சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Aug 2015

ஆகஸ்ட் 8: தனித்துவமான நாயகன் ரோஜர் பெடரர் பிறந்த தின சிறப்பு பகிர்வு

சகாப்தங்கள் அடிக்கடி அமைவதில்லை. அப்படி ஒரு தனித்துவமான நாயகன் பெடரர். ரோஜர் பெடரர் என்கிற இந்த மாயப்பெயர் டென்னிஸ் உலகை கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது உற்று நோக்கினால் ஒன்று நன்றாக புரியும். வெற்றியின் உச்சத்தில் இருக்கிறார் அவர் என்று எண்ணப்பட்ட காலத்தில் அவரை உலுக்கி எடுக்கிற எதிராளிகள் வந்தார்கள். கண்ணீர் மல்க தோல்விகள் அவருக்கு தரப்பட்டு இருக்கின்றன. அதைத்தாண்டி மீண்டு வந்து சாதித்தலில் தான் பெடரர் தனித்து சிரிக்கிறார்
சின்னப்பையனாக எக்கச்சக்க விளையாட்டுகள் கால்பந்து,கோல்ப்,அப்புறம் டென்னிஸ். அக்காவை ஏகத்துக்கும் சீண்டுவது,போனில் என்ன பேசுகிறார் அவர் என்று கேட்பது இவையெல்லாம் முக்கியமான பணிகள். டென்னிஸ் ஆடுகளத்துக்கு போனால் வேண்டுமென்றே தவறாக ஷாட் ஆடுவது இளவயது பொழுதுபோக்கு பெடரருக்கு. போரிஸ் பெக்கர் அவரின் ஆதர்சம். நான்கு வயதில் டிவியில் அவர் ஆடுவதை பார்த்து பிரமித்த பெடரர்,இரண்டு முறை அவர் ஸ்டேபானின் கையால் தோற்ற பொழுது தான் உறுதியாக டென்னிஸ் மட்டையை கையில் எடுத்தார். "போரிஸ் நீங்கள் தோற்று இருக்கலாம் ! நான் ஜெயிப்பேன். தோல்விகளில் இருந்து மீண்டு வந்து ஜெயிப்பேன் !" என்று முணுமுணுத்துக்கொண்டு களம் புகுந்தார்.

