு சொந்தமானது. அதோடு சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி காக்களூரில் வார்டு உறுப்பினராக இருந்துள்ளார். அவரது மூத்த மகன் தி.மு.க. பிரமுகர். இந்த செல்வாக்கு எல்லாம் சப்-இன்ஸ்பெக்டரின் மகனை இதுவரை காப்பாற்றி வந்துள்ளது. முதல் முறையாக இந்த சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் சிக்கி இருக்கிறான்.

விசாரணை அதிகாரிகளில் சிலர் காக்கிச் சட்டை பாசத்தில் தலைமறைவாக இருக்கும் அந்த நபரை தேடுவதாக சொல்லி காலம் கடத்தி கொண்டு உள்ளனர். இதற்கிடையில் காதல் ஜோடியை கடத்தியது சப்-இன்ஸ்பெக்டரின் மகன் என்று தெரிந்ததும், டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து பேசிய உயரதிகாரி, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறார். உடனே விசாரணை அதிகாரி இந்த தகவலை சப்-இன்ஸ்பெக்டரிடம் தெரிவிக்க, அவரும் தன்னுடைய மகனை சரண்டராகும்படி சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், கொடுத்த வாக்குறுதியை சப்-இன்ஸ்பெக்டர் நிறைவேற்றவில்லை. இதனால் டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள அந்த உயரதிகாரி டென்ஷனாகி இருக்கிறார்.

இருப்பினும் மதுக்கடை போராட்டம், திருவள்ளூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, நீண்ட நாள் விடுமுறையில் சென்றுள்ள நிலையில், அவருக்குப்பதிலாக விசாரணை அதிகாரி யாரும் நியமிக்கப்படாதது போன்ற காரணங்களால் சப்-இன்ஸ்பெக்டரின் மகனை கைது செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்! 


No comments:

Post a Comment