ஜூனியர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பட்டங்களை விம்பிள்டனில் வென்ற பொழுது யார் இது என்று கவனிக்க ஆரம்பித்தார்கள். பீட் சாம்ப்ராஸ் ரொம்பவும் பிடிக்கும் அவருடன் 2001 இல் போட்டி அடித்த அடியில் அவரை தோற்கடித்து கம்பீரமாக அவருக்கு வணக்கம் சொன்னார் பெடரர். உலகம் நிமிர்ந்து உட்கார்ந்தது.
இரண்டு வருட இடைவெளியில் விம்பிள்டன் அவர் வசமானது. அப்பொழுது தொடங்கிய ஆட்டம் தான், ஏழு விம்பிள்டன்,ஐந்து அமெரிக்க ஓபன்,நான்கு ஆஸ்திரேலியா ஓபன்,ஒரு பிரெஞ்சு ஓபன் என்று மொத்தம் பதினேழு கிராண்ட் ஸ்லாம்கள் உலக சாதனை. கூடவே முன்னூறு வாரத்துக்கு மேல் உலகின் நம்பர் ஒன் வீரராக இருந்தவர் என்பதும் உடைப்பதற்கு அரிதான சாதனை தான்.
ஆடுகளத்தில் ஃபோர்ஹான்ட் என்று வந்து விட்டால் மின்னல் போல கலக்கி எடுப்பார் மனிதர். 2008 இல் அமெரிக்க ஒபனில் மட்டும் வென்ற பொழுது நடாலின் ஆட்டத்தில் பெடரர் காணாமல் போய்விட்டார் என்று தான் எழுதினார்கள். புல் தரையின் தேவன் என்று புகழபட்ட பெடரர் அங்கேயே வீழ்த்தப்பட்டு இருந்தார். கொஞ்சம் அழுகை,எக்கச்சக்க அமைதி கிளம்பிவிட்டார் பெடரர். அடுத்த வருடம் வந்தது விம்பிள்டன்,பிரெஞ்சு ஓபன் இரண்டையும் வென்று அமைதியாக சிரித்தார்.
அடுத்த மூன்று வருடத்தில் எக்கச்சக்க போட்டிகள்,தோல்விகள். பேக்கப் பெடரர் என்று சொல்ல வாயைத்திறந்த பொழுது ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம்,மீண்டும் விம்பிள்டனில் வெற்றி என்று நான் இன்னம் இருக்கிறேன் என்று உலகுக்கு சொன்னார் மனிதர். அவருக்கும்,நடாலுக்கும் இருந்த போட்டி மிக பிரம்மாண்டமானது. எட்டு முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிகளில் சந்தித்து இருக்கிறார்கள் இவர்கள். அதில் ஆறு முறை வெற்றி நடாலுக்கே. ஆனால்,தான் சிறந்தவர் என்பதை நடால் ஏற்றுக்கொண்டது இல்லை. "நான் தான் அதி சிறந்தவன் என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால் அது உண்மையில்லை. நீங்கள் பெடரர் ஆடுவதை பார்க்கவில்லை என்றே நான் கருத வேண்டி இருக்கும் !" என்றார் நடால்
பெடரர் போட்டிகளில் வென்றால் பெரிதாக ஆர்ப்பரிக்க மாட்டார். முதல் போட்டியில் வென்ற பொழுது காட்டும் அதே அமைதியான,மெல்லிய குரலில் தான் பேட்டி இருக்கும். தோற்றால் வென்றவரை மனதார பாராட்டும் உயர்ந்த மனதுக்காரர் அவர்.
பெடரர் ஆடிக்கலக்கியதை வெறும் கோப்பைகளின் மூலம் மட்டும் நீங்கள் கணக்கிட்டு விடக்கூடாது. பல இறுதிப்போட்டிகளுக்கு போவதற்கும் எல்லையற்ற உழைப்பும்,சற்றும் குறையாத தாகமும் தேவை. பெடரரிடம் இருந்து வெற்றியை பறிக்க அப்படி ஒரு பெரும்போராட்டம் நிகழும் பல தருணங்களில்.
பெடரர் எனும் டென்னிஸ் நாயகனைத்தாண்டி அவர் ஒரு இணையிலா மனிதர். பியட்ரிஸ் டிநோகோ என்றொரு பதினேழு வயது பெண். கேன்சரால் இறந்து கொண்டிருந்தாள். பெடரரை சந்திக்க வேண்டும் என்பது என் ஆசை என எழுதிப்போட பிறந்தநாள் அன்று பெடரர் அவளை சந்தித்தார். ஒரு ஹாய் சொல்லிவிட்டு போனால் போதும் என்று சொல்லி இருந்தார்கள், பெடரர் வந்தார்,உள்ளுக்குள் கண்ணீர் முட்டுகிறது. சிரித்துக்கொண்டே அந்த தேவதையிடம் முழுதாக பதினைந்து நிமிடம் பேசுகிறார். ஒரு அணைப்பு,நெற்றியில் ஒரு முத்தம்.\\
பின்னர் அவர் ஆடும் போட்டியை காண கூட்டிப்போகிறார். மதிய உணவுக்கு கூட போகாமல் அவளுக்கு,அவளின் தோழிகளுக்கு கையெழுத்து போட்டு தந்து கொண்டே இருக்கிறார். நான்கு ஸ்நாப்கள்,எக்கச்சக்க சந்தோசம் என்று அந்த பெண்ணை மகிழ்வித்து விட்டு தான் களத்துக்கு போகிறார்.

கத்ரினா புயலா ? ஹைதியில் நிலநடுக்கமா ? தமிழ் நாட்டில் சுனாமியா ? எய்ட்ஸ் நிதி திரட்டலா ? நாங்கள் இருக்கிறோம் என்று சக வீரர்களை ஒருங்கிணைத்து கோடிகளை கொண்டு வந்து கொட்டும் நல்ல மனிதர் அவர். விளையாட்டு வீரன் என்பதை தாண்டி சக மனிதர்களை நேசித்தபடி அவர்களின் கனவுகளை நம்பிக்கைகளை தாங்கி ,மாபெரும் வலிகளில் இருந்து மாறாத புன்னகையோடு வென்று விட்டு எளிமையாக கை உயர்த்தி பெடரர் சிரிக்கிற பொழுது பலபேர் உத்வேகம் பெறுவதை நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பெடரர்


No comments:

Post a Comment